Published : 07 Mar 2018 07:32 PM
Last Updated : 07 Mar 2018 07:32 PM

ரஜினி அரசியல்: 31 -ஆதி அந்தமுமாகி நிற்கும் காவிரி

ஜோதிடர்களின் ஆருடம், ஜாதக பலாபலன் கணிப்பு ஆனாலும், சாமியார்கள் அருள்வாக்கு, நாடி வாக்கு என்றாலும், அதில் கலந்து வரும் சுவாரஸ்யங்கள், ஜோடனைகள், புனைவுகள், அரசியல் ரசபாச விமர்சனங்கள் எல்லாவற்றுக்குள்ளும் மக்களுக்கான ஈர்ப்பு கலந்திருக்கிறது.

அதுவே தாங்கள் அன்றாடம் தரிசித்து, ஆகர்ஷித்து, போஷிக்கும் பிம்பம் பற்றியதானதாக இருக்கும் போது மிகுந்த உற்சாகமும், அதீத தீவிர மயக்கமும் கொள்கிறார்கள். மகுடிக்கு பாம்பு கட்டுப்படுவதில் அறிவியல் உண்மை இருக்கிறதோ இல்லையோ, இந்த மாய அலைவரிசையில் கிரக்கமும், போதையும் ஒரு சேரவே இருக்கிறது. அதில் உள்ளூர் வர்த்தகம் முதல் உலக வர்த்தகம் வரை கலந்தும் இருக்கிறது.

அதனால் அது முழு அளவிலான அரசியலுக்கும் பயன்பட்டு பதவி நாற்காலிகளை தீர்மானிக்கிறது. ஒன்றைப் பற்றி ஒன்றே ஒன்று பேசினால் அது அதற்கு மட்டுமேயானதாக உள்ளது. அதுவே ஒன்றை/ஒருவரை பற்றி ஒரு கோடி பேர் பேசினால் அது எல்லாமுமாகிறது. அதற்கான பிரபல்யமும், விளம்பரமும் கூட புதிதாக வரும் ஒன்றுக்கு/ஒருவருக்கு அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுவதில்லை.

அதற்காக எத்தனையோ அரசியல்வாதிகள் தங்களைத் தாங்களே 'டிக்ளேர்' செய்து கொண்டு காத்துக் கிடக்க, 'முதலமைச்சராகிய நான்..!' என்று பதவி பிரமாணம் எடுப்பது போல் கட்-அவுட், பேனர்களை வரிசையாக தங்களுக்கு தாங்களே கட்டியபடி கட்டியம் கூறிக் கொண்டிருக்க, அவர்களுக்கெல்லாம் கிடைக்காத அந்த அரசியல் அந்தஸ்து/ கற்பனா வடிவிலான அந்த ஜோதிட அந்தஸ்து/ மீடியாக்களின் அளவு கடந்த வெளிச்சம், 'அரசியலுக்கு வரவே மாட்டேன்; அது காலத்தின் கையில் இருக்கு!' என்று பிடிவாதம் பிடித்தே வந்த ரஜினி என்ற நடிகருக்கு மட்டுமே அபரிமிதமாய் கிடைத்திருக்கிறது. இப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

ரஜினி அரசியல் என்று ஒற்றை வார்த்தையை ஒரு தாளில் எழுதி சுருட்டிப் போட்டால் கூட, அது கொஞ்சம் தன்னெழுச்சியாக புறப்பட்டால் போதும் பதறியெழுகிறது ஒரு பெரும் கூட்டம். அந்தக் கூட்ட வெளியில் எல்லாம் காத்திருப்பின் அடையாளமும், காத்திருத்தலை அர்த்தமில்லாது ஆக்கி விடுமோ இந்த வருகை அதி தீவிர பய உணர்ச்சியையுமே அளவிட முடிகிறது. அது கூட அந்த ஒற்றை சொல்லுக்குரிய மனிதருக்கான பிரபல்யத்தையும், தன்னிகரில்லாத எழுச்சியையும் தந்து விடுகிறது.

'ரஜினிக்குள் கெட்ட தேவதைகள் புகுந்து விட்டன!' என்று 'கோட்- சூட்' சித்தரும், 'பாபா முதல்வர் ஆகியே தீருவார்!' என்ற நாடி ஜோதிடரின் வாக்கும், 'மக்கள் அத்தனை பேரும் தங்கள் அவல நிலையுணர்ந்து ரஜினி அரசியலுக்கு வந்தே ஆக வேண்டுமென கூவி அழைக்கும்போது அவரை நானே அனுப்பி வைப்பேன்!' எனச் சொன்ன ரஜினியின் ஆன்மிக குரு சுவாமி சச்சிதானந்த மகராஜின் கூற்றுக்கெல்லாம் உயிர் சக்தி இருக்கிறதோ இல்லையோ அடுத்த சில மாதங்களிலேயே காவிரி விவகாரத்தின் மூலம் திரும்ப தமிழகத்தின் முன்னிலைப்படுத்தப்பட்ட அரசியலுக்கு வருகிறார் ரஜினி.

கர்நாடகா அரசு அங்கே அணைகள் கட்டி தனக்கே தனக்கு என தண்ணீரை தேக்கி விட்டு, தமிழகத்தை கழிமுகப் பிரதேசமாக ஆக்கியதென்பது இந்த ஜனநாயகத்தின் சாபகேடாகிப் போன நிலையில் தமிழகம் தன்னுரிமைக்காக எத்தனையோ போராட்டங்களை சந்தித்திருக்கிறது. ஆனால் ரஜினி என்ற நடிகனை முன்னிலைப்படுத்தி தமிழன் தன் வியர்வைத் துளிகளால் சம்பாதித்த தங்கக் காசுகளை அந்த ரஜினி சக்தியை நோக்கியே விட்டெறிய ஆரம்பித்த பின்பு நிலைமையே வேறு திக்கில் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டது.

ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை. ஒரு கட்சியின் வார்டு செயலாளராக இருந்ததில்லை. கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி. பதவிகள் அனுபவித்ததில்லை. ஆனால் பெங்களூரு மண்ணிலிருந்து ரயிலேறி வந்ததனால் தமிழகத்திற்கு முறைப்படி வர வேண்டிய காவிரி தண்ணீரை அவரே தடுத்தாட் கொண்டு விட்டது போல் முழங்குகின்றன சில அரசியல் எதிர் வளையங்கள். அந்த கண்ணுக்குத் தெரியாத இறுக்கமான வளையத்தின் கடுமையான இறுக்கமென்பது 2002 அக்டோபர் மாதத் தொடக்கத்திலேயே சுனாமியாய் தமிழகத்தில் சுழன்றது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கபினியில் போதிய அளவு தண்ணீர் திறந்துவிடப்படாமல் இருக்க, தஞ்சையில் நெற்பயிர்கள் துளிர்த்த வேகத்தில் கருக, புறப்பட்டது கிளர்ச்சி. மத்தியில் பாஜக ஆட்சி. மாநிலத்திலோ அதிமுக அரசு. தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் பலவும் கர்நாடகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கின. இந்த நேரத்தில் அதிமுக-திமுக அரசியலுக்கு பகடைக்காயாய் பயன்பட்டது தமிழ்த் திரையுலகு.

காவிரியில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகத்திற்கு பதிலடியாக தமிழகத்தின் நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தரக்கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டம் ஆரம்பித்தனர் தமிழ்த் திரையுலக கலைஞர்கள், தொழிலாளர்கள். இதற்காக 2002 அக்டோபர் 12-ம்தேதி நெய்வேலி நோக்கி மாபெரும் பேரணி செல்வது மத்திய அரசின் நிறுவனமான அனல்மின் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்துவதுதான் திட்டம்.

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான கலையுலக காவிரி போராட்டக் குழு சார்பில் அறிவிக்கப்பட்ட இப்போராட்டத்தை , நெய்வேலியில் வேண்டாம்; சென்னையில் நடத்தலாம். அதற்கு முன்பாக இது விஷயத்தில் பிரதமரை சந்தித்து பேசலாம். அவரிடம் கோரிக்கை கொடுக்கலாம் என்றெல்லாம் ரஜினிகாந்த் யோசனை தெரிவித்தததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை நிராகரித்து விட்ட போராட்டக்குழு பேரணி, ஆர்ப்பாட்டம் நடக்கும் இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டது. அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த பாரதிராஜா, 'போராட்டத்துக்கு அனுமதி கிடைக்காவிட்டால் தடையை மீறி போராடுவோம்!' எனவும் ஆவேசமாக பேசியிருந்தார்.

அந்தக் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்ததோடு அவர் நெய்வேலி போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என்றும் தகவல் வெளியானது.இதற்குள் எந்த மாதிரியான அரசியல் ரகசியங்கள் இருந்ததோ, மீடியாக்கள் விதவிதமாய் செய்திகளை அள்ளித் தெளிக்க ஆரம்பித்து விட்டன. அதிலும் ரஜினிகாந்த் கன்னடர், பெங்களூருவில் சொத்து வாங்கிக் குவித்திருப்பவர். கர்நாடகாகவிற்கு எதிராக எந்தப் போராட்டமும் செய்ய மாட்டார். தமிழர்களுக்கு எதிர்நிலை எடுக்கிறார் என்றெல்லாம் கடும் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதன் பின்னணியில் வெடித்த அரசியல் சாதாரணமானதல்ல. கோபம், குதர்க்கம், பணிவு, தன்னடக்கம், வெகுளி, ஆத்திரம், ஆசை, சூழ்ச்சி, சந்தேகம், சபலம் என மனித குணத்தில் எத்தனை உணர்ச்சிகள் உண்டோ அத்தனையும் அரங்கேற்றம் கண்டது. அந்தக் காலகட்டத்தில் அத்தனை தினசரிகளும், பருவ இதழ்களும், மீடியாக்களும் இந்த செய்திகளைத்தான் பக்கம் பக்கமாக தாங்கி வந்தன. இதனுள்ளும் ஆதி அந்தமான பொருளாக ரஜினி என்கிற நடிகரே நிறைந்திருந்தார்.

இந்தப் போராட்டத்தை நடத்த நடிகர் சங்கம் உள்ளிட்ட 8 அமைப்புகள் திட்டமிட்டு அதற்கான கள வேலைகளில் இறங்கியிருந்தபோதே பல்வேறு கருத்துகள் தெரிவித்தார் ரஜினிகாந்த். இவர்களின் போராட்டத்திற்கு எதிர்வினையாக டெல்லி புறப்பட்டு போனார். அங்கே பிரதமர் வாஜ்பாயை சந்தித்து காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை வைக்க முயற்சி செய்தார். அவரால் பிரதமரை சந்திக்க முடியவில்லை. வாஜ்பாய் வெளிநாடு சென்று விட்டார் என்ற தகவல் கிடைக்க, இவர் ரிஷிகேஷ் சென்றுவிட்டார்.

இதற்கிடைப்பட்ட நேரத்தில் நெய்வேலி போராட்டத்தில் திமுகவினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி. அப்போது வெளியிட்ட அறிக்கை ரஜினிகாந்தின் கருத்தையே வலியுறுத்துவதாக இருந்தது.

- பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x