Published : 11 Sep 2014 03:05 PM
Last Updated : 11 Sep 2014 03:05 PM
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை கற்ற பின்னர் பெருமாளுக்கு ஏதேனும் கைங்கரியம் செய்ய வேண்டும் என்று பேராவல் கொண்டார் மயிலை ஜெயஸ்ரீ முகுந்தன். அதன் விளைவே பெருமாளுக்கு ஆடைகளை உருவாக்கும் கலையை ஆர்வத்துடன் கற்றாராம். இவர் தயாரித்த ஆடைகளை தாயார், பெருமாள் மூலவர்களுக்கு அணிவித்து காண்பது பிறவிப் பயன் என்கிறார் பக்தியில் தோய்ந்த அவர்.
பார்வைக்கு மெத்தென்று பளபளப்பாக இருக்கும் வெல்வெட்டில் செய்யப்படுவதுதான் பெருமாள் ஆடை. அதில் அழகிய ஜொலிக்கும் கற்களைப் பதித்தும் சமிக்கியை அழகாய் தைத்தும் செய்யப்படும் பெருமாள் ஆடைகள் கண்ணுக்கு குளிர்ச்சி. மனதுக்கோ புத்துணர்ச்சி.
பெருமாளின் இரண்டு கால்களுக்கும் தனித்தனியே தயார் செய்யப்பட்ட வெல்வெட் ஆடையைப் பொருத்தி பின்னால் பட்டு நூலால் கட்டிவிட்டால் உடை கனகச்சிதமாகப் பொருந்திவிடுகிறது என்றார் அவர். மேல் கைகளில் அணியப்படும் ஆபரணமான வங்க்கி, தாயார் உடைகள் ஆகியன கண்ணைப் பறித்தன.
ஆலவட்டம் என்கின்ற விசிறியை திருச்சானூர் தாயாருக்கு அர்ப்பணித்ததை ஆனந்த அனுபவமாக இருந்ததாகக் கூறுகிறார். உப்பிலியப்பன் கோவில், திருநாராயணபுரம், கூரம், திருக்கண்ணபுரம், நாகப்பட்டிணம், திருக்கண்ணன்குடி, திருக்கண்ணமங்கை, காஞ்சிபுரம் தேசிகர் கோவில், பீமண்ணப்பேட்டையில் உள்ள ரங்கமன்னார் கோவில் ஆகிய திவ்ய தேசங்களில் உள்ள பெருமாளுக்கும் தாயாருக்கும் பல ஆடைகள் அளித்துள்ளார் ஜெயஸ்ரீ.
பெருமாள் அங்கியாக அலங்கரிக்கப்படும் ஆடையே நகை போல் காட்சி அளிக்கிறது. இவர், மார்கழி மாதத்தில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமாக அணிவிக்க 30 பாசுரங்களில் உள்ள முதல் சொல்லை மட்டும் கொண்டு இடுப்பு ‘பெல்ட்’டாகத் தயாரித்துள்ளார். ஆண்டுதோறும் இதனை அணிவித்துக் கொண்டே இருக்கலாம் என்பது கூடுதல் வசதி. அங்கியின் மீது அணிவிக்கப்படும் இந்த மார்கழி ‘பெல்ட்’ அன்றன்று என்ன பாசுரம் என்பதை ஆண்டாளின் காதல் நாயகனான பெருமாளே பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த சிறப்பு ‘பெல்ட்’ மயிலை ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உற்சவருக்கு சாற்றுவதற்கான ஆடைகளை மயிலை ஜெயஸ்ரீ முகுந்தன் மற்றும் அனுராதா ஆகியோர் இணைந்தே தயாரிக்கின்றனர். பூ ஜடை செய்யக் கற்றுக் கொடுத்தது கோதை என்றும், ஆடை அலங்காரம் கற்றுக் கொடுத்தது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மற்றும் புஷ்பா என்றும் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
”பெருமாள் ஆடைகளுக்கு அளவு எடுத்தல் குறித்து கேட்டபோது, உற்சவர்களுக்கான பொதுவான அளவு ஒன்று உள்ளது. அதனையே பெரும்பாலும் பயன்படுத்துவோம். மேலும் சில கோவில்களில் அர்ச்சகர்களே பெருமாளின் அளவை எடுத்துக் கொடுத்து விடுவார்கள். பொது அளவில் தைத்த ஆடையை கொண்டு கொடுத்தால் இதை விட பெரிய அளவு அல்லது சின்ன அளவு என்று குறிப்பிட்டுச் சொல்லி விடுவார்கள்” என்றவர், மேலும் இந்த ஆடைகளை செய்யும் முறை பற்றி விளக்கினார்.
”வெல்வெட் துணியின் உள்ளே இருப்பது ‘கம் கான்வாஸ்’. இப்படி தயாரிக்கும்போது, பார்ப்பதற்கு ’பேன்ட்’ மாதிரி மொட மொடப்பாக இருக்கும். அதன் உள்புறம் ’லைனிங்’ வைத்து தைத்துவிட்டு பின்னர் மேல்புறம் சமிக்கி வைத்து தைத்து விட வேண்டும். இதனிடையில் கற்கள் பதித்து ஒட்டி விட்டால், ஆடை ஜொலிக்கும். எளிதாகத் தோன்றினாலும் வேலைப்பாடு நிறைந்தது. அதுவே மனதுக்கும் நிறைவானது.’
இறைவனிடம் உள்ள பக்தியை தெரிவிக்க மீரா பாடிப் பரவினாள். பக்தியைக் காட்ட, பக்தர்களுக்கு பரவசம் கூட்ட, ஜெயஸ்ரீக்கு இப்படி ஒரு வழி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT