Published : 23 Mar 2018 09:08 PM
Last Updated : 23 Mar 2018 09:08 PM
காவிரி பிரச்சினைக்காக ரஜினி உண்ணாவிரதம் இருந்த வேளை அவருடன் நடிகர்கள் விஜயகுமார், அர்ஜுன், ரவிராகவேந்தர், கார்த்திக், அப்பாஸ், கருணாஸ், கே.ராஜன், சிலம்பரசன், அருண்குமார், ராஜீவ், கங்கை அமரன், டைரக்டர்கள் கேயார், மகேந்திரன், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, கலைப்புலி தாணு, பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், அவரது மகன் சுப்பு போன்றோரும் உண்ணாவிரதம் இருந்து ரஜினி உண்ணாவிரதத்தை முடித்து எழும் வரை அவர்களும் அவருடனே அமர்ந்திருந்தனர். அதே வேளை தமிழகத்தை மட்டுமல்ல, அண்டை மாநிலங்களில் உள்ள அரசியல் தலைகளையும், டெல்லி தலைவர்களையும் கூட அது திரும்பிப் பார்க்க வைத்திருந்தது.
ரஜினியிடம் மிகப் பெரிய அரசியல் ஆற்றல் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியது திமுக-தமாகாவுக்கு அவர் வாய்ஸ் கொடுத்த 1996 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் என்றால், அந்த ஆற்றல் முழுமையாக தனித்தன்மையுடன் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அண்டை மாநிலங்களுக்கும், டெல்லி தலைவர்களுக்கும் கூட வெளிப்படையாக வெளிச்சம் போட்டுக்காட்டியது 2002 ஆம் ஆண்டு காவிரிக்காக அவர் நடத்திய இந்த உண்ணாவிரதம்தான்.
முக்கியமாக இந்த உண்ணாவிரதத்தின் போதுதான் அவருக்குள் ஒளிந்து கொண்டிருந்த ஆன்மிக சக்தி, அரசியல் உத்தி, ரஜினி ஒன்றும் மற்ற அரசியல்வாதிகளை போல் சாமான்ய அரசியல்வாதி அல்லர் என்பதையும் கண்டு கொண்டுதாகவே உணர்ந்துகொள்ள முடிந்தது.
அதற்கேற்பவே மற்ற அரசியல் தலைவர்களின் வெளிப்பாடும் இருந்தது. அதில் உச்சகட்ட வெளிப்பாடாகத்தான் ரஜினி உண்ணாவிரதம் இருந்த வேகத்தில் அப்போதைய துணை பிரதமர் அத்வானி நதிகள் இணைப்பு பற்றி மத்திய அரசு ஆலோசிக்கும் என்ற தகவலை சொல்லியிருந்தார்.
2002 அக்டோபர் 13-ம் தேதியன்று ரஜினியின் உண்ணாவிரதம் பற்றி நிருபர்கள் டெல்லியில் அத்வானியிடம் கேள்வி எழுப்பியபோது, ''காவிரி விவகாரத்தை பிரதமர் வாஜ்பாய் நேரடியாக கையாண்டு வருகிறார். பெரிய நதிகளை இணைப்பதன் மூலம் வறட்சியையும், வெள்ளப்பெருக்கையும் தடுக்கும் திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கும். பிரதமர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும் கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநில அரசுகளிடமிருந்தும் அறிக்கை பெற்று அதன் பேரில் முடிவு எடுப்பார். நாட்டில் வறட்சியையும், வெள்ளப்பெருக்கையும் சமாளிப்பது குறித்து மத்திய நீர் வளத்துறை யோசனை தெரிவித்து இருக்கிறது. தற்போது நாட்டில் நிலவும் வறட்சி மிகவும் மோசமானது!'' என பதில் சொல்லியிருந்தார். இதன் எதிரொலி போல் இதற்கு 2 வாரங்கள் கழித்து இந்தியாவில் உள்ள பெரிய நதிகளை பத்து ஆண்டுகளில் இணைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
2002 அக்டோபர் 31-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.கிர்பால், நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அளித்த தீர்ப்பில், ''இந்தியாவின் பெரிய நதிகளை பத்து ஆண்டில் இணைக்க வேண்டும். இதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பைப் பெற மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வருவது பற்றியும் பரிசீலிக்கலாம். இது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய உயர்மட்டக்குழு ஒன்று அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை போன்று நதிகள் இணைப்பு திட்டத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக டிசம்பர் 16-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நதிகளை இணைப்பது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு தமிழக அரசு மட்டுமே பதில் அளித்து உள்ளது. மற்ற மாநில அரசுகளுக்கு இதில் ஆட்சேபனை இல்லை என்பது இதிலிருந்து தெரிய வருகிறது!'' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே நாளில், 'கங்கை-காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மக்கள் இயக்கம்!' தொடங்குவதாக ரஜினி 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு சிறப்புப் பேட்டி அளித்து அடுத்த பரபரப்பை கொடுத்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் இதுதான்.
''காவிரி நீர் பிரச்சினையில் நான் நடத்திய உண்ணாவிரதத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. நதிகளை இணைக்க ரூ.1 கோடி தர நான் விடுத்த அறிவிப்பும் நல்ல முன்னேற்றத்தைத் தந்துள்ளது. மக்களிடம் இந்த விஷயம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நான் முடிவு செய்து இருக்கிறேன். இமயமலையில் இருந்து ஓடும் நதிகளை தென்னக நதிகளுடன் இணைப்பதன் அவசியம் பற்றி மக்களுக்கு விளக்க ஒரு மக்கள் இயக்கம் தொடங்கிட திட்டமிட்டு இருக்கிறேன். என்னை தலைவராகவோ, ஆட்சி நிபுணராகவோ நான் நினைக்கவில்லை. காவிரி விஷயத்தை வைத்து விளம்பரம் தேடவோ, அல்லது அரசியல் லாபம் அடையவோ நான் திட்டமிடவில்லை.
அரசியல்வாதிகள் தேர்தலைத் தவிர வேறு எதையும் சிந்திப்பதில்லை. அரசியல் தலைவர்களிடம் 5 ஆண்டுக்கான தெளிவான கண்ணோட்டம் கூட இல்லை. 3 வருடம், 4 வருடம் அரசியல் லாபக் கணக்குதான் போடுகிறார்கள். இதனால் என்னைப் போன்றவர்கள் வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. எனக்கு அரசியல் எண்ணம் கிடையாது. பல்வேறு கட்சித் தலைவர்களுடனும் என்னால பேச முடியும். நான் ஜனாதிபதி அப்துல்கலாம், பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் நான்கு தென் மாநில முதல்வர்களை சந்தித்துப் பேச இருக்கிறேன். தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்திப்பேன்.
நதிகள் இணைப்பதற்கு அரசியல் ரீதியாக ஆதரவு திரட்ட இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.
நதிகள் இணைக்கும் பணியை முடிக்க 11 -12 வருடங்களுக்கு மேல் ஆகாது. இந்தத் திட்டத்தை முடிக்க ரூ.75 ஆயிம் கோடிதான் செலவாகும். அதிகபட்சம் ரூ.1 லட்சம் கோடிதான் ஆகும். எல்லா மாநிலங்களும் இதனால் பலனடையும். ஆனாலும் இவ்வளவு காலம் ஏன் இதை யாரும் நிறைவேற்ற முன்வரவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பணம் ஒரு பிரச்சினையே இல்லை. எனவே பணத்தைக் காட்டி சாக்குபோக்கே தேவை இல்லை.
இந்த திட்டத்திற்கு நான் ரூ.1 கோடி தருவதாக அறிவித்த பிறகு ஒரு சிறு தொழில் அதிபர் ரூ.10 லட்சம் காசோலை அனுப்பினார். இதன் மூலம் நதிகள் இணைப்பு திட்டத்தை தொடங்கி வைக்கும் பணியில் இறங்க முடிவு செய்தேன். கடவுளால் மட்டுமே எதுவும் நடக்கும். ஆனால் என்னால் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். நான் ஏற்கெனவே கர்நாடகா முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பேசிக் கொண்டு இருக்கிறேன்.
முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், தேவகவுடா உடனும் கலந்து பேசுவேன். தண்ணீரை ஆளுபவன் உலகத்தை ஆள்வான். அரசியல் தலைவர்கள் ஆதரவை திரட்டி விட்டால் இந்த திட்டம் நிறைவேறி விடும். திட்ட செலவை, பயனடையும் மாநிலங்களே கொடுத்து விடலாம். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பும் பெறுவார்கள். மாறாக இவ்வளவு உயர்ந்த திட்டத்தை முன்னெடுத்து செல்ல விடாமல் தடுத்து என் பொறுமையை சோதிக்க வேண்டாம். இந்த திட்டத்தை ஒத்துழைக்க செய்யுங்கள். நாங்கள் ஒத்துழைக்கிறோம்.
முதல் வேளையாக, 'தீபகற்ப நதி மேம்பாட்டு ஆணையம்' ஏற்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். கங்கை- காவிரியை நேரடியாக இணைக்க சாத்தியம் இல்லை. ஆனால் தென்னக நதிகளை இணைத்தால், இமயமலை நதிகளையும், பிறகு தென்னக நதிகளுடன் இணைதது விடலாம். எல்லா தரப்பில் இருந்தும் இதை நிறைவேற்ற நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே திட்டத்தை இறுதி செய்ய வேண்டியது அவசியம். பாஜக தலைவர் வெங்கய்ய நாயுடு கூட இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். பிரதமர் வாஜ்பாயை சந்திக்க ஒரு குழுவை அழைத்துச் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.
யாருடனும் மோதல் போக்கின்றி, மூடத்தனம் இல்லாத முறையில் நான் காவிரி பிரச்சினையில் மேற்கொள்ளும் இந்த அணுகுமுறை பல்வேறு தரப்பிலும் பாராட்டப்படுகிறது. அதனால் இதில் தலையிட முடிவு செய்தேன். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவன் என்பதனால் அந்த மாநில விவசாயிகள் சந்தித்து வரும் கஷ்டங்களும் எனக்கு தெரியும். நதிகள் இணைத்தால் காவிரி சிக்கலுக்கு மட்டுமல்ல, இருமாநில பிரச்சினையும் தீர்ந்து விடும். எல்லாவற்றுக்கும் இது தெளிவு ஏற்படுத்தும்!'' என்று தெரிவித்திருந்தார் ரஜினி.
- பேசித் தெளிவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT