Published : 30 Mar 2019 12:00 PM
Last Updated : 30 Mar 2019 12:00 PM
நாளும் தேதியும் தினம்தினம் வந்துகொண்டிருக்கின்றன. அதை ஒவ்வொரு விஷயங்களுடன் தொடர்புபடுத்தி வைத்திருப்பதுதான் கூடுதல் சுவாரஸ்யம். அப்படியான சுவாரஸ்யங்களில் ஒன்று... இன்று! ஆமாம்... இன்று... உலக இட்லி தினம்!
இதில் ‘உலக’ என்பதை எப்படிச் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. காரணம்... இட்லி என்பது தென்னிந்திய உணவு வகைகளில், மிக மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது.
வயிற்றுக்கு எந்த செய்கூலியும் சேதாரமும் தராமல் இருக்கிறது என்பதுதான் இட்லியை எல்லோரும் நேசிக்கக் காரணம்! முன்பெல்லாம் வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள், இட்லிதான் உணவாக இருக்கும். பிறகு அந்த மாவு, தோசையாகவும் மாறுகிற ரசாயன மாற்றம், நம் வீட்டுப் பெண்களுக்கு கைவந்தக் கலை.
அதேபோல், மருத்துவர்களால் சொல்லப்படும் உணவு வகைகளில் இட்லி டாப் டென் வரிசையில் முக்கிய இடத்தில் இருக்கிறது. உடம்புக்குச் சரியில்லை என்று மருத்துவரிடம் சென்றால், மாத்திரைகளையெல்லாம் கொடுத்துவிட்டு, ‘கஞ்சி குடிங்க, ரசம் சாதம் சாப்பிடுங்க. இட்லி சாப்பிடுங்க’ என்று பரிந்துரைப்பார்கள்.
முப்பது வருடங்களுக்கு முன்பு வரை, வீட்டில் பெண்களுக்கு உடல்நலமில்லை என்றால், உடனடியாக அருகில் உள்ள கபேக்களுக்கோ பவன்களுக்கோ சென்று, எல்லாருக்குமாக வாங்கி வருவது இட்லியைத்தான்.
ஹோட்டலில் இட்லியைக் கட்டித் தருவதே ஒரு கலைதான். ஒரு பேப்பர், அதன் மேலே இலை, ஓரப்பகுதியில் கெட்டிதேங்காய்சட்னி, அதன் மேலே சின்ன இலை என அழகாக வைத்து, மடித்துத் தருவார்கள்.
சில இட்லிகளும் அதன் தொட்டுக்கொள்ளும் விஷயமும் நம் மனதையும் நாக்கையும் விட்டு, நீங்காஇடம் பிடித்துவிடும்.
அப்போதெல்லாம், குடும்பமாக வெளியூர்ப் பயணம் என்றால், முதலில் செய்வது மாவு அரைப்பதுதான். ஒரு பக்கம் மாவுக்கான வேலைகள் ரெடியாகிக் கொண்டிருக்க, இட்லியைப் பார்சல் செய்வதற்கான பேப்பர் வகைகளும் தாமரை இலைகளும் ரப்பர்பேண்டுகளும் சணல் வகையறாக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
ஆறுமணிக்கு ரயில். ஐந்துமணிக்குக் கிளம்பவேண்டும். நாலுமணிக்கே அம்மாக்கள் எழுந்துவிடுவார்கள். யுத்தத்தில் பயன்படுத்தப்படும் கேடயம் போலான வடிவத்தில், குழிகுழியாக இருக்குமிடங்களில், மாவைக் கொண்டு நிரப்பி வைக்கும் அழகு, கவிதைக்கு நிகரானது. தூங்குபவன் முகத்தில் நீர் விட்டுத் தெளிப்பது மாதிரி, வெந்த நிலையை நீர்விட்டுப் பார்த்து, அப்படியே சிதையாமல் ஒரு தட்டில் கவிழ்த்து எடுக்கிற வித்தை... ஒரு பூ மலரும் தருணம் அது!
பிறகு, மிளகாய்ப் பொடியை நிறைய எடுத்து, நல்லெண்ணெய் விட்டு, நன்றாகக் கலக்கி எடுத்து அதன் மீது, இட்லியை முன்பக்கம் பின்பக்கம் என புரட்டுப் புரட்டி எடுத்து பார்சல் கட்டுவார்கள். அது அம்மா பவன் இட்லி. அதன் சுவைக்கு நிகரே இல்லை.
புதுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில், சின்னதான கேண்டீன். அந்த இட்லிக்கும் சட்னிக்கும் என் நண்பன் அடிமை. இதை அவனே பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியிருக்கிறான். ஆனால் இப்போது அந்த ஸ்டால் இல்லை.
90களில், நாகப்பட்டினத்துக்கு ஒரு திருமணத்திற்கு போயிருந்தபோது, முதல்நாள் விருந்தில், இட்லி வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று இட்லி அளவுக்கானது. கனம் பொருந்திய அந்த இட்லி, சுவை மிகுந்ததும் கூட. அதற்கு நாங்கள் நாகப்பட்டினம் இட்லி என்றே பெயர் வைத்திருந்தோம். ஆனால், அந்த ஊருக்குப் போகிற போதெல்லாம் அந்த சைஸ் இட்லியைத்தான் காணோம். காஞ்சிபுரம் இட்லி, ஆம்பூர் இட்லி (பிரியாணிதானே) என்றெல்லாம் வந்தாச்சு.
சிக்கல் சண்முகசுந்தரம் என்றால் சிவாஜிதான். மோகனாம்பாள் என்றால் பத்மினிதான். இதுதான் சூப்பர் காம்பினேஷன். இட்லிக்கும் இப்படியான காம்பினேஷன்கள் உண்டு. இட்லிக்கு கெட்டி தேங்காய் சட்னி என்று ஒரு சாரார் சொல்லுவார்கள். வெங்காயச் சட்னி அல்லது காரச்சட்னி என்று சொல்பவர்களும் உண்டு. இட்லி சாம்பார் என்பார்கள். இதைச் சொல்லும்போது, இட்லியின் வெண்மை நிறத்தை, பூப்போல இட்லி என்பார்கள் அல்லவா. அந்த நிறத்தை அப்படியே மறைப்பது போல், சாம்பார்குளத்தில் இட்லியை மிதக்கவிட்டிருப்பார்கள். ஒருவகையான வன்முறை இது என்பவர்களும் உண்டு. அதேசமயம், சாம்பார் இட்லிக்கு அடிமையானவர்களும் இருக்கிறார்கள்.
இட்லி கடப்பா சூப்பர், இட்லிக்கு கொத்ஸூ இட்லிக்கு நேற்று வைத்த மீன் குழம்பு என்றெல்லாம் ரசிக்க ருசிக்கச் சாப்பிடுகிறவர்கள் இட்லிக்கு ரசிகர்மன்றம்தான் வைக்கவில்லை.
சென்னை திருவல்லிக்கேணியில், மையப்பகுதியில் உள்ள ஹோட்டலில், சாம்பார் இட்லி பிரசித்தம். தட்டில் இட்லியை வைப்பார்கள். இட்லி மேல் சாம்பார்மழை பொழிவார்கள். அதன் மேலே, நீளமான ஒரு பாத்திரத்தின் நீளமான கரண்டியில் இருந்து, ஹோமத்திற்கு நெய் விடுவது போல, இரண்டடி உயரத்தில் கரண்டியை வைத்துக் கொண்டு, நெய் விடுவார்கள்.
மெல்ல மெல்ல இட்லி சாம்ராஜ்ஜியம் நசிந்துகொண்டே வந்ததையும் சொல்லியாகவேண்டும். மாலை நான்கைந்து மணிக்கு ஹோட்டலில் கேட்டால், இட்லி இன்னும் ரெடியாகலை சார் என்பார்கள். ஏழெட்டு மணிக்கு கேட்டால், இட்லி தீர்ந்துருச்சுங்க என்பார்கள். நடுவே, குஷ்பு இட்லியெல்லாம் வந்துவிட்ட நிலையில், மினி இட்லி என்று ஒல்லிக்குச்சி இட்லிகளும் ஃபோர்ட்டீன் இட்லி (14 மினி இட்லிகள்) என்று வந்ததையும் வருத்தத்துடன் பதிவு செய்தாகவேண்டும்.
குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோருக்கும் பிடித்த இட்லி, சமீபகாலமாக பர்கர் பூதங்களாலும் பீட்ஸா அரக்கர்களாலும் துரத்தப்பட்டதில்தான் கொஞ்சமே கொஞ்சமாக வீழ்ந்தது இட்லியின் ராஜாங்கம். எப்பப் பாத்தாலும் இட்லி இட்லி இட்லி என்று நம்பியாரைப் பார்க்கும் எம்ஜிஆர் மாதிரி பார்த்தார்கள். தோசை வேணும்னா பண்ணு என்றார்கள். அந்த தோசைல மிளகாப்பொடி லைட்டாப் போடு என்று கேட்கிற பசங்களும் உண்டு.
இங்கே பெருமிதமான ஒருவிஷயம்... என்னதான் தோசை முழுக்க பொடிகளைத் தூவி, நிரப்பி, பொடி தோசை என்றாலும் கூட, அந்தப் பொடிக்கே இட்லிமிளகாப் பொடி என்றுதான் பெயர்.
இப்படிப் புராண - புராதனப் பெருமை இட்லிக்கு உண்டு என்பதை எவரும் மறந்துவிடவேண்டாம். மறக்கவும் முடியாது.
ஹோட்டலுக்குள் நுழைந்து, அமர்ந்து, சர்வர் அண்ணா வந்து கேட்டதும், அவருக்கு தோசை, எனக்கு பூரி செட், அங்கே பொங்கல் என்று சொல்லிவிட்டு, முதல்ல எல்லாருக்கும் ரெண்டு ரெண்டு இட்லி வைங்க என்பதில்தான் இருக்கிறது இட்லியின் வெற்றி.
வாழ்க இட்லி! நாக்கிருக்கும் வரை இட்லியும் இருக்கும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT