Published : 15 Mar 2018 03:51 PM
Last Updated : 15 Mar 2018 03:51 PM
நிறைய சுவாரஸ்ய சம்பவங்களுடன் நெய்வேலியில் கலையுலகத்தினர் திரண்ட திரளான கூட்டத்தில், 'எதிரிகளை மன்னிக்கலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது!' என்று ஆவேசமாகப் பேசினார் பாரதிராஜா.
அவர் அப்போது பேசியதன் சுருக்கம்:
தமிழன் என்றால் உணர்ச்சி வசப்படுபவன்தான். உணர்ச்சி வசப்பட்டவன்தான் மனிதன். உணர்ச்சியில்தான் உண்மையும், உறுதியும் இருக்கும். நான் உணர்ச்சி வசப்பட்டுத்தான் பேசுவேன். கடந்த கால் நூற்றாண்டுகளாக தமிழன் இப்படி பயந்து, பயந்துதான் உள்ளனர். தமிழ், தமிழ் என்று பேசிக் கொண்டு இந்த சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டனர். கொஞ்சம் உசுப்பி விட்டால் தமிழன் விண்ணுக்கும், மண்ணுக்கும் உயர்ந்து நிற்பான் என்பது இப்போது தெரிகிறது. காவிரி நீர் பிரச்சனை இன்று விசுவரூபம் எடுத்துள்ளது. இதற்கு யார் காரணம். கடந்த 70 ஆண்டுகளாக நாம் கண்மூடி இருந்துள்ளோம்.
இந்தக் காலத்தில் பல அணைகளை அங்கே கட்டி விட்டனர். இந்த பைத்தியக்கார தமிழன்தான் ஒரு போகம் விளைவித்த அவர்களுக்கு 3 போகம் விளைவிக்கவே கற்றுத்தந்தான். மத்திய அரசு, காவிரி நீர் ஆணையம், சுப்ரீம் கோர்ட் ஆகியவை கூறியும் கேட்கவில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கே கட்டுப்பட மாட்டேன் என்று கூறும்போது கர்நாடகா என்ன அண்டை மாநிலமா, அண்டை நாடா? என்று சந்தேகமாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல் ஒன்றுமே இல்லை.
தவிச்ச வாய்க்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லுவது என்ன நியாயம்? நாம் கொஞ்சமும் ஒற்றுமையில்லாமல் உறங்கிக் கிடந்தால் என்ன செய்வது, அவர்கள் போராட்டம் நடத்தலாம். உருவ பொம்மை எரிக்கலாம். இப்போது ஒரு தார்மீகமான பேரணி நடந்துள்ளது. தமிழன் கண்ணியமானவன் என்பதற்கு இந்தப் பேரணியே சாட்சி. இந்த ஊர்வலத்திலோ, வேறு இடங்களிலோ யாராவது உருவ பொம்மையை, படத்தை எரித்துள்ளோமா? நாம் கண்ணியத்தை காத்துள்ளோம். அங்கே தமிழக அமைச்சர்களின் கொடும்பாவிகளை எரிக்கின்றனர். பாரதிராஜாவிற்கு தர்ப்பணம், சத்யராஜூக்கு சடங்கு என்கின்றனர்.
இருந்தும் நாங்கள் அமைதி காக்கிறோம். நாம் கண்ஜாடை காட்டினால் எரிந்து இருக்கும். ஆனால் நாங்கள் அறவழியில், அமைதி வழியில் போராடுபவர்கள், இதைக்கூறக்கூட எனக்கு பயமாக உள்ளது. ஏனென்றால் அறவழி என்றாலே அரிவாள், அமைதி வழி என்றால் தீ என்று யாராவது தயவு செய்து வர்ணம் பூசி விடாதீர்கள். நான் அதிகமாக படிக்கவில்லை. புழுதி மண்ணில் புரண்டு வந்திருப்பதால் நான் இந்த மண்ணைப் படித்தவன். நெய்வேலியில் போராட்டம் நடத்தினால் தண்ணீர் வந்து விடுமா? சென்னையில் போராட்டம் நடத்தக்கூடாதா? எனக் கேட்கின்றனர்.
மின்சாரத்தை தடை செய்வதா நம் நோக்கம். நமது தார்மீக உணர்வை காட்டுவதுதானே நோக்கம். சென்னையில்தான் நூற்றுக்கணக்கான முறை போராட்டம் செய்து பார்த்துவிட்டோமே. எங்கள் மண்ணில், எங்கள் உழைப்பில், வியர்வை சிந்தி தோண்டியெடுத்த நிலக்கரியை கொண்டு இங்கே மின்சாரம் தயாரித்து அங்கே அனுப்பப்படுகிறது. இங்கே நடத்தினால்தான் உணர்வுப்பூர்வமாக இருக்கும் என்று இங்கே போராட்டம் நடத்துகிறோம். அதை தமிழர்களாக நீங்கள் அணி, அணியாக திரண்டு வந்து உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.
நம்மை பிரித்தாளுபவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஊர்வலத்திற்குப் போனால் தண்ணீர் வருமா என்று கேட்கிறார்கள். உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் தண்ணீர் வந்து விடுமா? நமக்கு கண்டனம். ஆனால் உண்ணாவிரதம் இருப்பாராம். அவருக்கு வாழ்த்தாம். இன்னும் நீ விழித்துக் கொள்ளவில்லை என்றால் உன்னைப் போல, என்னைப் போல மடையன் யாருமில்லை. பிரித்தாளுவதை ஆங்கிலேயன்தான் செய்தான். இங்கே தமிழனை தமிழனே செய்கிறான். ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தும் ஒன்றாக பேரணியை நல்ல முறையில் நடத்த உதவிய விஜயகாந்துக்கு நன்றியை கூறுகிறேன்.
கிருஷ்ணா, எங்களை கொளுத்தாதே. கொளுத்துவதை வேடிக்கை பார்க்காதே. நாளைய உண்ணாவிரதத்திற்கு வாழ்த்து கூறுகிறார். உங்களுக்குள் அண்டர் கிரவுண்டில் நிறைய இருக்கலாம். அங்கே 40 லட்சம் தமிழர்கள் உள்ளார்கள் என்றால் என்ன அர்த்தம்? காட்டி தருகிறாயா? இங்கே கன்னடர்கள் உள்ளனர் என்று விஜயகாந்த் கூறினார். முரளியும், அர்ஜூனும் கன்னடர்கள்தான். ஆனால் தமிழர்களுக்காக இங்கே வந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும்.
இந்த பூமியில் நட்ட விதை, இந்த பூமியை உறிஞ்சி வளர்ந்து மரமாகி உள்ளது. நீ இங்கே காற்றை சுவாசிக்கலாம். ஆனாலும் நல்ல கனியை, பூக்களை தர வேண்டும். நிழலாவது தர வேண்டும். முடியாவிட்டால் காய்க்காதே. விஷ விதையை இந்த பூமியில் போடாதே. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இது. இங்கே உள்ளவர்களுக்கு இங்குள்ள சிரமம் புரிய வேண்டும். குக்கிராமத்தில் உள்ள முனியாண்டியை தெரிந்து கொண்டிருக்க வேண்டும். தமிழக மக்களின் வாழ்க்கையை தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாதவர்கள் தப்புக் கணக்கு போடாதீர்கள். எதிரிகளை மன்னிக்கலாம். துரோகிகளை மன்னிக்காதீர்கள்.
நான் நெப்போலியனை நடிகராக்கும்போது எந்தக் கட்சியை சேர்ந்தவர் என்றா பார்த்தேன். விஜயகாந்த் சங்கத்திற்கு வரும்பாது எந்தக் கட்சி என்றா பார்த்தேன். உங்கள் படத்தைப் பார்ப்பவர்கள் எந்தக் கட்சி என்று பாகுபாடு உணர்ந்தா பார்க்கின்றனர். இங்கே குழப்பம் விளைவிக்காதீர்கள். இந்த மேடையை சுத்தப்படுத்துகங்கள் என்றேன். அதையும் கறையாக்கி விட்டார்கள். நாம் கலைஞர்கள், நீயும் நானும் சகோதரர்கள்.
நான் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன். ஆனால் சில விஷயங்களுக்கு அரசியல் சாயம் பூசி விட்டனர். இத்தனை கலைஞர்களும், மக்களும் இங்கே வந்து கட்டுக் கோப்பாக ஊர்வலம் நடக்க காவல்துறையே காரணம். பாதுகாப்பு தாருங்கள் என்று தமிழக அரசைத்தானே கேட்க முடியும். தமிழக முதல்வரைத்தானே கேட்க முடியும்? தனியார் செக்யூரிட்டியிடமா கேட்க முடியும்? தமிழகத்தில் இரண்டு முதல்வர்களா உள்ளார்கள்? ஊர்வலம் நடத்தும்போது கலைஞர்கள் மீது ஒரு தூசி கூடப் படியக்கூடாது என்று போலீஸ் அதிகாரிகளை அழைத்து முதல்வர் கூறினார்.
ஆனால் நெய்வேலியில் பிரச்சினை வருமோ என சிலர் கூறினர். எனக்கு குதர்க்கமாக பேசி பழக்கமில்லை. அவர் கூப்பிட்டு அறிவுரை கூறியிருக்கலாம். யார் வேண்டுமானாலும் களங்கப் படுத்தட்டும். நான் சுத்தமானவன். யாரும் என்னை எந்த கட்சியிலும் இழுத்து விட முடியாது. நெய்வேலிக்கு செல்ல எத்தனை பஸ் வேண்டும் என்று கேட்டார். 120 பஸ்கள் வேண்டும் என்று கேட்க சங்கடமாக இருந்தது. இருந்தாலும் கேட்டேன். எனது சொந்த செலவில் 120 பஸ் தாருங்கள் என்று தமிழக முதல்வர் கூறினார். பிறகும் 31 பஸ் கேட்டேன். அதையும் தந்தார்கள். காவிரிப் பிரச்சனைக்காக ஒன்றுபட்டிருக்கும் நம் திரையுலகத்தை மறந்தால் தமிழகம் மன்னிக்காது!’
பாரதிராஜா தலைமையில் நடந்த காவிரிக்கான கலைத்துறையினர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை ஒருபங்கு என்றால் அடுத்தநாள் சேப்பாக்கத்தில் ரஜினிகாந்த் அமர்ந்து உண்ணாவிரதத்திற்கு வந்த கலை உலகத்தினர் எண்ணிக்கை இரட்டிப்பானது. அதை விட அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. கலைத்துறையினரும், அரசியல்வாதிகளும் கலந்து கொண்டதால் அதில் அதீதமான அரசியலும் உருண்டோடியது.
ரஜினிகாந்த் அறிவித்திருந்தபடி 2002 அக்டோபர் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணிக்கு தன் போட் கிளப் ரோட்டின் வீட்டிலிருந்து கிளம்பினார். அப்போது அவரை பத்திரிகை புகைப்படக்காரர்கள் சூழ்ந்தனர். அவர்களிடம், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசை கண்டித்தும், தமிழ்நாட்டுக்கு உடனே காவிரி நீரை விட வேண்டும் என்று கோரியும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்!' என்ற தகவலை தெரிவித்தார் ரஜினி.
நிருபர்கள் விடாமல், 'உங்களை பாரதிராஜா துரோகி என்பது போல் பேசியிருக்கிறாரே?' என்று கேட்க, 'அவர் உணர்ச்சி வசப்பட்டு அப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்திவிட்டார். அது சரியல்ல!' என்று ஒற்றை வரியில் கருத்து தெரிவித்து விட்டு காரில் ஏறினார்.
தொடர்ந்து 8 மணிக்கு உண்ணாவிரதப் பந்தல் மேடையை அடைந்தார். அப்போது அவர் வெள்ளை நிற பைஜாமாவும், குர்தாவும் அணிந்து இருந்தார். சட்டையில் கறுப்பு பேட்ஜூம் குத்தியிருந்தார். மொட்டைத் தலையுடன், சுத்தமாக சவரம் செய்யப்பட்ட முகத்துடன் காணப்பட்டார். உண்ணாவிரதத்திற்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த உண்ணாவிரத மேடையில் விரிக்கப்பட்டு இருந்த மெத்தையில் அமர்ந்து 8.05 மணிக்கு அமர்ந்தவர்தான். யாருடனும் எதுவும் பேசவில்லை.
- பேசித் தெளிவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT