Published : 25 Sep 2014 01:40 PM
Last Updated : 25 Sep 2014 01:40 PM

சதீஷ் தவான் 10

இந்திய விண்வெளித் துறையின் வித்தகர் சதீஷ் தவானின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

# ஆங்கில இலக்கியம், இயற்பியல், கணிதத்தில் பட்டங்கள் பெற்றவர். இயந்திரப் பொறியியல் துறையில் அமெரிக்காவில் பட்டம் பெற்றார். வானூர்திவியல் மற்றும் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

# இந்திய அறிவியல் கழகத்தில் பேராசிரியராக இணைந்து, 42வது வயதில் அதன் இயக்குநராக உயர்ந்தார்.

# விக்ரம் சாராபாய் இறப்புக்கு பின் அமெரிக்காவில் இருந்த சதீஷ் தவானை இந்திரா காந்தி அழைத்தார். அவரது அழைப்பின் பேரிலேயே இந்திய விண்வெளித்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

# இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்ததால் அதனுடன் சேர்த்தே விண்வெளி ஆய்வுப் பணிகளை செய்ய முடியும் என்றார். விண்வெளி தலைமையகம் பெங்களூருக்கு மாறியது. அப்போது இவர் தலைமையில் உருவானதுதான் இஸ்ரோ.

# திறமையானவர்களை அடையாளம் காண்பதில் வல்லவர். அணுசக்தித் துறையில் இருந்த பிரம்ம பிரகாஷை, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவர் ஆக்கினார். அப்துல்கலாமை இஸ்ரோவுக்குள் கொண்டு வந்ததும் இவரே.

# இன்சாட், பி.எஸ்.எல்.வி., ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள் திட்டங்களின் வெற்றிகளுக்கு வழிவகுத்தவர் தவான்!

# வெற்றிகளை சகாக்களுக்கு பகிர்ந்துவிட்டு, தோல்விகளைத் தோளில் தாங்குவார். எஸ்.எல்.வி - 3 தோற்றபோது அத்திட்டத்தின் தலைவரான அப்துல் கலாமை உள்ளே அமர வைத்துவிட்டு, பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு தானே பதில் அளித்தார். அடுத்த முறை அத்திட்டம் வெற்றி பெற்றபோது கலாமை பேச வைத்தார்.

# வானூர்திகளின் பாகங்கள் காற்றுடன் உராய்வது பற்றி ஆய்வுகள் செய்து துல்லியமாக அதன் அளவைக் கணக்கிட்டார். ஸ்கின் ஃப்ரிக்‌ஷன் (Skin friction) என்கிற அந்தத் தொழில்நுட்பம் பின்பு உலகெங்கும் பயன்படுத்தப்பட்டது.

# பறவைகள் மீது ஆர்வம் அதிகம். அவை பறக்கும் விதங்களை உன்னிப்பாக கவனித்து, ஆராய்ச்சிகளை மேற்கொள்வார். அடிக்கடி பழவேற்காடு ஏரிக்கு செல்பவர், பறவைகளை நுட்பமாக கவனித்து படங்கள் வரைவார். அவற்றின் தொகுப்பே ‘Bird Flight' புத்தகம்.

# ஓய்வுக்குப் பின்னர் அரசு பல்வேறு பொறுப்புகள் அளித்தும் அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். திறமையானவர்களுக்கு வழிவிட வேண்டும் என்கிற அக்கறையின் வெளிப்பாடு அது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x