Published : 21 Mar 2018 07:53 PM
Last Updated : 21 Mar 2018 07:53 PM

ரஜினி அரசியல்: 39 - 64 வயது ரசிகரின் சுண்டுவிரல் துண்டிப்பு

இதற்கிடையே ரஜினி உண்ணாவிரதம் இருந்த நாளிலேயே ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ரஜினி ரசிகர்களும் பல்லாயிரக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்தனர். அதிலும் ஏகப்பட்ட ரசபாச அரசியல் சங்கத்திகள் அரங்கேற்றம் கண்டன. குறிப்பாக கோவையில் ஆச்சர்யம் ப்ளஸ் அதிர்ச்சி சம்பவம் ஒரு ரஜினியின் உண்ணாவிரதத்தை ஆதரித்தும், கர்நாடக அரசைக் கண்டித்தும் தன் கைவிரல்களில் ஒன்றை துண்டித்து அதிர்ச்சியூட்டினார்.

கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு நடந்த இந்த உண்ணாவிரத்தில் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் கறுப்புச் சட்டை அணிந்திருந்தனர். உண்ணாவிரதத்தை ஒட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இதே போல் சரவணம்பட்டி சிவானந்தபுரம் உள்பட கோவை மாவட்டத்தில் மட்டும் 11 இடங்களில் உண்ணாவிரதம் நடந்தது.

இப்படி நடந்த உண்ணாவிரதங்களில் காந்திபுரம் உண்ணாவிரதப் பந்தலில்தான் ஒரு ரசிகர் திடீரென்று ஆவேசம் வந்தவர் போல், 'ரஜினி வாழ்க. கர்நாடக அரசே காவிரியில் தண்ணீர் விடு!' என்று கூச்சல் போட்டுக்கொண்டே தன் கையிலிருந்த அரிவாளால் தன் சுண்டுவிரலையே வெட்டிக் கொண்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த ரஜினி ரசிகருக்கு அப்போதே வயது 64. (இப்போது கணக்கிட்டு பாருங்கள்: 79 -80 வயதாகியிருக்கும்). இந்த வயசில் அப்படியென்னா ஆவேசம் அவருக்கு? அவர் உண்மையிலேயே ரஜினி ரசிகர்தானா? என்று ரஜினி ரசிகர்களுக்கே சந்தேகம். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மாசிலாமணி என்ற பெயருடைய அவரை சந்தித்து நானும் பேட்டி கண்டேன். மனிதர் மிகத் தெளிவாகவே பேசினார்.

''நான் இன்னெய்க்கு நேத்தில்லை. 1991-லேயே காவிரி பிரச்சினைக்காக கோவை அண்ணாசிலை பக்கம் நடந்த போராட்டத்தில் கலந்திருக்கேன். அதற்காக மூணு மாசம் ஜெயிலிலும் இருந்திருக்கேன். வருஷா, வருஷம் கர்நாடகாக்காரன் காவிரியில் தண்ணி விடறானோ இல்லையோ, நமக்குள்ளே குரோதத்தை மட்டும் அள்ளி விடறான். இந்த வருஷம் அதுல நம்ம ரஜினிகாந்தையே பலிகடா ஆக்கப் பார்த்துட்டான். எனக்கு ஆரம்பம் முதலே ரஜினின்னா உசிரு. அப்படிப்பட்ட மனுஷன் மேல சேற்றை வாரிப் பூசினா மனசு கேட்குமா?

நாம ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தவன் எல்லாம் ஆட்சிக்கு வந்து கார்லயும், விமானத்துலயும் உல்லாசமா போயிட்டிருக்கான். லட்ச, லட்சமா எம்பி,எம்.எல்.ஏ சம்பளமும் வாங்கறான். கோடி, கோடியா லஞ்ச, ஊழல்ல கொழுக்கிறான். தமிழன்னு சொன்னதுனாலயும், தமிழ்ப்படத்துல நடிச்சதுனாலயும் ரஜினி மட்டும் இப்படி உண்ணாவிரதம் இருக்கணுமா? அதுதான் இந்த முடிவுக்கு வந்தேன். நான் நினைச்சிருந்த வீட்டுக்குள்ளேயே வச்சு விரலை வெட்டிக்க முடியும்தான். ஆனா அது எத்தனை பேருக்கு தெரிய வரும்?

சுதந்திரத்துக்காக காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். அது யாருக்காக? நமக்காக. அது போலத்தான் ரஜினி நமக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கார். அதுக்கு நான் சுண்டுவிரலை வெட்டிக்கிட்டது எம் மாத்திரம்? இப்பவும் சொல்றேன். காவிரியில் திரும்பவும் கர்நாடகாக்காரன் தண்ணியை விடலைன்னா, வரிசையா அடுத்தடுத்த விரல்களையும் வெட்டிக்குவேன். கட்டை விரலை வெட்டிய பின்னாடி என் உசிரையே கொடுப்பேன்!'' என்று உணர்ச்சி பொங்கிய மாசிலா மணி கோவை அருகே உள்ள பல்லடத்தில் ஒரு தோட்டத்தில் விவசாயக் கூலியாக இருந்தார். சொந்த ஊர் திருச்சி மாவட்டம் லால்குடி. இருபதாண்டுகளுக்கு முன்பு அங்குள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய இயலாமல் பஞ்சம் பிழைக்க கோவைக்கு வந்தாராம். இரண்டு மகள்கள். திருமணமாகி ஊரில் உள்ளனர்.

இதற்கிடையில் இவரது செயலைப்பற்றி ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களிடம் பேசியபோது, ''அவர் ரஜினி ரசிகரே இல்லை. பத்திரிகைகளில் பெயர் வரவேண்டும் என்பதற்காகவோ, ரஜினி பணம் கொடுப்பார் என்பதற்காகவோதான் இப்படிச் செய்திருக்க வேண்டும்!'' என்று குறிப்பிட்டனர். இதைப்பற்றி மாசிலாமணியிடமே கேட்டபோது மீண்டும் உணர்ச்சி பொங்கலே வெளிப்பட்டது.

''காசுக்காக, பேருக்காக இதைச் செய்வது மகா கேவலம் சார். அப்படிப்பட்ட கேவலமான ஆள் நான் இல்லை. ரஜினிக்கு ஆதரவா ஏதாவது செய்யணும்னா ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர் சீட்டு வச்சுட்டுத்தான் செய்யணுமா? என்னைப் பொறுத்தவரை காவிரியில் கர்நாடகாக்காரன் தண்ணீர் விடணும். அது திருச்சி, தஞ்சாவூரை பசுமையாக கொழிக்கச் செய்யணும். அதுக்கு ரஜினி போராட்டம் செஞ்சார். அதுக்கு நான் கை இல்லை, விரல் கொடுத்தேன். அவ்வளவுதான்!'' என்றார் படு சீரியஸாக.

ரஜினி உண்ணாவிரதம் குறித்த செய்திகள் அன்றைய தினமும், அடுத்தடுத்த நாட்கள் காலை, மாலை தினசரிகளிலும் கட்டம், கட்டி பக்கம் பக்கமாக வெளியிடப்பட்டிருந்தது. பெரும்பான்மை பத்திரிகைகள் ரஜினி உண்ணாவிரத செய்திகளை, படங்களையே வால்போஸ்டர்கள் ஆக்கியிருந்தன.

ஒரு கடையில் பார்த்தால் தொங்கும் அத்தனை பேனர்களும் ரஜினி உண்ணாவிரதப் புகழே பாடின. இது ஏதோ பெரிய அரசியல் வரலாறு போல வெகுஜனப் பத்திரிகைகள் ஒரு பக்கம், இரண்டு பக்கம் என முழுப்பக்க அளவிலான புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது. அதற்கேற்ப அந்த மாதம் முழுக்கவே மீடியாக்களில், பருவ இதழ்களில் எல்லாம் ரஜினி குறித்த அரசியல் செய்திகளே இடம் பிடித்தன. அவற்றில் நிறைய அரசியல் ஹாஸ்யங்கள் கற்பனைக்கு எட்டாத அளவில் றெக்கை கட்டிக் கொண்டது.

ஊர் ரெண்டு பட்டா யாருக்கு கொண்டாட்டமோ இல்லையே. நடிகர்களை ரெண்டுபடுத்தி திராவிடக் கட்சிகள் கொண்டாடப் பார்த்தன. அவர்கள் ஆசையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் ரஜினி. பாரதிராஜா தலைமையிலான அணியினர் நெய்வேலிக்கு போகிற அதே நாளில் சென்னையில் உண்ணாவிரதம் என்று ரஜினி அறிவித்ததும், அரசியல் கட்சிகளுக்கு ஏக குஷியாகின. பிரியும் இரண்டு அணிகளை ஆளுக்கொரு பக்கமாக இழுத்துக்கொண்டு தங்கள் கட்சிகளை பலப்படுத்திக் கொள்ளப் பார்த்தார்கள்.

திடீரென்று விஜயகாந்தின் வேண்டுகோளை ஏற்று சனிக்கிழமை நடக்கவிருந்த உண்ணாவிரதத்தை ஒத்திவைத்து, 'கலை உலகில் புகுந்து யாரும் பாலிடிக்ஸ் பண்ண விட மாட்டேன்' என்று மறைமுகமாக குட்டு வைத்துவிட்டார் ரஜினி. முன்பு இதே காவிரி விவகாரத்தில் கடற்கரையில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தபோது முதல் ஆளாக ஆதரவுக் குரல் கொடுத்தவர்தான் ரஜினி. அதே வியூகத்தை கையில் எடுப்பது விறுவிறுப்பான அரசியல் சுழற்சிதான். ஆரம்பத்தில் ரஜினியை பின்னால் இருந்து இயக்கியவர் திமுக தலைவர் மு.கருணாநிதி என்பது கோடம்பாக்கம் அறிந்த ரகசியம்.

போட் கிளப் ரோட்டில் ரஜினி வாடகைக்கு குடியிருக்கும் மூன்றாவது மாடி அப்பார்ட்மென்டில் புதனன்று நிருபர்களை சந்திப்பதற்கு முன்பு கருணாநிதியுடன் அவர் போனில் பேசினார். அதன் எதிரொலியாகத்தான் அன்றைய பிரஸ் மீட்டின் தொடக்கத்திலேயே 'தாங்ஸ் டூ கலைஞர்' என்று நன்றி சொன்னார் ரஜினி. அவரையும் அறியாமல் பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது. 'இப்படிச் சொல்லியிருக்க வேண்டாம்' என்று பின்னர் திமுக ஆதரவு நடிகர்கள் ரஜினியிடம் சொன்னபோது மென்மையாக சிரித்துக் கொண்டார்.

தனக்குப் பின்னாலிருந்து இந்தக் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் யார் என்று தெரியும். அவர்களை தேர்தலில் பார்த்துக் கொள்வதாக சொல்லியிருக்கிறார் ரஜினி. அப்படியென்றால் அவர் மக்களவைத் தேர்தலில் (2004) திமுக பக்கம்தான் என சிலர் நினைத்தனர். அந்த எதிர்பார்ப்பிலும் ரஜினி மண்ணள்ளிப் போட்டிருக்கிறார். சனிக்கிழமையன்றே உண்ணாவிரதம் நடத்தியிருந்தால், நிச்சயம் திமுக ஆதரவு நடிகர்கள் மட்டுமே அவரோடு உண்ணாவிரதப் பந்தலில் காட்சி தந்திருப்பார்கள். அந்த கறுப்பு சிவப்பு கலர் தனக்கு வேண்டாம் என்றுதான் கலை உலகத்தின் மற்ற பிரபலங்களும் தன்னருகில் இருக்கும்படி ஞாயிற்றுக்கிழமைக்கு தள்ளிப்போட்டார்.

ரஜினி வெளிப்படையாக காவிரி பிரச்சினையில் குதித்தால், அவருக்கு எதிராக கர்நாடகத்தில் தீப்பொறி பறக்கும் என்று கணக்குப் போட்டுதான் இங்குள்ள ஆளும் கட்சி கலையுலகத்தை இயக்கி அவரை உசுப்பிப் பார்த்தது. ஆனால் ரஜினியின் உண்ணாவிரதம் முடிவை கர்நாடகா முதல்வர் கிருஷ்ணா வரவேற்றுப் பேசியிருப்பது இவர்களை அதிர்ந்து போகச் செய்தது. தனது முடிவை அறிவிப்பதற்கு முன்பு தனது நிலையை தெளிவுபடுத்தி ரஜினி போனில் பேசிய முக்கியமான சிலரில் கிருஷ்ணாவும் ஒருவர்.

- பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x