Published : 26 Mar 2018 08:34 PM
Last Updated : 26 Mar 2018 08:34 PM

ரஜினி அரசியல்: 42 - இணைப்புக்கு ஒரு மக்கள் இயக்கம்

அப்போது அளித்த பேட்டியின்போது தான் அரசியலுக்கு வருவது விதிப்படிதான் நடக்கும் என்று வழக்கம் போல் குறிப்பிட்டிருந்தார் ரஜினி. அதில் ஆழமும், அழுத்தமும், யதார்த்தமும் நிறைந்தே இருந்தது.

'நான் அரசியலில் இறங்குவேனா என்பது எனக்கு உண்மையிலேயே தெரியாது. நான் எதையும் தொலைநோக்குடன் பார்க்க மாட்டேன். காவிரி தவிர அரசியல் ஆதரவு திரட்டுவது என்றால், வறுமை ஒழிப்புக்கு முழக்கமிடுவேன். ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ போல இதை மேற்கொள்வேன். ஆனால் இப்போதைக்கு, இன்றைய பிரச்சனையைத்தான் பார்ப்பேன். நாளைய விவகாரத்தை நாளை பார்க்கலாம். எனக்கு கிடைத்த எவையும் நான் தேடியதே இல்லை. எனக்கு விதியில் நம்பிக்கை உண்டு.

சினிமாவில் நுழைந்தபோது வில்லனாகத்தான் வந்தேன். ஆனால் ஹீரோ ஆகி விட்டேன். ஒரு ஸ்கூட்டரும், ஒரு படுக்கை அறை கொண்ட அப்பார்ட் மென்ட்டும்தான் நான் ஆசைப்பட்டது. ஆனால் எனக்கு கிடைத்திருப்பதை பாருங்கள். இந்த வீடு, கார்களை பாருங்கள். அரசியல் கட்சிகளும், மக்களும் எனது அரசியல் பிரவேசத்தை மிக முக்கியமானதாக கருதுகிறார்கள். இப்போது நான் ஒரு நடிகன். எனக்கு எதிர்காலத்தில் ஏதாவது வேறு ஒரு பதவி காத்திருக்கலாம். அது எனக்கு இப்பவே தெரியாது!’ என்றவரிடம், ‘நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நிர்பந்திக்கிறார்களா? அப்படி உணர்கிறீர்களா?’ என ஒரு கேள்வி. அதற்கு ரஜினியிடம் இப்படி பதில் புறப்படுகிறது.

‘அது ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது. நான் வருவேனா மாட்டேனாங்கிறது தலைவிதிப்படிதான் நடக்கும். எதுவும் என் கையில் இல்லை. எதையும் நான் தடுக்கவும் முடியாது!’

‘ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு நீங்கள் கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த நேரத்தில் அவரிடம் நதி நீர் இணைப்பு பற்றி நீங்கள் பேசமுடியுமா?’ என்றும் கேள்வி.

அதற்கும் ரஜினி, ‘ஜெயலலிதாவுடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடு இருந்தாலும், இந்த திட்டத்திற்கு (நதி நீர் இணைப்பு) அவரை சம்மதிக்க வைப்பதில் எனக்கு எந்த சிரமமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஜெயலலிதா இப்போது சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எல்லோருடைய நலனையும் கருதி ஜெயலலிதா இந்த திட்டத்தை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வார்!’ என்றே பட்டென்று பதில் தந்துள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் ஜெயலலிதாவின் நிலையே வேறு மாதிரியாக இருந்தது.

ரஜினி தான் நடத்தப் போகும் மக்கள் இயக்கத்துக்கு ஆதரவு கேட்க, ஒரு சந்திப்பு நடத்த ஜெயலலிதாவிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். அக்கடிதம் கிடப்பில் போடப்பட்டது. அவை வெகுஜன மீடியாக்களில் செய்திகளாக திரிந்தன.

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் கர்நாடகா போராட்டக்காரர்களை அப்போதைக்கு ஜகா வாங்க வைத்ததன் மூலம் அதை தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றியாக, அதுவும் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுகவின் வெற்றியாக கொண்டாட எண்ணியிருந்தார் முதல்வர் ஜெயலலிதா. எனவே அதை ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசியல் தாரை வார்க்க, ஜெயலலிதா விரும்பவில்லை என்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேச்சாக இருந்தது.

எனவே முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும் எண்ணத்தை அப்போதைக்கு கைவிட்டு இருபது பேர் அடங்கிய கலைக்குழுவுடன் டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயை சந்திக்க முடிவு செய்தார் ரஜினி. அங்கே மத்திய அரசு சார்பாக நதி நீர் இணைப்புக்கு ஓர் உயர்மட்டக்குழுவை அமைக்க முடிவு செய்திருந்தனர் வாஜ்பாய் மற்றும் அத்வானி. அதில் ரஜினியை உறுப்பினராக்கவும் திட்டம் இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரத்திலும் வலுவான பேச்சு உலா வந்தது.

அதன் மூலம் ரஜினியை பாஜக ஆதரவாளர் ஆவார் என்றும், இது பற்றி சோ ரஜினியிடம் பேசுவார் என்றும் அதில் தகவல்கள் சிதறின.

இதே நேரத்தில் ரஜினி நடத்தப்போகும் இந்த இயக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய ஒரு கமிட்டி போடவும் பாமக முடிவு செய்திருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் செய்திகள் பரவி நின்றது. அதே சமயம் மத்திய அரசு அமைக்கும் கமிட்டியில் ரஜினி இடம் பெறுவதையும் ஜெயலலிதா எதிர்ப்பதாக மீடியா தகவல்கள் உழன்றன. அதில் முக்கியமாக சுவாமி சச்சிதானந்த மகராஜ் இறந்த பிறகே அரசியல் ரீதியாக ரஜினியிடம் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் எதிரொலியே அவரின் உண்ணாவிரதம், மக்கள் இயக்கம், நதி நீர் இணைப்பு கோரிக்கை போன்ற இந்த பொதுநல செயல்பாடுகள் என்றும் ரஜினிக்கு நெருக்கமானவர்களிடமிருந்தே தகவல்கள் புறப்பட்டன.

‘அமெரிக்காவுக்கு சுவாமிஜியின் உடல் கொண்டு போகப்பட்ட சமயம் கூடவே சென்றார் ரஜினி. அங்கேயே மொட்டையடித்து குரு தீட்சை பெற்றுக் கொண்டார். இத்தகைய தீட்சை சச்சிதானந்த மகராஜ் ஆசிரமத்து சீடர்களில் ஆன்மிக நிலையில் மிக உயர்ந்த நிலைக்குப் போகிறவர்களுக்கே வழங்கப்படுவது வழக்கம். தமிழ்த் திரையுலகினர் காவிரிக்கான போராட்டத்தில் குதித்தபோது தான் தனிமைப்படுத்தப்பட்டது மிகவும் பாதித்தது ரஜினியை.

அதில் எழுந்த உள்ளார்ந்த ஆன்மிக எழுச்சிதான் அவரை தனித்த உண்ணாவிரத எண்ணத்திற்கு தள்ளி எதிர்த்தவர்களை கூட தன்னகத்தே வரவழைத்தது. மறைமுக எதிரிகளை கூட வலிய வந்து வாழ்த்து சொல்லவும் வைத்தது. அதில் கிடைத்த வரவேற்பு நதி நீர் இணைப்பு, மக்கள் இயக்கம் என்றெல்லாம் ஒரு மாத காலத்திற்குள்ளாகவே பேச வைத்திருக்கிறது. கேளம்பாக்கத்திலுள்ள வீட்டிலிருந்தபடியே இந்தத் திட்டம் குறித்த பரிசீலனையில் இருக்கும்போது அவுருக்கு உறுதுணையாக பிரபல பத்திரிகையாளர் ஒருவரே இருந்துள்ளார். அவரிடம் மனம் விட்டும் பேசியிருக்கிறார். அந்த சமயத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசியதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அப்போது அவருடன் தான் நதிநீர் இணைப்புக்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்திருப்பதாகவும், அது தமிழ்நாட்டிற்கு நல்ல பயனளிக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். ‘இதையெல்லாம் என்னிடம் சொல்லி என்ன பயன்? மக்களுக்கு போனாத்தானே பிரயோஜனம்?’என்று பத்திரிகை நண்பர் சொன்ன பிறகே ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். தான் தொடங்க உத்தேசித்துள்ள மக்கள் இயக்கம் குறித்து அதன் பிறகே பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார்!’ என்றெல்லாம் அதில் விஷயங்கள் கனன்றன.

அதே சமயம் ‘அவர் ஒரு கட்சியை ஸ்தாபித்து அதை வழிநடத்த முடியுமா?’ என்ற கேள்விகளும் மீடியாக்களில் வந்த வண்ணம் இருந்தன. அது அரசியல் நோக்கர்களின் பார்வையில் சாத்தியம்; சாத்தியமில்லை என்கிற ரீதியில் வழக்காடு மன்றங்கள், பட்டிமன்றங்கள் நடக்காத குறையான விவாதப் பொருள் ஆனது.

‘1996ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே திமுக, அதிமுக தவிர்த்த இன்னொரு இயக்கம் தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்கிற உணர்வோடுதான் ரஜினி இருந்தார். அந்த வகையில்தான் காங்கிரஸை ஆதரிக்க அவர் முன்வந்தார். நரசிம்மராவ் அன்றைக்கே அதற்கு ஒப்புக் கொண்டிருந்தால் தமிழகத்தின் தலைவிதியே மாறி இருக்கும். ஆனால் நரசிம்மராவ் ஒப்புக் கொள்ளாததால்தான் காங்கிரஸ் உடைந்து விட்டது. உடைந்த தமாகாவை மட்டும் ஆதரிக்க மனசில்லாமல்தான் திமுகவையும் சேர்த்து ஆதரித்தார் ரஜினி. கூட்டணிக்கும் பக்கபலமாக நின்று வெற்றியடையவும் வைத்தார். அதனால் அரசியல் பலம், கூட்டணியின் அவசியம் எல்லாம் தேர்தல் அரசியலில் எவ்வளவு கோலோச்சும் என்பது அவருக்கு தெரிந்தே இருக்கிறது.

இப்போதைய சூழ்நிலையில் ரஜினியின் ரசிகர்கள் யாரையோ ரஜினி ஆதரிப்பதை விட நேரடியாக அரசியல் களத்தில் இறங்குவதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அதை இப்போது ரஜினி உணர்ந்தும் இருக்கிறார். அதற்கான காலமும் நேரமும் சரியா என்பதை இந்த இடத்தில் உரசிப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்!’ என்றும் கூட ஒரு பிரபல தமிழ் பத்திரிகை தன் பார்வையை விரித்திருந்தது.

- பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x