Published : 27 Sep 2014 09:30 AM
Last Updated : 27 Sep 2014 09:30 AM
சோதனைக் குழாய் குழந்தைகளை உலகுக்குத் தந்த அறிவியல் அறிஞர் ராபர்ட் எட்வர்ட்ஸின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
• இங்கிலாந்தின் பேட்லி நகரில் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பத்தில் விவசாய அறிவியலில் இருந்த ஆர்வத்தால் பட்டப்படிப்பு படிக்கச் சென்றவர், காலப்போக்கில் ஆர்வம் இழந்து விலங்கியல் பக்கம் திரும்பினார்.
• எலிகளின் உயிரியல் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்வது அவரது முனைவர் பட்ட ஆய்வாக அமைந்தது. அப்போது, ஹார்மோன் ஊசி போட்டு பெண் எலிகளிடம் இருந்து அதிக கரு முட்டைகளை உருவாக்கி சாதனை படைத்தார்.
• நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ரூதர்போர்டின் பேத்தி ரூத் ஃபவுலரை காதல் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்தன. மனைவிக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர் மோலி ரோஸிடம் அவர் ஒரு முக்கிய உதவி கேட்டார். கருமுட்டைகளைத் தரவேண்டும் என்பது அந்த கோரிக்கை.
• கருமுட்டைகளும் கிடைத்தன. அவை வளராது என்று முந்தைய ஆய்வுகள் கூறியபோதிலும், தொடர்ந்து முயற்சித்து, அவற்றை வளரவைத்தார். ஸ்டெப்டோ என்ற மருத்துவருடன் சேர்ந்து ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
• பல கருமுட்டைகளை பெண்களின் கருப்பையில் செலுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு செலுத்தியும் ஒரே ஒரு பெண் மட்டுமே கர்ப்பம் தரித்தார். அந்த கருவும் கர்ப்பப் பையில் உருவாகாமல் கருமுட்டை (ஃபாலோப்பியன்) குழாயில் உருவாகியிருந்தது.
• பழமைவாதிகள், அரசுத் தரப்பிடம் இருந்து எதிர்ப்புகள் வந்ததால், மான்செஸ்டர் நகருக்கு வெளியே ஜன்னல்களே இல்லாத ஒரு சிறிய மருத்துவமனையின் ஆய்வகத்தில் தங்களுடைய ஆய்வுகளோடு போராடினர்.
• இறுதியாக, கண்ணாடிக் குடுவையில் வளர்க்கப்பட்ட கருமுட்டையை, 9 ஆண்டுகளாக பிள்ளைப்பேறு இல்லாத பிரவுன் என்ற பெண்ணிடம் செலுத்தினார். செயற்கையாக ஹார்மோன் மூலம் பெறும் கருமுட்டைக்கு பதிலாக, அந்த பெண்ணின் கருமுட்டையையே வளர்த்து செலுத்தினார். கருமுட்டை எடுக்கும் வேலைகளை ஸ்டெப்டோ செய்தார்.
• 1978 ஜூலை 25. உலகில் சோதனைக் குழாய் மூலம் முதல் குழந்தை லூயிஸ் ஜாய் பிரவுன் சுக ஜனனம்!
• உலகம் முழுக்க சோதனைக் குழாய் முறையில் இதுவரை ஏறக்குறைய அரை கோடி குழந்தைகள் பிறந்திருக்கின்றன. நோபல் பரிசை ராபர்ட் எட்வர்ட்ஸ் 2010-ல் பெற்றார். கடந்த ஆண்டு ஏப்ரலில் மறைந்தார்.
• ‘‘வாழ்க்கையில் மிக முக்கியமானது குழந்தை பெறுவதே. இந்த எண்ணம்தான் என்னை வெற்றி பெறச் செய்தது’’ என்றார் எட்வர்ட்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT