Published : 04 Mar 2018 06:04 PM
Last Updated : 04 Mar 2018 06:04 PM
ஓம்பினி சோலையில் பூத்த மலர்
சீடர் ஒருவர் புத்தரைப் பார்த்து கேட்டார்: ''எல்லையில்லா ஆற்றல் பெற்றவன் மனிதன். அவனது ஆற்றல் வேறெந்த உயிருக்கும் வராதுதானே?''
கேள்வி கேட்ட அந்த சீடனுக்கு விளக்கமளிக்க... புத்தர் இந்தக் கதையைச் சொன்னார்:
ஒருத்தன் தேனீக்களைப் பார்த்து ரொம்பவும் பரிதாபப்பட்டான்.
அதற்கு தேனீ ஒன்று ''என்ன என்னைப் பார்த்து இவ்வளவு பரிதாபப்படுகிறாயே, என்ன விஷயம்?'' என்று கேட்டது.
அதற்கு அந்த மனுஷன் சொல்லியிருக்கிறான். ''நீங்களெல்லாம் கொஞ்ச நேரம்கூட சும்மாவே இருக்கறது இல்ல. எப்போ பார்த்தாலும் சுறுசுறுப்பாவே பூக்களைத் தேடித் தேடி அலையறீங்க. அப்படி காடு மேடு, மலை முகடு, தோட்டம் துரவுன்னு அலைஞ்சு துளித் துளியா தேனை உறிஞ்சிட்டு வந்து, தேனடையில சேர்க்கிறீங்க... ஆனா, அதை இந்த மனுஷப் பயலுங்க.... சத்தம்போடாம உங்க தேனை எடுத்துட்டு போயிடறாங்க. நீங்க தேனை உறிஞ்சிறீங்க... உங்க உழைப்பை மனுஷனுங்க உறிஞ்சிடுறாங்க... அதை நினைச்சுப் பார்த்தேன். அதான் பரிதாபப்பட்டேன்'' என்றான்.
அதற்கு தேனீ சொன்னது: ''உங்களுக்கு ஒரு விஷயம் தெரியலை... அதான் எங்களப் பார்த்து பரிதாபப்படுறீங்க... மனுஷங்களால... நாங்க சேர்த்து வெக்கிற தேனைத்தான் எங்கள்ட்டேர்ந்து புடுங்கீட்டுப் போக முடியும். எந்தக் காலத்துலேயும் பூக்கள்லேர்ந்து தேனை உறிஞ்சுற அந்தக் கலையை களவாடவே முடியாது''.
----------
ஜீப்ரா கிராஸிங்:
சீடர்களிடம் புத்தர் கேட்டார்.
''எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறீர்கள்தானே?''
அதற்கு விபத்திரன் என்கிற தலைமை சீடர் சொன்னான்.
''சீடர்களின் தலைவனாகிய நான் நாக்கு போன்று இருக்கிறேன். மற்ற சீடர்கள் பற்களைப் போல இருக்கிறார்கள். அதாவது நாக்கும் பற்களும் ஒற்றுமையாக உள்ளதைப் போல நாங்கள் இருக்கிறோம்!''
அப்படி சொன்ன தலைமை சீடர் விபத்திரனுக்கு புத்தர் சொன்ன கதை இது.
நாக்கைப் பார்த்து பற்கள் சொன்னது:
''நான் ஒரு கடி கடிச்சேன்னு வெச்சுக்கோ... துடிதுடிச்சுப் போயிடுவே!''
அதற்கு நாக்கு பதில் சொன்னது இப்படி:
''நான் ஒரே ஒரு சொல்லை மாத்தி சொன்னேன்னு வெச்சுக்கோ... நீங்க 32 பேரும் கழன்று கீழே விழுற நிலைமை வந்துடும்!''
புத்தரின் இந்தக் கதையைக் கேட்டு விபத்திரன் தலை தானே கீழே தொங்கியது!
----------
புத்தரின் மொழி: 1
யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.
புத்தரின் மொழி: 2
மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், குயவன் உண்டியலின் வாயை அத்தனை சிறிதாகப் படைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே!
----------
ஜீப்ரா கிராஸிங்:
''எந்த வேலை செய்வதாக இருந்தாலும் ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கு ஒருமுறை நம் கவனம் சிதறுகிறது'' - என்று முதன்முதலில் சொன்னவர் புத்தர்.
----------
ஜீப்ரா கிராஸிங்:
* புத்தர் உன் பாவங்களைக் கழுவி விட மாட்டார்.
* புத்தர் உன்னை பாவங்களில் இருந்து விடுவிக்க மாட்டார்.
* புத்தர் உனக்கு பதில் தாம் பிணையாக வந்து நிற்க மாட்டார்.
* புத்தர் நாம் கடைத்தேறுவதற்குரிய வழியைத்தான் காட்டியுள்ளார்!
- திபெத்திய தலாய்லாமா
--------------
புத்தர் வரலாறு - 5
மகா மாயா தேவியின் பரிபூரண உடல் தாய்மைக்கு கதவு திறந்தது. உள்ளோளி பிரகாசம் கொண்டதை விழிகள் வெளிச்சமாய் உணர்த்தின. மனமெங்கும் அன்பின் திருவிழா... ஆசைகளின் ஊர்வலம்.
மகா மாயா தேவி - தாயாகப் போகிற செய்தி காற்றை கிழித்துக்கொண்டு சுத்தோதனரின் காதின் கதவைத் தட்டியது.
அது, அன்பின் அழைப்பு மணி.
மகா மாயா தேவி கருவுற்றிருப்பதை அறிந்து அவருடைய கணவர் சுத்தோதனரின் மனசு ஆனந்தம் கொண்டது.
பிள்ளைப்பேறு தள்ளிப் போய்க்கொண்டே இருந்ததினால்.... தானும் தனது மனைவி மகா மாயா தேவியும் அடைந்த துயருக்கெல்லாம் இனி விடுதலை என்றெண்ணி... மகிழ்வின் தாழ்வாரங்களில் தவழ்ந்தது சுத்தோதனரின் மனம்.
சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனரின் குடும்பத் தொழில் - வேளாண்மை. தேவையைவிட அதிகளவில் செல்வ வளமும் பொருள்வளமும் பெற்றிருந்த வயல் மனிதர்களாகவே இருந்தனர் - சுத்தோதனரின் சுற்றமும் நட்பும். இதற்குக் காரணம் அணையற்ற நதிநீர் விவசாய நிலத்தில் பொன் பூக்க வைத்தது. மக்கள் நேரம் உதறி உழைத்தார்கள்.
உழைப்பு அவர்களை கவுரவித்தது. அந்த கவுரவம் செல்வமாகியது... பொன்னாகியது... பொருளாகியது. 'சுத்தோதன' என்கிற பெயருக்கு 'தூய்மை நிரம்பிய அரிசி' என்று பாலி மொழியில் அர்த்தம். இவரது சுற்றத்தின் பெயர்கள் எல்லாமும் கூட ஒரு வகையில் அரிசியுடன் தொடர்புடையதாகவே இருந்தது. சாக்கிய குல வாழ்வில் விவசாயத் தொழில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதற்கு இவை எடுத்துக்காட்டு.
அவர்களின் பெயர்களுக்குரிய அர்த்தங்கள் எல்லாம் - நல்ல அரிசி, கழுவிய அரிசி, வெள்ளை அரிசி என்பதாகவே இருந்தன.
சுத்தோதனர் - தனக்கு ஒரு வாரிசு வரப் போகிறதென்று தெரிந்துகொண்ட அந்த நொடியில்... தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த களஞ்சியங்களில் கொட்டி வைத்திருந்த நெல் மணிகளை எல்லாம்... எளியோருக்கு தானமாக வழங்கினார்.
அவருடைய மகிழ்ச்சியின் நீளம் பசித்தவர்களின் வயிற்றை நெல் மணிகளால் நிரப்பியது. அவருடைய அன்பின் சிறகு மேகங்களோடு சேர்ந்து பறந்தது. அவரை தந்தைமை பற்றிக்கொண்டு வாழ்வின் சாலைகளைக் கடந்தது.
அது ஒரு மன நிலை. அறுவடைக்கு அடுத்த பொழுதில்... வானத்தை நெல்வயல் அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருக்கிற தருணம் அது.
தன்னால் ஒரு ஜீவன் இந்தப் பூமிக்கு புதிதாக அறிமுகமாகிறது... என்கிற உணர்வு தருகிற நெகிழ்ச்சிக்கு இணையானது, வேறென்ன இருக்க முடியும்?
மகா மாயா தேவி கருவுற்று இருக்கிற செய்தி அறிந்த சுத்தோதனர், மனைவியின் உடல் நலம் கருதி, கொஞ்ச நாட்களுக்கு அவள் தனது தாய்வீட்டிலேயே பத்திரமாக இருக்கட்டும் என்று நினைத்தார்.
அது மட்டுமின்றி கருவுற்றிருக்கிற தனது மனைவியின் கண்களை சந்தித்து - அந்த வெளிச்சப் பார்வையில் இருந்து தனக்கான ஓராயிரம் குதிரை சக்தியை தருவித்துக்கொள்ள முடிவெடுத்த சுத்தோதனர், மாமனார் ஊருக்குப் பயணப்பட்டார்.
அந்த அந்திப் பொழுதில் தேவதகா கிராமத்துக்கு தனது குதிரை வண்டியில் வந்து இறங்கிய சுத்தோதனரை - ஊர் மக்கள் திரண்டு வந்து வரவேற்றனர்.
வீட்டு வாசலில் நின்றபடி சுத்தோதனரை - மாமனார் அஞ்சனரும் மாமியார் சுலக்ஷ்னாவும் வரவேற்றனர்.
உள் முற்றத்தில் கணவனின் வருகைக்காக காத்திருந்தாள் மகா மாயா தேவி.
நேராக சென்று தனது மனைவியைப் பார்த்தார் சுத்தோதனர்.
இருவரும் சிறிது நொடி பேசாமல் இருந்தனர். விலைமதிப்பற்றதாக இருந்தது அந்த மவுனம்.
சில நாள் பிரிவுக்குப் பிறகு கணவன் - மனைவி இருவரும் சந்தித்திருக்கிறார்கள். அதுவும் இனிப்பானதொரு செய்திக்குப் பிறகு நிகழும் சந்திப்பு.. அவர்களின் உரையாடல் தனிமையை விரும்பலாம். அஞ்சனரும், சுலக்ஷனாவும் அவர்களுக்கு தனிமையைப் பரிசாகத் தந்தனர்.
இருவர் கண்களிலும் கண்ணீரின் கொஞ்சல்.
தன் தாய்மைக்கு காரணமான கணவருக்கு நன்றி சொன்னாள் மகா மாயா தேவி. அவளது உள்ளங்கைகளில் நடந்தேறியது முத்தங்களின் பரிசளிப்பு விழா.
''மகா மிகவும் களைப்பாக இருக்கிறாய். கொஞ்ச நாளைக்கு இங்கேயே இரு. இன்னும் சொல்லப்போனால் நீயும் குழந்தையுமாகத்தான் கபிலவஸ்துவுக்கு திரும்ப வேண்டும். இங்கேயே இரு. உனக்கு ஆறுதலாக உனது தாயும் தந்தையும் உனது பக்கத்திலேயே இருப்பார்கள். கருவுற்று இருக்கிற இந்த நேரத்தில் உனக்கு தேவை நிறைய அரவணைப்பும் ஓய்வும்தான்'' என்று சொல்லிவிட்டு... மகா மாயா தேவியை பிறந்த வீட்டிலேயே விட்டுவிட்டு கபிலவஸ்துவுக்குப் புறப்பட்டார் சுத்தோதனர்.
காற்றென தேதிகள் பறந்தன.
பத்தாவது மாதம் - மிகுந்த ஆரோக்கியத்துடன் இருந்தாள் மகா மாயா தேவி. தன்னுடைய தேவைகளை தானே நிறைவேற்றிக் கொண்டாள், சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்து வந்தாள். சோம்பலாய்... அசதியில் எப்போதும் படுத்தே கிடக்கவில்லை. வயிற்றில் கருவை சுமந்திருந்தாலும் சுறுசுறுப்பாக இருந்தாள் அவள்.
மனசின் பலம் அவளது உடலிலும் நிரம்பியிருந்தது. காலையும் மாலையும் மெல்லிய நடைப்பயிற்சி மேற்கொண்டாள். பழம் உண்டாள். சிரிப்புடுத்தினாள். மனச்சிக்கலும் மலச்சிக்கலுமின்றி தென்பட்டாள்.
கி.மு.553-ம் ஆண்டு அது.
அன்றைக்கு வைசாக பவுர்ணமி நாள்.
அன்று காலையில் மெல்லிய நடைப்பயிற்சி மேற்கொள்ள... கிசாலி, பவினா என்கிற இரண்டு தோழிகளுடன் சென்றாள் மகா மாயா தேவி. கூட வந்த அந்த இரண்டு தோழிகளும் மகா மாயா தேவியை மிகுந்த அன்போடு கண்காணித்தனர். அவர்கள் இருவரும் மருத்துவம் அறிந்தவர்கள். எந்த சமயத்திலும் மகா குழந்தையை பிரசவிக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருந்தனர்.
அவர்கள் மூவரும் - சால மரங்கள் அடர்ந்திருந்த ஓம்பினி சோலை அருகே நடந்துகொண்டிருந்தனர். ஏதோ ஒரு சால மரம அருகே சென்றபோது - மகா மாயா தேவிக்கு இடுப்பு வலி வந்தது. நடுமுதுகில் தோன்றிய வலியானது பின் கழுத்து வரை பரவி திருகி எடுத்தது. அப்படியே சால மரத்தை பிடித்தபடியே நின்றாள் மகா மாயா தேவி.
தனக்குள் நிகழும் உள்வீட்டு யுத்தத்தை உணர்ந்துகொண்டாள் மகா மாயா தேவி.
சால மரத்தைப் பற்றிய அவளது கரத்தின் பிடிமானம் இறுகியது. ஆடாது அசையாது நின்றாள். பல்லை கடித்துக்கொண்டாள். மூளை சின்னச் சின்ன உத்தரவுகளைப் பிறப்பித்தது. சிலவற்றை உடல் உடனடியாக ஏற்றுக்கொண்டு அமல்படுத்தியது. சிலவற்றை புறம் தள்ளியது. அந்த உத்தரவுகளில் ஒன்றாக உடம்பு நெகிழ்ந்து கொடுத்தது. அந்த தளர்ச்சி அந்த சமயத்துக்குத் தேவையானதாக இருந்தது. ஆடைகளும் தனது இறுக்கத்தை தளர்த்திக்கொண்டன. கால்கள் அனிச்சை செயலாக அகண்டு நின்றுகொண்டன. நின்ற நிலையிலேயே மகா மாயா தேவி பிரசவித்தாள்.
வரலாற்றின் பூப்பக்கத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது.
கண் விழித்து பார்த்த மகா மாயா தேவியின் மார்பகத்தில் சின்னதாய் குறுகுறுப்பு. பச்சிளம் உதடுகளின் கவ்வலை அவள் விழிகளை முழுமையாக விரித்துப் பார்த்தாள்.
ஒருக்களித்த நிலையில் படுத்திருக்கும் தனது அருகில் ஒரு பூங்கொத்தை போல படுத்துகொண்டு, தாய்ப்பாலருந்தும் தனது குழந்தையை முதன்முதலாகப் பார்த்தாள் மகா மாயா தேவி. கண்ணீர் தித்தித்தது.
- இன்னும் நடப்போம்...
மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT