Published : 29 Mar 2018 01:41 PM
Last Updated : 29 Mar 2018 01:41 PM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் ’ஸ்கீம்’ என்ற வார்த்தையை வைத்து மத்திய அரசு விளையாடி வருகிறது. இன்று இறுதி நாள் என்பதால் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்ய போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசுகள் எப்போதுமே தங்களது வாக்கு வங்கி நலனையே எண்ணத்தில் கொண்டு செயல்பட்டதன் விளைவே இன்றுவரை இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என்று கூறலாம்.
பல்வேறு போராட்டங்கள், பல முறை நீதிமன்றத்தில் முறையீடு என பல கட்டங்களை கடந்த பின்னரும் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்த பின்னரும் காவிரி விவகாரத்தில் ஓட்டு அரசியல் முன்னிற்பது வேதனையிலும் வேதனை.
நிதி வருவாய், ஜிஎஸ்டி, சுங்கவரிபோன்ற அனைத்திலும் தமிழகத்தின் பங்கை இந்திய அரசின் ஒரு அங்கம் என வசூலிக்கும் மத்திய அரசு நீர் மேலாண்மை விவகாரத்தில் தனது பங்கை தட்டிக்கழித்து தள்ளிப்போடுவதால் பாதிக்கப்பட போவதும் இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமே.
ஆளுமை நிறைந்தவர், எடுத்த காரியத்தை நிறைவேற்றக்கூடியவர், இரும்புக்கரம் கொண்டு எதையும் சாதிப்பவர் என பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடங்கி ஜிஎஸ்டி வரை பல திட்டங்களில் நினைத்ததை சாதித்த பிரதமர் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் தெளிவான வழிகாட்டுதல் வந்த பிறகும் 6 வார காலமும் மவுனம் காப்பது எதனால் என்ற கேள்வி வைக்கப்படுகிறது.
சாதாரண அதிமுக உட்கட்சி பிரச்சினைக்காக அணியிலிருந்து பிரிந்து போன ஓபிஎஸ்க்கு கேட்ட பொழுதெல்லாம் சந்திப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்த பிரதமர், தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினையில் தமிழகத்தின் ஆளும், எதிர்கட்சிகள் கூட்டாக பிரதமைரை சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்காததற்கு என்ன பெரிய காரணம் இருந்து விட முடியும்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் ஆளும் அரசின் தடுமாற்றம் கர்நாடக மற்றும் மத்திய அரசுக்கு சாதகமாக அமைந்தது எனலாம். கடைசி வரை பொறுப்போம் பொறுப்போம் என இங்குள்ள ஆட்சியாளர்கள் கூற, கடைசி வரை என்ன செய்யப்போகிறோம் என மத்திய அரசு கூறாமல் இருக்க அந்த கடைசி நாளும் வந்துவிட்டது.
நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தபோது இது பற்றி விவாதிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது காவிரி விவகாரம் அஜண்டாவிலேயே இல்லை என்பது தெரிய வந்தது. அதனால் அது விவாதிக்கப்படவே இல்லை. மாநில அதிமுக அரசும் கடைசி நாளான இன்று அடுத்தது இரண்டு அமைச்சரவை கூட்டங்களை நடத்தி வருகிறது.
மத்திய அரசு மிகவும் தெளிவாக இந்தப்பிரச்சினையை தள்ளிப்போட முடிவு செய்து தற்போது ’ஸ்கீம்’’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்க போகிறது. இதற்காக மீண்டும் அந்த வழக்கு எடுக்கப்பட்டு அதில் மற்ற மாநிலங்களில் கருத்து கேட்கப்பட்டு என மீண்டும் பல மாதங்கள் தள்ளிப்போகலாம். இதற்குள் கர்நாடக தேர்தல் முடிய வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
ஆனால் இந்த ’ஸ்கீம்’ குறித்த விபரங்களை ஆறு வாரம் கழித்து தான் கேட்க வேண்டுமா முதல் வாரத்தில் ஏன் கேட்டிருக்க கூடாது என்ற கேள்வியும் எழுகிறது. மற்றொரு புறம் காவிரி மேலாண்மை வாரியத்தில் காவிரி ஸ்கிம் குறித்து தெளிவான வழிகாட்டுதலை அப்போதே உச்சநீதிமன்றம் வழங்கிவிட்டது.
அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பின் கீழ் பங்கீடு இருக்க வேண்டும் என்பதே அது, ஆகையால் மேலாண்மை வாரியமோ, அமைப்போ அதன் அதிகார அமைப்பின் கீழ் தான் நீர் பங்கீடு வரவேண்டும், கர்நாடகாவிற்கு கீழ் அல்ல என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறிய பின்னரும் மத்திய அரசுக்கு சந்தேகம் ஏன் வந்தது என்ற கேள்வியும் எழுகிறது.
ஸ்கிம் என்பது மேலாண்மை வாரியத்தைத்தான் குறிக்கிறது, காரணம் காவிரி நீர் கர்நாடகாவுக்கு சொந்தமானதல்ல அது நான்கு மாநிலத்திற்கும் சொந்தம் என்று தனது தீர்ப்பிலேயே உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
ஆகவே 6 வாரம் முடிந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுப்பதே சிறப்பாக இருக்கும் அதன் மூலம் உச்சநீதிமன்றம் மீண்டும் தனது உத்தரவை அமல்படுத்த உத்தரவிடும் நிலை ஏற்படும் என்ற கருத்தும் நடு நிலையாளர்களால் முன் வைக்கப்படுகிறது.’
காவிரி பிரச்சனையில் இதுவரை நடந்தது முன் தகவல்:
முதல் உடன்படிக்கை 1892,1924
1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது.
1924 அங்கே மைசூர் - கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய அரசின் மேற்பார்வையில் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை செய்யப்பட்டது.
1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 1924 ஒப்பந்தப்படியே காவிரி நீர் பகிர்வு நடந்துவந்தது.
1956-ல்மொழிவழி மாநில மறு சீரமைப்புக்குப் பின், குடகு கர்நாடகத்தின் பகுதி ஆயிற்று.
1954-ல் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் புலம் (யூனியன் பிரதேசம்) ஆயிற்று. புதுவையின் ஒரு பகுதியான காரைக்கால் காவிரி நீரால் பயனடைந்துவந்தது.
1960-ல் கபினி நீரில் பங்கு கேட்ட கேரளா
கபினியின் பிறப்பிடம் மொழிவழிக் கேரளத்தில் அமைந்திருந்தது. ஆகவே, புதிதாக கேரளமும் புதுவையும் காவிரி நீரில் பங்கு கேட்டன. பேச்சுவார்த்தை 1960-களின் முற்பகுதியில் தொடங்கி, 10 ஆண்டு காலம் நீண்டது.
அதிக பாசனப் பரப்பு கொண்ட தமிழகம்
1970-களில் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு கண்டறிந்தபடி, தமிழ்நாட்டின் காவிரி நீர்ப்பாசனப் பரப்பு 25.80 லட்சம் ஏக்கர் என்றும், கர்நாடகத்தின் நீர்ப்பாசனப் பகுதி 6.80 லட்சம் ஏக்கர் என்றும் தெரியவந்தது.
இருபுறமும் நீர்ப்பாசனப் பகுதி குறித்த சர்ச்சைகளின் ஆரம்பமே காவிரிப் பிரச்சினையின் முதல் பிரச்சினைக்கு வித்திட்டது. தமிழகம் தனது 25.8 லட்ச ஏக்கர் நிலப்பரப்பை சுருக்க விரும்பாததும், கர்நாடக தனது 6.8 லட்ச ஏக்கர் நீர்ப்பாசனப் பகுதியை அதிகரிக்க நினைத்ததும் பிரச்சினைக்கு காரணமாகின.
உச்சநீதிமன்றவழக்கு
1974-ல் ஒப்பந்தம் முடிந்த பிறகும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடர்ந்தது, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி கேட்டுக்கொண்டதால் தமிழகம் வழக்கை திரும்பப் பெற்றது.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய அரசமைப்பில் மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பான பகுதி 262 இந்திய அரசின் பொறுப்பைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பிரச்சினைகளுக்கான சட்டம், 1956 என்பது தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) அமைப்பதற்கான வழிவகையைக் கொண்டுள்ளது.
தீர்ப்பாய கோரிக்கையை வைத்த எம்ஜிஆர், அமைத்துக்கொடுத்த வி.பி.சிங்
பல கட்சிகள் தலைமை தாங்கிய தேசிய முன்னணி ஆட்சியில்தான் காவிரி தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. 1986-ல் தமிழக அரசு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி 1990 ஜூன் 2-ம் நாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசு, காவிரித் தீர்ப்பாயம் அமைத்தது.
தீர்ப்பாயத்திடம் ஒவ்வொரு மாநிலமும் கேட்ட தண்ணீரின் அளவு கர்நாடக 465 டிஎம்சி, தமிழகம் 566 டிஎம்சி, கேரளா 99.8 டிஎம்சி, புதுவை 9.3 டிஎம்சி.
தீர்ப்பாயத்திடம் நியாயம் கிடைக்காததால் உச்ச நீதிமன்றம் போன தமிழக அரசு
தங்களுக்கான தண்ணீரைத் திறக்க ஆணையிடுமாறு தீர்ப்பாயத்திடம் தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. தீர்ப்பாயம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி தீர்ப்பாயம் மறு பரிசீலனை செய்து இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்ற இடைக்கால தீர்ப்பும், கர்நாடகாவின் அவசரச் சட்டமும்
1980-81க்கும் 1989-90க்கும் இடைப்பட்ட 10 ஆண்டு சராசரியைக் கணக்கிட்டு, ஒவ்வொரு நீர்ப்பாசன ஆண்டிலும் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்பதே இடைக்காலத் தீர்ப்பு.
மாத வாரியாகவும், அந்தந்த மாதமும் வாரவாரியாகவும் கர்நாடகம் திறந்து விட வேண்டிய நீரின் அளவும் வரையறுக்கப்பட்டது.
கர்நாடகம் அதன் பாசனப் பரப்பை அப்போதைய 11,20,000 ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது.
இந்த இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது.
1991வன்முறை
தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 டிசம்பர் 11 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. தமிழர்களுக்கு எதிராகக் கொலைகளும், கொள்ளையும் தீவைப்பும் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அகதிகளாக வெளியேறித் தமிழகம் வந்து சேர்ந்தன.
1992, 1993, 1994 ஆண்டுகளில் போதிய மழைப் பொழிவு இருந்ததால், பெரிதாகச் சிக்கல் எழவில்லை. 1995-ல் பருவமழை பொய்த்ததால் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடகம் மறுத்துவிட்டது.
தோல்வியில் முடிந்த காவிரி ஆற்று ஆணையம்
1997-ல் இந்திய அரசு காவிரி ஆற்று ஆணையம் அமைத்தது. இது பிரதமரையும் நான்கு மாநில முதல்வர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. எல்லா உறுப்பினர்களும் கலந்துகொண்டால்தான் இந்த ஆணையம் கூட முடியும். கூடினாலும் ஒருமனதாக மட்டுமே முடிவெடுக்க முடியும். கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஆணையம் அதிகாரமற்றதாக மாற்றப்பட்டது. இந்த ஆணையத்தால் ஒரு பயனும் விளையவில்லை.
தீர்ப்பாயத்தின் இறுதித்தீர்ப்பு
2007 பிப்ரவரி 5 அன்று தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி. இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டிஎம்சி ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுவைக்கு 7 டிஎம்சி ஒதுக்கி உத்தரவிட்டது.
205டிஎம்சி 192டிஎம்சியாக குறைக்கப்பட்ட கதை
தமிழகத்துக்கு உரிய பங்கான 419 டிஎம்சியில் தமிழ்நாட்டுக்குள் பொழியும் மழை அளவில் கிடைத்தது போக, கர்நாடகம் திறந்துவிட வேண்டிய அளவுதான் 192 டிஎம்சி.
கர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய நீரின் அளவு (டிஎம்சி) இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆக இருந்து, இறுதித் தீர்ப்பில் 192 ஆகக் குறைந்துபோனது.
இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் மாதவாரியாகத் திறந்துவிட வேண்டிய நீரளவு பின்வருமாறு :
ஜூன்: 10, ஜூலை: 34, ஆகஸ்ட்: 50, செப்டம்பர்: 40, அக்டோபர்: 22, நவம்பர் 15, டிசம்பர்: 8, ஜனவரி: 3, பிப்ரவரி: 2.5, மார்ச்: 2.5, ஏப்ரல்: 2.5, மே: 2.5.
ஒரு மாதத்தில் தண்ணீர் குறைவாகக் கொடுத்தால், அடுத்தடுத்த மாதங்களில் அந்த நிலுவையைக் கொடுத்துக் கணக்கை நேர் செய்ய வேண்டும். பற்றாக்குறை காலத்தில் எவ்வளவு குறைவாகக் கிடைத்தாலும் இதே விகிதப்படி பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை கர்நாடகம் விடாப்பிடியாக இன்றுவரை எதிர்த்து வருகிறது.
காவிரி மேலாண்மைவாரியம் மத்திய அரசின் நழுவல்
தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியமும் (Cauvery Management Board) காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாகவே இறுதி தீர்ப்பு வந்தது.
டிஎம்சி அளவு குறைப்பு
முதலில் 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்ற உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்த மறுத்து உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் தீர்ப்பாயம் மூலம் 192 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. பின்னர் அதுவும் தீர்ப்பில் 177 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. தமிழகத்தின் நிலத்தடி நீரை முதன்முறையாக கணக்கில் எடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT