Published : 21 Sep 2014 11:02 AM
Last Updated : 21 Sep 2014 11:02 AM
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் அகிநேனி நாகேஸ்வர ராவ் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து.
# விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் நாடகங்களில் பெண் வேடங்களில் நடித்தார். ஒருமுறை விஜயவாடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை யதேச்சையாக பார்த்த கண்டசாலா பலராமையா ‘சீதா ராம ஜனனம்’ படத்தில் இவரை நாயகன் ஆக்கினார்.
# 'சோக நாயகன்' இவருக்கான அடையாளம். மஜ்னு, சலீம் வேடங்களில் புகழ் பெற்றாலும், தேவதாஸை இன்று வரை ஆளில்லை. ஹிந்தியில் அதனை ரீ-மேக் செய்தபோது திலீப் குமார் இப்படிச் சொன்னார்: ‘என்றுமே ஒரே தேவதாஸ். அது நாகேஸ்வர ராவ் மட்டுமே’.
# கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால், புராண வேடங்களில் நடிக்க மறுப்புச் சொன்னதில்லை. நடிகை ஜெயசுதாவுக்கு இயேசுவின் சிலையைப் பரிசளிக்கும் அளவுக்கு பக்குவப்பட்ட பகுத்தறிவுவாதி.
# படிப்பு நான்காம் வகுப்பு வரை மட்டுமே. ‘தி ஹிந்து’ செய்தித்தாளை படித்தே ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டதாகக் கூறுவார். இன்னொரு நடிகர் நடிக்கும்போது செட்டை விட்டு நகராமல் அவரிடமிருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள முடியுமா என்று பார்ப்பார்.
# தெலுங்குப் படங்கள் எல்லாம் தமிழகத்திலேயே உருவாகிக்கொண்டிருந்த காலத்தில் அதை மாற்ற 28 ஏக்கரில் அன்னபூர்ணா ஸ்டுடியோவை ஹைதரபாத்தில் உருவாக்கினார்.
# தெலுங்குத் திரைப்படங்களில் முதன் முதலில் நடனக் காட்சிகள் அமைத்தது, இரட்டை வேடத்தில் நடித்தது, ஒன்பது வேடங்களில் தோன்றியது எல்லாமும் இவரே!
# நாகேஸ்வர ராவ் நடித்து வெளிவந்த ‘பிரேமபிஷேகம்’ திரைப்படம் 533 நாட்கள் ஓடியது இன்றுவரை ‘டோலிவுட்’டில் முறியடிக்கப்படாத சாதனை.
# மகாகவி காளிதாஸ், ஒடிசாவின் ஜெயதேவா, கர்நாடகத்தின் ‘அமரசில்பி’ ஜக்கன்னா, தமிழகத்தின் விப்ரநாராயணா ஆகிய பக்தியாளர்கள் வேடங்களில் நடிப்பதைப் பெருமையாகக் கருதினார். “சீனர்கள், கொரிய நாட்டினரைப்போல சொந்த மண்ணைப் பிரதிபலிக்கும் படங்களை எடுக்க வேண்டும்" என்பார்.
# கலைமாமணி, அறிஞர் அண்ணா விருது, இரு முறை தேசிய விருது, தாதா சாகிப் பால்கே விருது ஆகியவற்றைப் பெற்றவர். பின்னாளில் இவரது பெயராலேயே ஒரு விருது உருவானது. அதை பாலச்சந்தர், ஹேமமாலினி, ஷ்யாம் பெனகல் பெற்றுள்ளனர்.
#புற்று நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தபோதும் தனது மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யாவுடன் நடித்த ‘மனம்’ படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துக்கொடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT