Published : 24 Apr 2014 09:38 AM
Last Updated : 24 Apr 2014 09:38 AM
ஒரு பக்கம் ஐ.பி.எல், மறு பக்கம் தேர்தல் என்று இந்திய மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் நம் அரசியல் கட்சிகள் ஐ.பி.எல் அணிகளாக உருவானால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை.
அதிமுக கிளாடியேட்டர்ஸ்
அணியில் யாருக்கு நிரந்தர இடம் என்று யாராலும் சொல்ல முடியாது..! ஆனால் நிரந்தர கேப்டன் அம்மாதான்..! அவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கேப்டன் ஆக்குவார், மறு நாளே கேப்டனை 12வது ஆட்டக்காரர் ஆக்குவார். தரையில் விழுந்து பீல்டிங் செய்வதில் மிகத் திறமையான அணி..! இதுவே இவர்களது பலம். ஆனால் எந்த முடிவும் கேப்டனை கேட்காமல் எடுக்க முடியாதது பலவீனம்..! கிரவுண்டில் பவுண்ட்ரி லைன் அருகே இவர்கள் கேப்டனை பற்றிய விளம்பரங்களே இருக்கும்..! டிரிங்ஸ் டைமில் அம்மா வாட்டர் குடிக்க தரப்படும்..மேலே பறந்து வரும் பந்தை இமைக்காமல் பார்க்கும் பயிற்சி பெற்றவர்கள் இந்த அணியினர் என்பது இவர்களின் கூடுதல் பிளஸ்.
திமுக சூப்பர் கிங்ஸ்
அணியின் பெயரில் கிங்ஸ் எனப் பன்மையில் இருப்பதிலேயே பிரச்சினை விளங்கும்..! பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவரும் ஒருவரே... பல ஆண்டுகளாக துணைகேப்டன் மட்டும் மாறாது இருக்கிறார். அவர் எப்போது கேப்டன் ஆவார் என்பது யாருக்கும் தெரியாது. அவர் கேப்டன் ஆனால் அணிக்குள்ளேயே பிரச்சினை ஆகும் என்பதால் முதிர்ந்த வயதிலும் பதவியை தொடர்கிறார் தற்போதைய கேப்டன்.. ஆடும் லெவனில் உறவினர்களே அதிகம் தேர்வு செய்யப்படுவார்கள். வைஸ் கேப்டனின் சகோதரர் கேப்டனாக நினைத்ததால் அவர் அணியிலிருந்தே நீக்கப்பட்டார்.!
பாஜக ராயல் சேலஞ்சர்ஸ்
அணித்தேர்வு நடக்கும் வரை கேப்டனாக ஆவார் என்று இருந்தவர் ஒருவர். ஆனால் வெளியில் அறிவிப்பு வரும்போது கேப்டனானவர் வேறொருவர்..! இதுவரை குஜராத் லீக் போட்டிகளில் விளையாடியவர் இப்போது தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. குஜராத் லீகில் செய்த சாதனையெல்லாம் தேசிய அளவில் எடுபடாது என்ற விமர்சனம் இருந்தாலும் தொடர்ந்து 15 ஆண்டுகள் குஜராத் அணியிலிருப்பதை பலமாக கருதுகிறார்.. டிரிங்ஸ் சமயத்தில் டீ சாப்பிடுவது இவருக்கு ரொம்பப் பிடிக்கும்..! கிரவுண்டில் உள்ள ஸ்க்ரீனில் தோன்றி அடிக்கடி பேசுவார்.. ஆனால் இவர் என்னதான் அடித்து ஆடினாலும் அணிக்குள்ளேயே இவருக்கு அதிருப்தியாளர்கள் இருப்பது பலவீனம்.! அதனால் தான் இரண்டு முறை பேட்டிங் செய்கிறார்.
மதிமுக வாரியர்ஸ்
ஃபிட்னெஸ் நிறைந்த டீம்... நிறைய போராட்டங்களுக்கு பிறகு ஆட வந்துள்ளது... உணர்ச்சிவசப்பட்டு அழுகின்ற கேப்டனை கொண்ட அணி.. எல்லோரையும் அரவணைத்து செல்பவர் என்றாலும் பலர் இவரை அழ வைத்துவிட்டு பிரிந்து சென்று விடுவார்கள்.. இவரது அணியின் பெயரிலேயே வாரியர் என்று இருப்பதால் ஆளாளுக்கு வாரி விட்டு செல்கிறார்கள்போல..! இந்த அணியின் கேப்டனே வேறு ஒரு அணியில் இருந்து பிரிந்து வந்தவர்தான் என்பது வேறு கதை. எந்த ஒரு பிரச்சினை என்றாலும் நடையாய் நடந்து அதை தீர்த்து வைப்பதில் அணி கேப்டன் வைகோ கெட்டிக்காரர் என்பது அந்த அணியின் சிறப்பம்சம்.
அதே நேரத்தில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய எல்லாத் துறைகளிலும் அணி இவரையே நம்பி இருப்பது இந்த அணியின் பலம் மற்றும் பலவீனம்..
கம்யூனிஸ்ட் லெவன்ஸ்
டோர்னமெண்ட் துவங்கும் வரை வேறு அணியில் சேர டோர் திறக்காதா என காத்திருந்த வீரர்கள் இணைந்து இந்த அணியை உருவாக்கி உள்ளனர். 2 பேட்ஸ் மேன்களையும் 2 பவுலர்களையும் மட்டும் வைத்துக் கொண்டு இது வரை மற்ற அணியில் விளையாடி யவர்கள்..! இப்போது முழு அணி யையும் தேர்ந்தெடுக்க வேண் டிய கட்டாயத்தில் மூச்சு திணறு கிறார்கள்..! உழைப்பாளிகளை நம்பி உள்ள அணி இது. ஆனால் அவர்களது உழைப்பு பலன் தருமா என்பது போட்டிகளுக்கு பிறகுதான் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT