Published : 22 Mar 2018 09:45 AM
Last Updated : 22 Mar 2018 09:45 AM
புத்தகங்களில் இருந்து தோட்டாக்களைத் தயாரிக்கத் தெரிந்தவர் பகத் சிங். அவரின் தோள்ப் பையில் புத்தகமும் துப்பாக்கியும் சேர்ந்தே இருக்கும்.
வெள்ளையருக்கு எதிரானப் போராட்டத்தில் சுதந்திரம் என்பது முதல் கட்டம் என்றும், சுரண்டலுக்கு எதிரான போராட்டம்தான் இறுதிப் போராட்டம் என்றும் நம்பியவர் பகத் சிங்.
விவசாயிகள், தொழி லாளர்களின் அரசை அமைப்பதே முதன்மை குறிக்கோள் என்று முழக்கமிட்டவர். பகத் சிங்கும் நண்பர்களும் தங்களின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்க ‘நவஜவான் பாரத் சபை’யை அமைத் தனர்.
புரட்சி இயக்கத்தின் பகிரங்க மேடையாக அந்த அமைப்பு இயங்கியது.
புரட்சியின் முதல் புள்ளி
புரட்சி இயக்கத்தை பகத் சிங், சுகதேவ், பகவதி சரண், யஷ்பால் உள்ளிட்ட நண்பர்கள் சேர்ந்து தொடங்கியபோது அவர்கள் எல்லோருமே 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.
தாய் நாட்டின் விடுதலையோடு, சோஷலிச சமுதாயம் உருவாக வேண்டும் என்பது புரிந்த, முதிர்ந்த அரசியல்அறிவு கொண்டவர்கள்.
எனவேதான் அவர்களால் இந்தியா முழுக்க இருந்த புரட்சியாளர்களை ஒருங்கிணைக்க முடிந்தது. புரட்சிகர இயக்கத்தைக் கட்டமைக்க முடிந்தது. விளைவு, ஒருங்கிணைந்த ‘இந்துஸ்தான் சோஷசிஸ்ட் ஜனநாயக சங்கம்’ உருவானது.
இந்திய மக்கள் சுதந்திர மக்களாவதற்குரிய தகுதி பெற்றிருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்வதற்காக சைமன் குழு இந்தியா வருகிறது. சைமன் குழு செல்லுமிடமெல்லாம் விடுதலை உணர்வாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபடுகிறார்கள். லாகூரில் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் தலைமையில் சைமன் குழுவுக்கு எதிர்ப்பைக் காட்ட ஊர்வலம் நடக்கிறது. கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகிறது. லஜபதிராயை திட்டமிட்டே தாக்குகிறார்கள் காவலர்கள். தாக்குதல் நடந்த 18 நாட்கள் கழித்து, லஜபதிராய் மரணமடைகிறார். இந்தியாவை இச்சம்பவம் துயரத்தில் ஆழ்த்துகிறது.
பகத் சிங், சுகதேவ் உள்ளிட்ட புரட்சிக்காரர்கள் தன்னுடைய பங்களாவுக்குள் நுழையவே கூடாது என்று உத்தரவிட்டிருந்த லஜபதிராயின் மரணத்துக்கு, பகத் சிங்கும் தோழர்களும்தான் பதில் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். தாக்குதல் நடத்திய அதிகாரியில் இருவரில் ஒருவனை சுட்டுக் கொன்றார்கள்.
மரணம் தண்டனையல்ல
மத்திய சட்டமன்றக் கட்டிடத்தில் வெடிகுண்டு வீசி, பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுவர இருந்த தொழில் தகராறு மசோதாவின் மீதான வாக்கெடுப்பைத் தடுத்து நிறுத்த பகத்சிங்கும், படுலேஸ்கர் தத்தும் குண்டு வீசினார்கள். யாரையும் காயப்படுத்தாமல் வெறும் புகையை மட்டும் எழுப்பும் வெடிகுண்டு. வெடிகுண்டை வீசிவிட்டு அவர்கள் தப்பிச் செல்லவில்லை. கைதாகி நீதிமன்றத்துக்குச் செல்வதற்காக காவலர்கள் வந்து கைது செய்யும் வரை காத்திருந்தார்கள்.
நீதிமன்றத்தைத் தங்களின் பிரச்சார மேடையாக்கவே இம்முடிவு. தங்களின் வாதம் எடுபடாமல் போனால் நிச்சயம் தூக்குத் தண்டனைதான் என்று அவர்களுக்குத் தெரியும். தெரிந்தே மரணத்தை அணைத்துக்கொள்ளும் துணிவிருந்தது. காரணம் புரட்சியாளர்களுக்கு மரணமும் ஒரு போராட்ட வடிவம்.
மரணத்தைத் தழுவ வேண்டும் என்று விரும்பியவர்களுக்கும் மனித வாழ்வின் சராசரி விருப்பங்கள் இருந்தன. காதல், திருமணம், அமைதியான வாழ்க்கை இதிலெல்லாம் விருப்பம் இருந்தாலும் அவர்களின் கவனம் கொஞ்சமும் திசை மாறவில்லை. 5 அடி, 10 அங்குலம் உயரம் கொண்ட அழகனான பகத்சிங்கை பெண்களிடம் இருந்து காப்பாற்றுவது பெரும்பாடு என்று அவரின் நண்பர்கள் பெருமிதம் கொள்வார்கள். பகத் சிங்கின் குடும்பத்தினரும் விடுதலைப் போராளிகள்தான். மாமா, தந்தை, சிறிய தந்தை, தாய் என எல்லோரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
ஒரு கல்வெட்டு... மூன்று பெயர்கள்
போராட்டம் ஒன்றில் சிறை சென்றிருந்த பகத்தின் மாமாவும் தந்தையும் விடுதலையாகி வீடு திரும்பிய நாளில்தான் பகத் பிறந்திருக்கிறார். ‘எதிர்காலம்’ என்று பொருள்படும் ‘பகன்லால்’ என்ற பெயர் அதனால்தான் அவருக்குச் சூட்டப்பட்டது. வீட்டின் எதிர்காலமாக பெயர் சூட்டப்பட்ட பகத் சிங், புரட்சியின் முகவரியானார்.
சுகதேவ் ரசனையும், அழகியல் உணர்வும் நிரம்பியவர். மல்லிகைப் பூவைக் கழுத்தில் போட்டுக்கொண்டு, நாள் முழுக்க அதன் மணத்தில் திளைக்க விரும்பும் ரசனைக்குரியவர். மக்காச்சோளத்தை வீதியில் நடக்கும்போது கூட கடித்துத் தின்றபடி நடப்பார். ‘இந்த உலகம் அன்பால்தான் அழகு பெறுகிறது’ என்பதை ஆழமாக நம்பியவர். பகத் சிங்தான் உற்ற தோழன். எங்கு எப்போது பகத் சிங்கை சந்தித்தாலும் சேர்த்தணைத்துக் கொண்டு மூச்சுவிடாமல் பேசுபவர்.
சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த ராஜகுரு அண்ணனின் பராமரிப்பில் இருந்தவர். அவரின் கண்டிப்பான நடவடிக்கையால் 15 வயதில் வீட்டை விட்டு ஓடியவர், கடுமையான சூழல்களைக் கடந்து, காசி பாடசாலையில் சேர்ந்து சமஸ்கிருதம் படித்தார். பிடி சோற்றுக்காகவும் படிப்புச் செலவுக்காகவும் நாள் முழுவதும் ஓர் ஆசிரியருக்கு அடிமைபோல் வேலை செய்திருந்த ராஜகுருவின் வாழ்க்கைத் துயரம் நிரம்பியது. ‘இந்த உலகம் ஏன் இவ்வளவு அன்பில்லாமல் இருக்கிறது?’ என்று ஏங்கிய ராஜகுரு, பகத் சிங் மற்றும் நண்பர்களுடன் போராட்ட வாழ்க்கையில் இணைந்த பிறகே அமைதி கண்டார். மெலிந்த உடலைக் கொண்ட ராஜகுருவுக்கு, சிறையில் காவலர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தாங்கும் வலிமையை புரட்சி வாழ்வுதான் கொடுத்தது. எலும்புகள் நொறுங்க நாள் முழுக்க அடி வாங்கினாலும் சிரித்துக்கொண்டே வெளிவருவார்.
விடுதலைப் போராட்டத்தில் ஒன்றிணைந்து செயல்பட்ட மூவரின் பெயரும் வரலாற்றின் ஒரே கல்வெட்டில் பதிக்கப்பட்டது. லாகூர் சதி வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடைசி நிமிட வாசிப்பு
தூக்குத் தண்டனை பற்றி மூவரும் அச்சம் கொள்ளவில்லை. தங்களுக்காக மேல்முறையீடு செய்வதற்கு முயன்ற எல்லோரிடமும் கோபப்பட்டார்கள். இளவயது மகனின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கருணை மனு விண்ணப்பித்தார் என்றறிந்தபோது, பகத் சிங் தனது தந்தையிடம் கடுமையாக நடந்துகொண்டார்.
காந்தி நினைத்திருந்தால் மூன்று இளைஞர்களின் மரணத்தைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும், அல்லது தள்ளிப் போட்டிருக்க முடியும் என்பது காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பான்மையோர் கருத்து. காந்தி வைசிராய் இர்வின் பிரபுவிடம் பேசி, மரண தண்டனையை ரத்து செய்திருந்தால்கூட மூவரும் அதை ஏற்றிருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் தங்களின் உடலையே சுதந்திர வேள்விக்கு ஆகுதியாகத் தர நினைத்தார்கள். 1931, மார்ச் 23-ஆம் தேதி. லாகூர் மத்திய சிறைச்சாலை. நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு முதல் நாளே மூவரையும் தூக்கில் போட ஏற்பாடு செய்கிறது சிறை நிர்வாகம். தூக்கு மேடைக்கு பகத் சிங்கை அழைத்துப் போக வருகிறார்கள். ‘தி ரெவல்யூஷ்னரி லெனின்’ புத்தகத்தை ஆர்வமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். ‘ ‘ஒரேயொரு அத்தியாயம்கூட முடிக்க அனுமதிக்க மாட்டீர்களா?’’ என்று கேட்டபடி தண்டனைக்குத் தயாராகிறார்.
‘‘கடைசி ஆசை என்ன?’’ என்று கேட்கிறார் சிறை அதிகாரி.
‘‘நான் மீண்டும் இந்த மண்ணிலேயே பிறக்க வேண்டும். என் தாய் நாட்டுக்கான சேவையைத் தொடர வேண்டும்’’ என்கிறார் பகத் சிங். தங்கள் வழக்கின்மேல் அக்கறை கொண்ட பண்டிட் நேருவுக்கும், சுபாஷ் சந்திர போஸ்க்கும் நன்றி தெரிவிக்க கேட்டுக் கொண்டார்.
தூக்குமேடை. மரணம், தன் தோல்வியின் தீயில் கருகி எரிந்து போகக் காத்திருந்தது. தனித் தனி மரப் பலகைகளில் மூன்று வீரர்களும் நிற்கிறார்கள். மூவரில் பகத் சிங் நடுநாயகமாக நிறுத்தப்பட்டிருந்தார். கீழே ஆழமான குழி. மூவரின் கைகளும் கால்களும் கட்டப்பட்டன. தங்களின் கழுத்தைச் சுற்றி இறுக்கக் கட்டப்பட்ட கயிறை மூவரும் முத்தமிட்டார்கள். ‘‘புரட்சி ஓங்குக’’ என்று உரத்துக் குரல் எழுப்பினார்கள். கழுத்தில் இருந்து மூக்கு வரை கட்டப்பட்டிருந்தது கருப்புத் துணி. தாய் மண்ணைப் பார்த்துக்கொண்டே இறந்துபோக வேண்டும் என்று கண்களைக் கட்ட அவர்கள் அனுமதிக்கவில்லை. தூக்கிலிடுபவன், ‘‘உங்களில் யார் முதலில் மரணிக்கப் போகிறீர்கள்?’’ என்று கேட்கிறான். சுகதேவ் முந்திக் கொள்கிறார். மூவரும் மலர்ந்த முகத்துடன் கம்பீரமாக நிற்கிறார்கள். தூக்குக் கயிற்றை இழுக்கும்போது, மூவரும் மரணிக்கப் போவதாக தூக்கிலிடுபவன் நினைத்திருப்பான்.
விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் தங்களின் உடல்களை விதைகளென விதைத்தார்கள்.
- வருவார்கள்...
எண்ணங்களைப் பகிர: vandainila@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT