Published : 09 Mar 2019 05:16 PM
Last Updated : 09 Mar 2019 05:16 PM
சர்வதேச மகளிர் தினத்தை பெண்களை மதிக்கும் ஆண்கள் ஒவ்வொருவரும் விதவிதமாகக் கொண்டாடி நெகிழவைத்தனர்.
ஆடுகளத்தில் விளாசிய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் தன் வாழ்வில் உள்ள பெண்களுக்காக சமைத்து அசத்தினார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார்.
அவரது பதிவின் கீழ் பெண்கள் நெகிழ்ச்சி பொங்க பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் சச்சின் தனது வீட்டின் சமையலறையில் சமைக்கத் தொடங்குகிறார். பைங்கன் பர்த்தா என்ற பெயர் கொண்ட கத்தரிக்காயால் செய்யப்படும் உணவை செய்கிறார். நம்மூரில் கத்தரிக்காய் கொஸ்து செய்வார்கள் அப்படித்தான் செய்முறை கிட்டத்தட்ட இருக்கிறது.
கையில் கத்தரிக்காயுடன் அவர் பேசத் தொடங்குகிறார். இன்று நான் என் அம்மாவுக்காகவும் அஞ்சலிக்காகவும் (சச்சினின் மனைவி) சாராவுக்காகவும் (சச்சினின் மகள்) இதை செய்யப்போகிறேன். சாரா பயணத்தில் இருக்கிறார். அதனால் அம்மாவும் அஞ்சலியும் சாப்பிடுவார்கள்.
இப்படி சொல்லிக்கொண்டே தக்காளியை நறுக்கும் சச்சின் ஆஆ.. என சிறு சத்தம் ஏற்படுத்துகிறார். கையில் கத்தி வெட்டோ என்று அரை நொடி நாம் பதற சும்மா நடிப்பு என ஆறுதல் சொல்கிறார்.
கடைசியாக இதில் க்ரீம் சேர்க்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு குவளையில் அதை நிறைத்து அம்மாவிடம் கொண்டு செல்கிறார்.
இதை அம்மாதான் முதலில் ருசிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ஏனெனில் எனது சிறு வயதில் அம்மா இதை எனக்காக எத்தனையோ முறை செய்திருக்கிறார் எனக் கூறுகிறார் சச்சின்.
சச்சினின் அம்மா பூஜை அறையில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க. அம்மா, நான் முதன்முறையாக பைங்கன் பர்த்தா செய்திருக்கிறேன். நீங்கள் செய்தது போல் இருக்கிறதா என்று சொல்லுங்கள் எனக் கூறுகிறார்.
அம்மாவோ சுவைத்துவிட்டு உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்கிறார். அம்மாக்களின் சிறப்பு இதுதான். கூடக்குறைய இருந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அம்மாக்கள் எப்போதும் உயர்ந்தவர்கள்தான் என நெகிழ்ச்சி பொங்க கூறிமுடிக்கிறார்.
இந்த வீடியோவை, ட்விட்டரில் பகிர்ந்த சச்சின், "இந்த மகளிர் தினத்தில் நம் வாழ்வின் முக்கியமான பெண்களுக்கு ஏதாவது சிறப்பாக செய்வோம். என்னுடன் சேர்ந்துகொள்ளுங்கள். நீங்களும் உங்களுக்கு பிரியமான மகளிரை புன்னகைக்க வையுங்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT