Published : 22 Sep 2016 11:01 AM
Last Updated : 22 Sep 2016 11:01 AM

அசோகமித்திரன் 10

தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராகப் போற்றப்படுபவரான அசோகமித்திரன் (Ashokamitran) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*ஆந்திர மாநிலம், செகந்திராபாத் தில் பிறந்தவர் (1931). இவரது இயற்பெயர் ஜ.தியாகராஜன். தந்தை, ரயில்வே குமாஸ்தா. 1952-ல் தந்தையின் திடீர் மரணத்துக்குப் பின் சென்னை யில் குடியேறினார். ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றினார். 1956களில் எழுதத் தொடங்கினார்.

*1960களின் மத்தியில் ஒருமுறை திடீரென்று எஸ்.எஸ்.வாசன் ‘நீங்கள் எழுத்தாளர்தானே? எதற்காக புத்தகங்கள் எழுதாமல் என்னிடம் வேலை பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டாராம். அதுவே இவர் முழுநேர எழுத்தாளராக மாறக் காரணமாக அமைந்துவிட்டது. ஜெமினி ஸ்டுடியோ அனுபவங்கள் அடிப்படையில் ‘மை இயர்ஸ் வித் பாஸ்’ என்ற ஆங்கில நூலை எழுதினார்.

*1966 முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார். ‘அசோகமித்திரன்’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். சிறுகதைகள், நாவல் கள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதினார். ‘டெக்கான் ஹெரால்டு’, ‘இல்லஸ்ரேட் வீக்லி’ உள்ளிட்ட பத்திரிகைகளிலும் எழுதிவந்தார்.

* இவரது படைப்புகள் பலவும் பிற இந்திய மொழிகள், ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

*இவரது கதை எழுதும் பாணி தனித்துவம் வாய்ந்தது. உணர்ச்சி வசப்பட்ட நடையைத் தவிர்த்து எதையும் தணிந்த குரலில், தாழ்ந்த சுருதியில், அதிராமல் சொல்லிவிடுவார். ஆனால், இவரது எழுத்து வாசகரிடத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கும்.

* இவரது கதைகள் பெரும்பாலும் சென்னை அல்லது செகந்த ராபாத்தைக் களமாகக் கொண்டிருக்கும். திரைப்பட நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘கரைந்த நிழல்கள்’ என்னும் நாவலை எழுதியிருக்கிறார். சாதாரணமான கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மூலம் அசாதாரணமான வாசிப்பு அனுபவத்தைச் சாத்தியப்படுத்துபவர் எனப் போற்றப்படுகிறார்.

* கணையாழியில் ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அப்போது நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அச்சுக் கோர்ப்பவர்கள் சிரமப்படக் கூடாது என்பற்காக புரியாத கையெழுத்துப் பிரதிகளை அப்படியே கொடுக்காமல் தானே மீண்டும் தெளிவாக எழுதிக் கொடுப்பாராம்.

*செகந்தராபாத்தைப் பின்னணியாகக் கொண்ட இவரது ‘18வது அட்சக்கோடு’ என்னும் நாவல், தேசப் பிரிவினை சமயத்தில் அங்கு இந்து - முஸ்லீம் இடையே நடந்த கலவரங்களை மையமாகக் கொண்டது. 8 நாவல்கள், 250 சிறுகதைகள், நூற்றுக் கணக்கான கட்டுரைகள், ஏராளமான மொழிபெயர்ப்புகள், பத்தி எழுத்து எனப் படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

*’'ஃபோர்டீன் இயர்ஸ் வித் பாஸ்’, ‘தி கோஸ்ட் ஆஃப் மீனம்பாக்கம்’, ‘ஸ்டில் ப்ளீடிங் ஃபிரம் தி வூண்ட்’ உள்ளிட்ட இவரது ஆங்கில நூல்கள் மிகவும் பிரபலம். ஆங்கில நாளிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘நாடகத்தின் முடிவு’, ‘வாழ்விலே ஒரு முறை’, ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’, ‘பிரயாணம்’, ‘தண்ணீர்’, ‘இன்று’, ‘மானசரோவர்’, ‘ஒற்றன்’, ‘ஆகாசத் தாமரை’, ‘விடுதலை’ முதலான இவரது பல படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.

* சாகித்ய அகாடமி விருது, டால்மியா மத நல்லிணக்க விருது, தேவன் விருது, திரு.வி.க. விருது, சாரல், இலக்கியச் சிந்தனை, அக்ஷரா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். நோபல் பரிசு பெறத்தக்க எழுத்தாளர் என விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறார். தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கிவரும் அசோகமித்திரன் இன்று 85-வது வயதை நிறைவு செய்கிறார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x