Published : 21 Sep 2014 12:18 PM
Last Updated : 21 Sep 2014 12:18 PM
எழுபதுகளின் இறுதிவரை, கட்டைவண்டி வைத்திருப்பது என்பது மிகப் பெரிய கவுரவமாகக் கருதப்பட்டது. 1977-ல் முதன்முதலில் செத்தக்கட்டு சீனுவாசன்தான் வட ஆற்காடு மாவட்டத்துக்கு போய் அலைந்து திரிந்து 1,000 ரூபாய் முதல் போட்டு கட்டை வண்டி வாங்கிவந்தார். அதை இழுக்கத் தோதாக 150 ரூபாயில் ஒரு ஜோடி மொட்டை மாடுகளும் வாங்கினார். இரண்டையும் ஊருக்குள் ஓட்டிவந்த அழகை இன்னமும் மறக்காமல் சொல்லி சிலாகிக்கிறது சீர்காழி வட்டத்தில் உள்ள நல்லூர் கிராமம்.
1,000 ரூபாய் முதல் போட்டு வாங்கிவந்த வண்டியைச் சும்மா வைத்திருக்க முடியுமா? அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களெல்லாம் பெட்டிக்கடை வைத்திருக்க, இவர் மட்டும் தொடுவாய், கொட்டாய்மேடு என்று கடற்கரையோரக் கிராமங்களுக்குப் போய், சவுக்கு மரத்தில் கழிக்கப்படும் தழைகளை (அதுதான் செத்தக்கட்டு) கட்டுக் கட்டாக வாங்கி வண்டியில் ஏற்றிவந்து, ஒரு கட்டு காலணா விலைக்கு விற்றார். செத்தகட்டு சீனுவாசன் கட்டை வண்டி வாங்கிவந்து நிறைய சம்பாதிப்பதைப் பார்த்து, கோவிந்தராசுவும் ‘கடன உடன’ வாங்கி ஒரு கட்டை வண்டி வாங்கினார்.
வாழ்க்கையின் வாகனம்
அதன் பிறகு ஊரில் ஒவ்வொருவராகக் கட்டை வண்டி வாங்க, 1980-களில் இருபதுக்கும் குறையாத கட்டை வண்டிகள் ஊருக்குள் வலம்வந்தன. வயலுக்கு எரு அடிப்பது, நெல்மூட்டைகள் ஏற்றுவது, கொள்ளிடம் கடைத்தெருவுக்கும் சினிமாவுக்கும் போவது, கல்யாணத்துக்குப் பெண் அழைப்பது, புதுமணத் தம்பதிகளை ரயிலுக்கு ஏற்றிவிடப்போவது என்று எல்லாத் தருணங்களிலும் கட்டை வண்டிகள் பயனளித்தன. இப்படியான காலகட்டத்தில்தான் ரங்கசாமி வீட்டுக்கு அந்த டயர் வண்டி வந்துசேர்ந்தது.
மரச்சக்கரம் இல்லை. அதற்கு மேல் போடப்பட்டும் இரும்புக் கட்டு இல்லை. மண்ணை அரைத்துக்கொண்டு தடம் பதிக்கும் அதிக பாரம் இல்லை. மிக மெதுவாக ஊர்ந்து செல்வதில்லை. வண்டியை ஆள்வைத்துச் சாய்த்து சக்கரத்துக்கு வாரம் ஒரு முறை மசி போட வேண்டிய அவசியமில்லை. இதெல்லாம் இல்லாமல் ஒரு வண்டி அதுவும் டயர் போட்ட வண்டி ஒன்று வந்து நின்றதை அதிசயமாகப் பார்த்தது ஊர்.
செத்தக்கட்டு சீனுவாசன் போன்ற வண்டிக்காரர்கள் வந்து, கொட்டாயில் நிறுத்தி வைத்திருந்த டயர் வண்டியை சுற்றிச்சுற்றிப் பார்த்தார்கள். வண்டியையும் மாட்டையும் பூட்டி ஊரை ஒரு சுற்று சுற்றிவந்தார்கள். அதற்குள் என் சோட்டு சிறுவர்களுக்கும் இந்த சேதி எட்டியிருந்தது. எல்லோரும் ஓடி வண்டியில் ஏறிக்கொண்டோம். வண்டி அலுங்காமல் குலுங்காமல் ஓடும் அழகைக் கண்டு ஒரே ஆரவாரம்தான். அதில் மிரண்டுபோன மாடு இன்னும் வேகமாக ஓட எங்களின் ஆரவாரம் இரண்டு மடங்கானது. மாடு தறிகெட்டு ஓடுவதைப் பார்த்து, தலையாரி பெருமாள் ஒடிவந்து வண்டியை மறித்து நிறுத்தினார். நாங்களும் பத்திரமாக இறங்கி வீட்டை நோக்கி ஓடினோம்.
டயர் வண்டி வந்தது ஊரில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ‘நாமளும் ஒரு டயர் வண்டி வாங்கிடணும்’ என்ற எண்ணம் ஒவ்வொரு மிராசுதாருக்கும் வந்தது. மற்றவர்களும் உடனடியாக டயர் வண்டிகளையும் 1,000 ரூபாயில் மணப்பாறை மாடுகளையும் வாங்கி வந்து ஊருக்குள் வெள்ளோட்டம் விட்டார்கள். யார் வண்டி வாங்கினாலும் எங்களுக்கென்ன வந்தது. அதில் ஏறிக்கொண்டு ஊரை வலம்வருவதில் மும்முரமாக இருப்போம். டயர் வண்டி வாங்கும் கலாச்சாரம் கொஞ்சம்கொஞ்சமாகப் பரவி மிராசுதார் மட்டும் இல்லாமல் கொஞ்சம் பெரிய விவசாயிகளும் வண்டி வாங்கினார்கள்.
நாகரிகம் அறிஞ்ச வண்டி!
டயர் வண்டி வாங்குவது என்பதைவிடச் செய்வது என்று சொல்வதுதான் பொருத்தம். டயர் வண்டி செய்வதில் மகாராஜபுரம் கைப்புள்ள ஆசாரிதான் எல்லோருக்கும் ஆசான். அவர் செய்தால்தான் வண்டிக்கே பெருமை. காரணம் அவர் செய்யும் வண்டிகளில் முன்பாரம், பின்பாரம் எல்லாம் இல்லாமல் நுகத்தடியை ஒரு சிறுவன்கூட தூக்கி விட முடியும். அவ்வளவு துல்லியமாகச் செய்திருப்பார் கைப்புள்ள. வண்டிக்கு அப்போது ஆசாரி கூலி உட்பட 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய்வரை செலவாகும்.
அவரைத் தவிர பழையபாளையத்தில் வைத்தியநாதன், மாங்கனாம்பட்டில் மகாலிங்கம் என்ற இரண்டு ஆசாரிகளும் டயர் வண்டி செய்வார்கள். இப்படி ஊருக்குள் டயர் வண்டிகள் அதிகமானதும் கட்டை வண்டிகளின் ஆதிக்கம் மெல்ல மெல்லக் குறைந்தது. அந்த வண்டி வைத்திருந்தவர்களும் மெல்ல மெல்ல டயர் வண்டிக்கு மாறினார்கள். மாறினாலும் அதில் உள்ள சிரமங்களையும் அவர்கள் அனுபவித்தார்கள்.
மொட்டைமாடு பூட்டிய வண்டி இறக்கத்தில் இறங்கும்போது மாடுகள் கழட்டிக்கொண்டுவிட வண்டி மட்டும் தனியே ஓடி நுகத்தடி கீழே விழுந்து கிடக்கும். அதில் உடைந்துபோகும் நுகத்தடியை மாற்ற திரும்பவும் ஆசாரி வீட்டில் கிடையாய்க் கிடக்க வேண்டும். சில பேர் வண்டியின் பாரம் தெரியாமல் மாடு பூட்ட தூக்கும்போது வண்டி அப்படியே பின்னால் குடைசாய்ந்து அதில் ஏற்றப்பட்டுள்ள மூட்டைகள் முழுவதும் கீழே சரிந்துவிடுவதும் உண்டு. இப்படிச் சங்கடங்கள் பல இருந்தாலும் டயர் வண்டியின் சந்தோஷம் அளப்பரியதாக இருந்தது.
அழியாத தடங்கள்
இப்படி எங்கள் கிராமப் பகுதிகளின் போக்குவரத்தை நிர்ணயித்த டயர் வண்டிகள் 1990 வரை சாலைகளை நிறைத்திருந்தன. அதற்குப் பிறகு டிராக்டர்கள் அந்த இடத்தைப் பிடித்ததும், டயர் வண்டிகள் மெல்ல மெல்லக் குறைந்துபோயின. ‘குட்டி யானை’ என்று அழைக்கப்படும் டாட்டா ஏஸ் வகை வாகனங்களின் வருகைக்குப் பின் முற்றிலுமாகச் சாலைகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது டயர் வண்டி.
எனினும், இன்றும் ஒருசில விவசாயிகளின் வீட்டில், தான் சென்ற தடங்களை நினைத்தபடி ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது டயர்வண்டி. கட்டை வண்டியோ எங்கள் நினைவில் மட்டுமே ‘கடக் முடக்’ என்று ஓடிக்கொண்டிருக்கிறது.
- கரு. முத்து, தொடர்புக்கு : muthu.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT