Published : 09 Mar 2018 06:37 PM
Last Updated : 09 Mar 2018 06:37 PM
வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், முழு அடைப்பு இவற்றில், எதுவாயினும், அது தமது உணர்வை எழுச்சியுடனும், அறவழியில் அமைதியாகவும், அறிவிக்கக்கூடிய ஒரு வழிமுறையாகவும் இருக்க வேண்டுமே தவிர வன்முறைக்கு இடம் தரும் வகையில் நிச்சயமாக நடந்து கொள்ளக்கூடாது. முதல்வரின் வாழ்த்து பெற்று இயக்குநர் பாரதிராஜா தலைமையில் 12-ம்தேதி அறிவிக்கப்பட்டுள்ள பேரணி, தமிழக கலைஞர்களின் உணர்வு அடிப்படையிலான எதிர்ப்பை கர்நாடக அரசுக்கு தெரிவிக்கின்ற வகையிலே அமையும் என்று எண்ணித்தான் அதில் கலந்து கொள்ளுமாறு கழக கலைஞர்களுக்கும் தெரிவித்து இருந்தேன்.
ஆனால் அந்தப் பேரணி, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடைபெறுகிற பேரணி அல்ல என்றும், நெய்வேலி 2-வது மின்சார உற்பத்தி நிலையத்தில் தடையை மீறி நடத்தப்பட இருக்கும் கிளர்ச்சி என்றும், எத்தனை மணிக்கு தடையை மீறி உள்ளே நுழைந்து அந்த இடத்துக்கு செல்வோம் என்பதை முன்கூட்டி சொல்ல முடியாதென்றும், அது ரகசியமானதாக இருக்கும் என்றும் பாரதிராஜா பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி இருக்கிறது.
பெரியார் காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் எந்த போராட்டமாயினும் அது ஆர்ப்பாட்டம் என்றில்லாமல் தடையை மீறி மறியல் செய்து கைதாகிற போராட்டமாகவே இருந்தாலும் எந்த இடத்தில், எந்த தேதியில், எந்த நேரம், எத்தனை மணிக்கு என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு ஈடுபடுவதுதான் வாடிக்கை. அதற்கெல்லாம் நேர்மாறாக திரைப்படக் கலைஞர்கள் தடையை மீறுவோம் என்றும், அதையும் முன்கூட்டி எத்தனை மணிக்கு என்று சொல்ல முடியாது என்று அறிவித்து இருப்பதை பார்க்கும்போது இது எங்கே கொண்டு போய் விட்டு விடுமோ என்று அஞ்சிட வேண்டி உள்ளது.
முன்கூட்டி அறிவித்து, அமைதியாக நடக்கிற அற வழிப்போராட்டங்களில் கூட ஏதோ காரணங்களால் அமளியும், வன்முறையும் உருவாகக்கூடிய விளைவுகள் ஏற்பட்டு இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது. எனவே இவ்வாறு முன்கூட்டியே வன்முறையை வரவேற்பது போல திட்டமிட்டு தடையை மீறுவோம் என அறிவித்து அதில் திரைப்பட கலைஞர்களை ஈடுபடுத்தும் இந்த போராட்டத்தில் கழக கலைஞர்களுக்கும், கழகத்தினரும் கலந்து கொள்ள வேண்டாம். ஒரு வேளை அறவழியில் நடிகர் முறைப்படி நடிகர் சங்கமே ஈடுபட்டு முன்னின்று பொறுப்பேற்று, பேரணியோ, அமைதி ஆர்ப்பாட்டமோ நடத்தினால் அதில் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்பதே கருணாநிதி தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை.
அந்த அறிக்கை வெளியான தினத்தன்று இரவே திடீரென்று (அக்டோபர் 8, 2002) இரவு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். அதே வேகத்தில் அடுத்த நாள் மதியம் தனது வீட்டில் நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
அன்று சரியாக 12.30 மணிக்கு தன் வீட்டு மாடியிலிருந்து இறங்கி வந்த அவர் நீலநிற ஜீன்ஸ் பேண்ட்டும், காவி நிற டீ சர்ட்டும் அணிந்திருந்தார். மொட்டையடிக்கப்பட்ட தலையில் லேசாக முடி வளர்ந்த நிலையில் காணப்பட்டார். 'நான் விடுத்த அறிக்கையில் நான் இந்தியன், அப்புறம் தமிழன் என சொல்லியிருந்தேன். அதில் எந்தத் தப்பும் இல்லை. எனக்காக குரல் கொடுத்தவர், திமுக தலைவர் மு.கருணாநிதி. அவருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சினையை ரொம்ப பெரிசாக்கிட்டாங்க சிலர். என் மேல் உள்ள பொறாமையினாலலும் சிலர் என் மேல் உள்ள ஏதோ ஒரு பயத்தினாலும் இதை பெரிசாக்கிட்டாங்க. இந்த சமயத்தில் நான் அதை மேலேயும் பெரிசாக்க விரும்பலை. யார் இதை அரசியல் ஆக்கிட்டிருக்காங்களோ, யார் அரசியல் வேலை பண்ணிட்டு இருக்காங்களோ அவங்களை நான் வர்ற எலக்ஷன்ல பார்த்துக்கறேன். என் ரசிகர்கள் தயவு செய்து பொறுமையாக இருக்கணும். சாந்தமாக இருக்கணும். இது, நமக்கு சோதனைக் காலம். இதை சந்திப்போம்.
காவிரி பிரச்சினையில் நான் ஓர் அறிக்கை விட்டேன். இந்தப் பிரச்சினை தொடங்கியதும் நான் உங்களுக்கு ஆதரவு கொடுத்தேன். அதற்கு என்ன அர்த்தம்? உங்களுக்கு துணையாக இருக்கிறேன் என்றுதானே? இது சம்பந்தமா திரைப்படத்துறை சேர்ந்தவங்க என்னிடம் வந்து கேட்பாங்க. கலந்து ஆலோசிப்பாங்கன்னு எதிர்பார்த்தேன். யாரும் வரலை. நான் என்ன நியூயார்க்ல இருந்தேனா? சீனாவுக்கு போயிட்டேனா? இல்லை ரஷ்யாவிற்கு போயிட்டேனா? நான் உங்கள் நண்பன்தானே? எதிரியா? உங்களிடம் நான் அதை எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் வரலை.
இவ்வளவுக்கு பின்னாலயும் நடிகர் சங்கத்துக்கு வந்து நான் என் கருத்தை தெரிவிச்சேன். சிலர் நாகரிகமாகப் பேசினார்கள். இன்னும் சிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்கள். பரவாயில்லை. என் கருத்தை நான் நடிகர் சங்கத்தில் சொன்னேன். அங்கே பத்து பேரில் எட்டு பேர் நெய்வேலி போக வேண்டாம் என்ற கருத்தைத்தான் சொன்னாங்க. அப்புறம் நீங்களே முடிவு செஞ்சுக்குங்கன்னு விட்டுட்டேன். வந்துட்டேன். அப்புறம் நான் டெல்லி போய் பிரதமரை பார்க்க முயற்சி செஞ்சேன். முடியலை. பாபாஜி குகைக்கு போயிட்டு வந்துட்டேன்.
காவிரி பிரச்சனையை பிரதமரால் தீர்க்க முடியலை. இரண்டு மாநில முதல்வர்கள் தீர்க்க முடியாம திண்டாடறாங்க. அவங்களால தீர்க்க முடியாததை சினிமா உலகம் தீர்க்க முடியுமா? முடியாது. கர்நாடக திரைத்துறையினர் போராட்டம் நடத்தினாங்க. ஊர்வலமாக போய் மனு கொடுத்தாங்க. அவுங்க போராட்டம் நடத்தினாங்க. அதுக்காக நாமும் போராட்டம் நடத்தித்தான் ஆகணும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை யாறும் மறுக்கக்கூடாது.
நீதிமன்றம்தான் இந்த நாட்டை காப்பாற்றுகிறது. சுப்ரீம் கோர்ட்டை மதிக்காமல் கர்நாடகாவில் தண்ணீர் விட மாட்டேன்னு சொல்றாங்க. நாம் தண்ணீர் விடணும்னு கேட்டுப் போராடுவோம். வர்ற 13-ம் தேதி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை. பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது. இந்தப் போராட்டத்தை சென்னையில் வைத்துக் கொள்ளலாம். ஊர்வலம் நடத்தி கவர்னரிடம் மனு கொடுக்கலாம். கவர்னர் யாரு? மத்திய அரசின் பிரதிநிதி. அதன் மூலமாக மத்திய அரசின் கவனத்தைத் திருப்பலாம்.
இந்தப் போராட்டத்திற்கு நான் வருகிறேன். அதற்கு நானே தலைமை தாங்குகிறேன். இப்படிப் போராட்டம் நடத்தினால், மத்திய அரசுக்குத் தெரியாதா? நெய்வேலிக்குத்தான் போகணும் என்கிறார்கள். அத்தனை பேரை வைத்துக் கொண்டு அங்கே போ், மின்சாரத்தை நிறுத்துன்னா நிறுத்திடுவாங்களா? அது மத்திய அரசு நிறுவனம். அப்படி அவங்க நிறுத்தலைன்னா உடைச்சிடுவீங்களா? அடிச்சு துவம்சம் செஞ்சிடுவீங்களா? 40 லட்சம் தமிழர்கள் கர்நாடகாவில் வாழ்றாங்க. இங்கே மின்சாரத்தை நிறுத்தினால், அவங்க நிலைமை என்ன ஆகும்?
அவங்க உயிருக்கும், பொருளுக்கும் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? கொடுங்க... கொடுங்க. கர்நாடகத்தை சேர்ந்த தமிழர்கள் எத்தனை பேர் என்கிட்ட போன் பண்ணி அழறாங்க தெரியுமா? நான் எதற்கும், யாருக்காகவும் பயப்பட மாட்டேன். மனசாட்சிக்கும் ஆண்டவனுக்கும் மட்டுமே பயப்படறவன்.
27 வருஷங்களாக சம்பாதித்த பேரும், புகழும் அந்த ஒரு படத்தில் போயிடுச்சுன்னா அந்தப் பெயரும் புகழும் எனக்கு தேவையே இல்லை. நியாயமாக கொடுத்த ஒரு அறிக்கையினால் 27 வருட பெயரும் புகழும் போயிடுச்சுன்னா அநு்த பெயரும் புகழும் தேவையில்லை. ஆமாம் எனக்கு அந்த 27 வருட பேர் புகழ் போனாலும் கவலையில்லை.
என்னை எங்கே போகச் சொல்றீங்க? கர்நாடகத்துக்கா? கர்நாடகத்துக்கு போனா நீ தமிழன்கிறாங்க. இதுவும் வேண்டாம்; அதுவும் வேண்டாம் மகாரஷ்டிராவுக்கு போனல் நீ மதராஸிங்கிறாங்க. நான் எங்கேதான் போறது? நான் என்ன தப்பு செஞ்சேன்? என்ன விளையாடறீங்களா? அப்பாவி மக்களை, பொதுமக்களை, மாணவர்களை திசை திருப்பாதீங்க. எனக்கு நெய்வேலி போக பயமே கிடையாது. ஆண்டவன் இருக்கான். ஆனால் ஒண்ணு. நீங்க முடிவு எடுங்க. இங்கேயா? அங்கேயா?
அதே 12-ம் தேதி நான் நடிகர் சங்கத்துல, அல்லது பிலிம் சேம்பர் அல்லது வள்ளுவர் கோட்டத்தில் அமைதியாக உண்ணாவிரதம் இருக்கப் போறேன். சம்மதம் சொல்றவங்க என்னோட வாங்க என்று சரமாரியாக உணர்வு பொங்கியவரிடம் நிருபர்களில் ஒருவர், 'உங்கள் முடிவை நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்திடம் சொல்லீட்டீங்களா?' எனக் கேட்டார். அதற்கு ரஜினிகாந்த் தெரிவித்து விட்டேன் என்று பதில் அளித்திருந்தார்.
- பேசித் தெளிவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT