Published : 19 Sep 2018 02:30 PM
Last Updated : 19 Sep 2018 02:30 PM

‘அக்கா ஒரு நிமிஷம்..!’: எம்ஜிஆர் முதல் தமிழிசை வரை - சர்ச்சை சம்பவங்கள்

‘அக்கா ஒரு நிமிஷம். பெட்ரோல் விலை தினமும் உயருகிறது!?’ நெட்டிசன்கள் உபயத்தால் இந்த வாக்கியம் இன்றைக்கு ரஜினி பேசாமலேயே பஞ்ச் வசனமாகியிருக்கிறது. 16-ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் கலந்துகொண்ட பாஜக தலைவர் தமிழிசை நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், ‘அக்கா ஒரு நிமிஷம். பெட்ரோல் விலை தினமும் உயருகிறதே!’ என ஆட்டோ டிரைவர் ஒருவர் கேள்வி எழுப்ப, அவர் கட்சிக்காரர்களால் விரட்டப்பட்டு, தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, ‘அப்படி எதுவுமே நடக்கவில்லை!’ என சொன்ன தமிழிசை, பாஜகவினரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கதிரின் வீட்டுக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்று அவர் குடும்பத்துக்கு இனிப்புகள் வழங்கி, ‘நான் உங்கள் கேள்விக்கு சிரிக்கவில்லை. அதே கேள்வியைக் கேட்ட மீடியாக்களுக்குத்தான் பதிலளித்தேன்!’என்றெல்லாம் ஆட்டோக்காரருக்கு சுய விளக்கமும் கொடுத்தார். ஆட்டோக்காரரும் நான் தவறாக எதுவும் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.

ஏற்கெனவே விமான பயணத்தில் தூத்துக்குடி மாணவி சோபியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை, தன்னை நோக்கி ‘பாசிச பாஜக ஒழிக!’ என கோஷமிட்டதாக புகார் கூறி, அது பரபரப்பானது. சோபியாவும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த நிலையில் சோபியாவை தீவிரவாதி என்கிற லெவலுக்கு விமர்சித்தனர் பாஜகவினர். அதுவே ஆட்டோக்காரர் விஷயத்தில், ‘இவர் வாஜ்பாய் காலத்திலேயே நமக்காக தேர்தல் வேலை பார்த்தவர்!’ என சொந்தம் கொண்டாடியுள்ளனர்.

விமானத்தில் வந்திறங்கிய சோபியாவின் பின்னணியில் என்ன நடந்தது, ஆட்டோக்காரருக்கு பின்னணியில் உள்ள ஆட்டோ சங்க நிர்வாகிகள் மத்தியில் என்ன நடந்தது? ஒருவருக்கு கைது நடவடிக்கை, இன்னொருவருக்கு இனிப்பு வழங்கல் என்பதெல்லாம் எந்த மாதிரியான அரசியல் என்பதெல்லாம் கூட ஒரு பக்கம் விவாதப்பொருளாகியிருக்கிறது. இருந்தாலும், பொது இடங்களில் பொது மக்கள், பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் அரசியல் தலைவர்களிடம் கேள்வி கேட்கக் கூடாதா? தலைவர்கள் என்றால் கை கட்டி, வாய் பொத்தி தொண்டர்களோ, பொதுமக்களோ, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டுமா?’ என்ற கேள்விகளும் புறப்படத்தான் செய்கிறது.

அதே சமயம், ‘பொது இடங்களில் பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் தலைவர்களிடம் பொது இடத்தில் ஆளாளுக்கு கேள்வி கேட்டு, வாதம் புரிந்து, கோஷமிட்டால் சமூக நல்லிணக்கம், அரசியல் நல்லிணக்கம் என்னாவது?’ என்றும், ‘திரும்பின பக்கமெல்லாம் செல்போன் கேமரா, சிசிடிவி கேமரா என இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அரசியல் தலைவர்களும் கட்டுப்பாட்டுடன், தன்னடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்!’ என்றும் இருவேறு விதமான கருத்துகளும் வந்த வண்ணம் உள்ளன. இதில் எது சரி? இது போன்ற சம்பவங்கள் என்ன தமிழிசை அரசியல் தலைவர் ஆன பிறகுதான் நடக்கிறதா என்ன? அதுதான் இல்லை என்கிறது வரலாறு.

அது எம்ஜிஆர் காலம். கோவை ரயில் நிலைய சாலையில் அவரை வரவேற்க மக்கள் வெள்ளம். அந்தக் கூட்டத்தில் ஒரு கல்லூரி மாணவன் எம்ஜிஆருக்கு மாலை போட துடித்துக் கொண்டிருந்தான். எம்ஜிஆரை எட்ட நெருங்கியவன், தன் கையில் இருந்த மாலையை எம்ஜிஆரின் கழுத்தை நோக்கி வீசிவிட்டான். அது குறி தவறி அவர் தொப்பியைக் கழற்றி விட்டது. அவ்வளவுதான் எம்ஜிஆரின் கன்னம் சிவந்து விட்டது. கோபத்தில் அந்த மாணவனின் கன்னத்தில் அடித்தாரா? செல்லமாகத் தட்டினாரா என்பதெல்லாம் இப்போது காலம் கடந்த சமாச்சாரம். ஆனால் அந்தக் காட்சியை போட்டோகிராபர் படம் எடுத்து விட்டார். அந்தப் படத்தை எடுத்தவர் எதிர்க்கட்சி பத்திரிகை போட்டோகிராபர் என்பதை உணர்ந்து அன்றிரவே அந்தப் பத்திரிகை அலுவலகம் கட்சிக்கார்களால் தாக்கப்பட்டதும், அது அந்தக் காலத்தில் பரபர விஷயமானதும் பழைய எம்ஜிஆர் விசுவாசிகளுக்குத் தெரியும்.

இன்றைக்கு பத்தாண்டுகள் இருக்கும். கோவையில் ஒரு பிரபல சாமியாரின் பிரஸ் மீட். அந்த அரங்கில் பத்திரிகையாளர்களைத் தவிர, அந்த சாமியாரின் சீடர்களும் நிறைந்திருந்தனர். அந்த சாமியாரை நோக்கி ஒரு பத்திரிகை நிருபர், ‘உங்க மேல ஒரு கஞ்சா கேஸ் இருந்ததே. அது என்ன ஆச்சு?’ எனக் கேட்டு விட்டார். அதற்கு சாமியார் பதில் சொல்லவில்லை. திரும்பவும் அந்தக் கேள்வி அந்த நிருபர் வாயில் வர, சாமியார் வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்லுவது போல் பாவ்லா காட்டியதோடு, தம் சீடர்களுக்கு கண்களால் ஒரு சிக்னல் கொடுத்துவிட்டார். சீடர்கள் நைசாக அந்த நிருபரை நெருங்கினார்கள். ஏதோ சொல்லி அவரை அழைத்தார்கள். அந்த நிருபர் வெளியே சென்றதுதான் தெரியும்.

அந்த பிரஸ் மீட் முடிந்து அனைவரும் சென்ற பின்பு முகம், மூக்கு, வாய் எல்லாம் ரத்தம் கன்றி வீங்கிய நிலையில் அந்த நிருபர் தனக்கு நேர்ந்த கொடுமையை சக பத்திரிகையாளர்களிடம் சொல்லி அழுதார். ‘அந்த சாமியார்களின் சீடர்கள் என்னை கும்மு, கும்முன்னு கும்மீட்டாங்க கண்ணு!’ என்று சொன்னவர் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையொட்டி பின்னர் சில பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள், வழக்குரைஞர்கள் சாமியார் தரப்பில் பேசினார்கள். இறுதியில் ஏதோ ஒரு தொகை பாதிக்கப்பட்ட நிருபருக்கும், பேச்சுவார்த்தை நடத்தியவர்களுக்கும் கொடுக்கப்பட்டு இந்த விவகாரம் பைசல் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு அந்த நிருபர் இறந்து போனார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது கட்சி நிர்வாகியையே கன்னத்தில் அறைந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவை புகைப்படங்களாக, வீடியோக்களாக வெளிவர, ‘நான் செல்லமாக தொண்டர்களை கன்னத்தில் தட்டுவது வழக்கம். அது என் தொண்டர்களுக்கும் தெரியும்!’ என சொல்லி தன்னிடம் அடிவாங்கியவரை அந்தத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை கூடவே வேனில் வைத்து சுற்றிக் கொண்டிருப்பதை தமிழகம் கண்டது. அதைத் தொடர்ந்தும் விஜயகாந்த் தம் தொண்டர்களைக் கன்னத்தில் தட்டும் சம்பவங்கள் பொது இடங்களில் நடந்தேறி விமர்சனத்திற்கு உள்ளானது. சில இடங்களில் ‘கேப்டன் என்னையும் கன்னத்தில் தட்டுங்க கேப்டன்’ என சில கட்சித் தொண்டர்கள் கேட்கும் அளவு அது காமெடி ஆனது.

திமுகவில் மட்டும் இது இல்லாமலா? மூன்றாண்டுகளுக்கு முன் நமக்கு நாமே என்ற பெயரில் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்த மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டம் கூடலூரில் தன்னுடைய அனுமதியின்றி தன் செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொள்ள விளைந்த ஆட்டோ டிரைவர் ஒருவரைக் கன்னத்தில் அடித்ததாக வைரலானது. அதையடுத்து அதை வைத்து அதிமுக அரசியல் செய்ய, அந்த ஆட்டோ டிரைவரை ஸ்டாலினிடம் அழைத்து வந்தனர் திமுகவினர். அவரை தன்னுடன் இணைத்து செல்ஃபி எடுக்க அனுமதித்த ஸ்டாலின், ‘என்னை ஸ்டாலின் அடிக்கவில்லை!’ என்று ஆட்டோ டிரைவர் கூறும் அளவுக்கு செய்தி மாறியது.

கோவை கோனியம்மன் கோயில் வாசலில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம். பாஜகவைச் சேர்ந்த பெண் அரசியல் தலைவர் ஒருவரிடம் காதல் மொழி ஒன்றை வீசினார் தொண்டர் ஒருவர். பொது இடத்தில் அந்த அநாகரிகத்தை கண்டும் காணாமல் நாகரிகமாக அந்தத் தலைவர் கடந்து போக, அப்போதும் விடாமல் அதே வார்த்தையை அந்தத் தொண்டர் வீச, முகம் சிவந்து போனார் அந்தப் பெண்மணி. இத்தனைக்கும் அந்தப் பெண்மணி திருமணமானவர். வளர்ந்த பிள்ளைகளும் உள்ளனர். இதுவும் செய்தியானது.

அந்த காதல் மொழி வீசியவர் மனம் நலம் குன்றியவர் என்று ஒரு தரப்பு சொல்ல, இல்லையில்லை அவர் கட்சியின் முன்னாள் நிர்வாகி, குறிப்பிட்ட பெண் தலைவரின் தீவிர ரசிகர் என்றெல்லாம் பொழிப்புரைகள் வழங்கப்பட்டன. என்றாலும் பொது வாழ்க்கைக்கு வரும் ஒரு பெண், அவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்றாலும், பொது இடத்தில் இப்படி ஒரு ஆண் நடந்து கொண்டால் குடும்பப் பெண்மணிகள் எப்படி அரசியலுக்கு வருவர் என்றெல்லாம் பெண்ணியவாதிகள் கொதித்து பேட்டிகள் கொடுத்தனர். அதுவும் பின்னர் டேக் இட் ஈஸி என்ற பாலிசியில் காலம் கடந்து மறைந்தது.

இப்போது தமிழிசையின் முறை. கடந்த 10 ஆண்டுகளில் சமூக வலைதளங்களின் பெருக்கம், அவற்றின் வேக வெளிப்பாடும் ஏதோ இப்போது மட்டுமே இந்த சர்ச்சைகள் நடப்பது போன்ற பிரம்மாண்டத்தை அவை கொடுத்து விடுகின்றன.

40 ஆண்டுகால பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு இதழியலாளர் தமிழிசை VS சோபியா குறித்த தன் முகநூல் பதிவில் சொல்கிறார்: ‘இப்படியான சம்பவங்கள் சமூக நல்லிணக்கத்தைக் குலைப்பதாகும். தமிழிசை என்றில்லை, ஸ்டாலின், ராகுல் என வரும் அரசியல் தலைவர்கள் அனைவருமே ரயிலிலோ, விமானத்திலோ, பொதுவெளியிலோ வரும் நேரங்களில் எல்லாம் அவர்களுக்கு அரசியல் எதிர்நிலை உள்ளவர்கள் அப்படி கோஷமிட்டால் நிலைமை என்னவாகும்?’

இப்போது தமிழிசை VS ஆட்டோ டிரைவருக்கான விஷயத்தை திமுக மூத்த நிர்வாகி துரைமுருகன் இப்படி கிண்டலடிக்கிறார்:

‘உலகத்தில் பெரிய எலிசபெத் ராணியா தமிழிசை? இது ஜனநாயக நாடு. யாரும் எதையும் கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். சீட்டு வந்துகொண்டே இருக்கும். பதில் சொல்லத்தான் வேண்டும். எல்லாம் பொதுவுடைமை என்று சொல்கிறாயே எனப் பெரியாரை ஆத்திரமூட்டும் விதத்தில் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்குத் தக்க பதில் கூறினார் பெரியார். ஆகையால் ஒருவர் கேள்வி கேட்பதே தவறு, அதற்குப் பயந்துகொண்டு அவரை அடிப்பது, அவர் மீது வழக்குபோடுவது, சிறைக்குள் தள்ளுவது என்ன நடைமுறை என்று தெரியவில்லை. ஆகையால் தமிழிசை இன்னும் கொஞ்சம் வளர வேண்டும் அரசியலில். அவர் இன்னும் குழந்தையாகவே உள்ளார். சின்னக் குழந்தையிலிருந்து எனக்கு தமிழிசையைத் தெரியும். இன்னும் குழந்தையாகவே அவர் இருக்கிறார்!’

இந்த நிகழ்வுகள் மீதான சாதக, பாதக கருத்துகளிலிருந்து என்னதான் தெரியவருகிறது. தலைவர்கள் ஆனாலும், தொண்டர்கள் ஆனாலும், வேறு துறை சார்ந்தவர்களும் ‘நாகாக்க!’ என்பதைத்தான்.

அரசியல் என்று வரும்போது அதற்கு எதிர்நிலையாளர்கள் தலைவர்களை வெவ்வேறு நிலைகளில், சூழ்நிலைகளில் எதிர்ப்பது என்பது வழக்கம். அதுவே அவர்களுக்குள் இருக்கும் போர்க்குணம், அல்லது போராட்டக்குணங்களை வெளிப்படுத்துகிறது. இந்த போர்க்குணங்களும், போராட்டக் குணங்களும்தான் தொடர்ந்து அரசியல் கட்டமைப்பை, சமூகக் கட்டமைப்பை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. இப்படியில்லாமல் தனக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும் போது சமூக நல்லிணக்கம் பேணுகிறேன் பேர் வழி என்று எந்த இடத்திலும் போர்க்குணத்தை வெளிப்படுத்தா விட்டாலும் பரவாயில்லை, போராட்டக்குணத்தையும் வெளிப்படுத்தாது விட்டால் இந்த சமூகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகராது.

அதிலும் அரசியல் நகர்வு என்பது வேக வேகமாக மாற்றங்கள் பெரும்போதுதான் சமூக மாற்றமும் மாறிக் கொண்டே இருக்கும். சமூக வலைதளங்களின் வேகமான வளர்ச்சிக்கு தக்கபடியான தன்மையை அனைவருமே வளர்த்துக்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் தலைவர்கள், பத்திரிகையாளர் சந்திப்பு என்பது இந்த இரு தரப்புக்கான கேள்வி- பதிலாக, உரையாடலாக நாகரிகமாகவே நடக்கும். அதேபோல் எந்த ஒரு பொது நிகழ்ச்சி, தலைவர்கள் வருகை, வரவேற்பு என்றாலும் பத்திரிகையாளர்கள், பத்திரிகை புகைப்படக்காரர்கள் என இனம் பிரித்துப் பார்க்க முடியும்.

இப்போதெல்லாம் அப்படியில்லை. ஒரு பொதுக்கூட்டம், பொது வரவேற்பு, பொது நிகழ்வு எதுவானாலும் பத்திரிகையாளர்கள் கேமராவை நீட்டும் முன் அவர்களுக்கு முன்னே நூற்றுக்கணக்கான செல்போன்கள் பிளாஷ் அடிக்கின்றன. பல பத்திரிகை நிறுவனங்கள், மீடியாக்கள் இன்றைக்கு கேமராவை விடுத்து செல்போன் போட்டோ, செல்போன் வீடியோக்களுக்கு தாவி விட்டன என்பதால் இவர்களில் யார் பத்திரிகையாளர், யார் பொது மக்கள் என இனம் பிரிக்க முடிவதில்லை.

அதேபோல் பொது இடங்களில் எங்கே பார்த்தாலும் மீடியாக்கள் மைக்கை நீட்டுவதும், லோகோக்கள் அடங்கிய மைக்குகளைப் பார்த்ததும் அதே இடத்தில் மீடியா மோகத்தால் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேட்டிகளை அள்ளி வீசுவதும் வாடிக்கையாகி வருகிறது. அப்போது கேள்வி கேட்பவர் மீடியாவா, பொதுமக்களா, அடிமட்டத் தொண்டனா என்றே புரிபடாத நிலை ஏற்படுகிறது. இவ்வளவு ஏன்? முறையாக ஏற்பாடு செய்யப்படும் பிரஸ் மீட்டில் கூட பத்திரிகை நிருபர்கள் தவிர்த்த தொண்டர்கள் படையும், பேட்டி கொடுப்பவரின் ஆதரவாளர்கள் தலைகளுமே ஏராளமாய் நீளுகின்றன.

ஒரு குறிப்பிட்ட நிறுவன பத்திரிகை நிருபர் கேள்வி கேட்கும்போது கண்டிப்பாக அதில் வரைமுறை இருக்கும். இருந்தாக வேண்டும். இல்லாமல் அது கேலிப்பொருளானால் சம்பந்தப்பட்ட பத்திரிகை நிறுவனம் அந்த நிருபருக்குத் தகுந்த பாடம் புகட்டும். ஆனால் அதே பத்திரிகையாளர் சந்திப்பில் ஏதாவது ஒரு மிஸ்டர் பொதுஜனம், பொறுப்பில்லாத தனத்தில் கேள்விகள் கேட்டுப் பிரச்சனையாகி விட்டால் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்பதை பொது ஜனத்திற்கு உணர்த்த முடியாது. தலைவர்கள் உணரத்தான் வேண்டும்.

குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட சூழலில், குறிப்பிட்ட உபதலைவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு, முறையான பத்திரிகையாளர்களை இனம் கண்டு பங்கேற்கச் செய்து பேட்டிகளை கொடுத்து செய்திகளை வெளியிடுவதால் மட்டுமே இந்தப் பிரச்சினைகளை ஓரளவு தவிர்க்க முடியும். இல்லாவிட்டால் இந்த போக்கு அங்கிங்கெணாதபடி அதிகரிப்பதை தவிர்க்க முடியாது.

பொதுவாகவே தொண்டர்கள் என்பவர்கள் உணர்ச்சி வயப்பட்டவர்களாகவே இருப்பர். அவர்களுக்கானவை பொதுக்கூட்டங்கள் என்பதையும் தாண்டி, அவர்களுக்கான சந்திப்புகளை தனித்தனியே நடத்தி கலந்துரையாட வேண்டும். அதேபோல் தன் தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். பொதுவெளியில் இப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் (செல்போன் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கவும், கேள்விகள் கேட்பதை நிறுத்தவும்) என்பதை பொது அஜெண்டாகவே கட்சி நிர்வாகிகள் மூலம் கொண்டு செல்ல வேண்டும். அந்த கட்டுப்பாடு தேமுதிக தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் கொண்டு சென்றிருந்தார் ( சட்டப்பேரவையில் நாக்கை துருத்தி ஜெயலலிதாவைப் பார்த்து ஆவேசமாகப் பேசியது, தொண்டரை கன்னத்தில் அடித்தது என அவரே அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டதுதான் பொதுவெளியில் பிரச்சனையானது). இப்போது கமல்ஹாசன் மக்கள் நல மையத்தின் மூலம் கொண்டு செல்ல முயற்சிக்கிறார். தொண்டர்களை அப்படி அறிவுப்பூர்வமாக கொண்டு வருவது கஷ்டம் என்றாலும் கூட, அவர்கள் மூலமும், தன் மூலமும் சமூக வலைதளங்களுக்கும், மீடியாக்களுக்கும் தானும், தனது கட்சியும் தீனியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் அதனதன் தலைவர்களுக்கே உள்ளது.

சரி, கட்சி சாராத எதிரணியினர் வேண்டுமென்றே பொதுவெளியில் வம்புக்கு இழுக்கும்போது, அங்கே ரசாபாசமாக ஏதும் நடந்து கொள்ளாமல் அதை சகித்துக் கொண்டு சென்றே ஆக வேண்டும். அங்கே நம் சகிப்பின்மையை தூண்டுவதற்காகவேதான் அவர்கள் வருகிறார்கள். அதை ஒரு தலைவர் வெளிப்படுத்தி விட்டால் அதுவே மீடியாக்களில் பிரதானமாகி வெறும் வாயை மென்றவர்களுக்கு அவலாகி விடும். இந்தக் கண்ணியம் கூட குறிப்பிட்ட தலைவர்கள் கையிலேயே இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x