Published : 04 Sep 2014 12:00 AM
Last Updated : 04 Sep 2014 12:00 AM
இந்த ஆண்டில் அமெரிக்காவின் முதல் படை பிரிட்டனைச் சென்றடைந்தது. ஜூன் மாதம், ஜெர்மனியின் ஃபீல்டு மார்ஷல் இர்வின் ரோமெல், லிபியாவின் டோப்ரூக் துறைமுகத்தைக் கைப்பற்றினார்.
ஜெர்மனியின் நான்காவது பெரிய நகரமான கலோன் மீது மே 30, 31-ம் தேதிகளில் நேச நாடுகள், முதல்முறையாக ‘ஆயிரம் குண்டுகள்’ விமானத் தாக்குதலை நடத்தின. பதிலுக்கு பிரிட்டனின் தேவாலய நகரங்கள் மீது ஜெர்மனி தாக்குதல் நடத்தியது.
பசிபிக் பகுதியில், ஜப்பான் தொடர்ந்து முன்னேறி வந்தது. போர்னியோ, ஜாவா, சுமத்ரா ஆகிய தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது. அசைக்க முடியாத பலம் கொண்ட பிரிட்டனின் கோட்டையாக விளங்கிய சிங்கப்பூரையும் ஜப்பான் தாக்கியது. பிப்ரவரி 8 முதல் 15 வரை நடந்த சண்டையில் ஜப்பான் வென்றது. 25,000-க்கும் மேற்பட்ட பிரிட்டன் வீரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
ஆனால், பேர்ல் ஹார்பர் தாக்குதலால் ஜப்பான் மீது வெறிகொண்டிருந்த அமெரிக்கா, ஜப்பானின் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கியது. ஜூன் 4 முதல் 7 வரை வட பசிபிக் கடல் பகுதியில் உள்ள மிட்வே தீவு அருகே நடந்த ‘மிட்வே சண்டை’ யில் ஜப்பானின் நான்கு பெரிய போர்க் கப்பல்களை அமெரிக்கக் கப்பற்படை விமானங்கள் தகர்த்தன. அந்தச் சம்பவம் பசிபிக் போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனிக்குத் தோல்வி மேல் தோல்வி கிடைத்தது. ஃபீல்டு மார்ஷல் பெர்னாட் மான்ட்கோமரி தலைமையில் எகிப்தின் அல் அலாமீன் நகரில் நடந்த சண்டையில் ஜெர்மனியை பிரிட்டன் வென்றது. அதே போல் ரஷ்யாவின் ஸ்டாலின்கிராடில் நடந்த சண்டையில், ஜெர்மனிக்கு ரஷ்ய வீரர்கள் கடும் பதிலடி தந்தனர். இந்த ஆண்டில்தான் நாஜிப் படைகள் யூத மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்ற செய்தி நேச நாடுகளுக்கு எட்டியது. இதற்குப் பழிக்குப் பழி வாங்கப்படும் என்று அமெரிக்கா உறுதியளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT