Last Updated : 16 Mar, 2019 01:02 PM

 

Published : 16 Mar 2019 01:02 PM
Last Updated : 16 Mar 2019 01:02 PM

கோடையைக் கொண்டாடுவோம்: குழந்தைகளுக்கு டயப்பர், வேர்க்குருவுக்கு பவுடர் பயன்படுத்தலாமா?

கோடை வெயில் முன்னதாகவே சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது.  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் வெயிலின் தாக்கத்தைக்  கண்டு சோர்வடையாமல் அதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியம்.

குறிப்பாக கோடையில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்...  வீட்டைச் சுற்றி துள்ளி ஓடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் சட்டென அயர்ந்து சோர்வடைந்து  ஒரு இடத்தில் முடங்கிவிடுவதை பெற்றோர்கள் நிச்சயம் விரும்பமாட்டர்கள் அல்லவா,

எனவே கோடை காலங்களில் குழந்தைகளுக்கு அளிக்க  வேண்டிய உணவுகள்,  நோய் பரவலை எப்படித் தடுப்பது  மற்றும் பல தகவல்களை எளிமையாகப் பகிர்ந்து கொள்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் குணசிங்.

 

 

நீர் ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய்த்தொற்று

''கோடைகாலங்களில் குழந்தைகளுக்கு நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது.  நாக்கு, உதடு  வறண்டு போகும் பிரச்சினை குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் பிறந்து ஆறு மாதத்துக்குள்ளான குழந்தைகளுக்கு தாய்ப்பாலே போதுமானது. தாய்[பாலில் 80 % நீர் சத்துதான் உள்ளது. எனவே தண்ணீர் கூட கொடுக்கத் தேவையில்லை. மாட்டுப் பால், பிற பாலை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. இதனால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும். ஆறு மாதம் தாண்டிய குழந்தைகளுக்கு அனைத்து விதமான உணவையும், தண்ணீரையும் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு அசைவ உணவுகள் உட்பட சரிவிகித உணவை அளிக்க வேண்டும். தண்ணீர்  கொடுப்பதற்கு பாட்டில்களைப் பயன்படுத்தக் கூடாது. இதன் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படலாம். ஒருவேளை பழங்களையும் உணவாக அளிக்கலாம். பழங்களில் ஆப்பிள் மட்டும்  சத்தான பழம் அல்ல, வாழைப்பழம், சப்போட்டா, பப்பாளி, தர்பூசணி பழங்களையும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சிலர் மாம்பழம் தரக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால், மாம்பழத்தில் வைட்டமின் A உள்ளது. அதனைக் கட்டாயம் கொடுக்கலாம். இதன் காரணமாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.

பழச்சாறுகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிருங்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமன் பிரச்சினைக்கு இதுதான் காரணம்.

முடிந்த அளவு கடையில் உணவு வாங்கி குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். நீர்ச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளின் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் ( நீர்ச்சத்து சரியாக உள்ள குழந்தைகளின் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்) இதை வைத்து நீங்கள் குழந்தைகளுக்கு நீர்ச்சத்துக் குறைபாடு இருக்கிறதா என்று கண்டுபிடிக்கலாம்.

அரசின் அறிவுறுத்தலின்படி  (மஞ்சள் காமாலை, டைபாய்டு, அம்மை) தடுப்பூசிகளை நாம் குழந்தைகளுக்குக் கட்டாயம் போட வேண்டும். இதனைத் தவிர்க்கக் கூடாது. இதுதான் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை உண்டு பண்ணும்.  9 வயதிலிருந்து 14 வயது வரை பெண் குழந்தைகளுக்கு இரண்டு கர்ப்பபை வாய் புற்று நோய் தடுப்பூசியும், 14 வயது முதல்  42 வயது வரை உள்ள பெண்களுக்கு மூன்று ஊசிகளையும் போட வேண்டும்.

அம்மை பரவலைத் தடுக்க

கோடைகாலத்தைப் பொறுத்தவரை அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனை தடுப்பூசி போட்டு முன்னரே தடுக்கலாம். அம்மை ஏற்பட்ட வீட்டுக்குகோ, பகுதிக்கோ குழந்தைகளை அனுப்புவதைத் தவிர்க்கவும்.  சுத்தமான  தண்ணீரைக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். கை, கால், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தன் சுத்தம் மிகவும் முக்கியம்.

 

 

குழந்தைகளுக்கு கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டல் ஒஆர் எஸ் கொடுக்கலாம். இந்தக் காலகட்டங்களில் கட்டாயம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிக்க வேண்டும்.

குழந்தைகள் சோர்ந்து போய்விட்டாலோ, சாப்பிடாமால் இருந்தாலோ அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

வெயில் காலங்களில் கூட டெங்கு போன்ற நோய்கள் எல்லாம் வரத் தொடங்கியுள்ளன. எனவே வீடுகளில் கொசுகள் வராமல் தடுக்க சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்குவதை அனுமதிக்காதீர்கள். தடுப்பூசிகளைத் தவிர பிற ஊசிகளை குழந்தைகளுக்குப் போட அணுமதிக்காதீர்கள். காய்ச்சல் ஏற்பட்டாலும் குழந்தைகளுக்கு ஊசி போடாதீர்கள்.

கோடைகாலங்களில் டயப்பர்

டயப்பர் போடுவது இன்றைய காலத்தில் நிர்பந்தம்  ஆகிவிட்டது.  இதைக் குழந்தைகளுக்கு அணிவதில் தவறில்லை. ஆனால் டயப்பரைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 8 முதல் 10 டயப்பரையாவது பயன்படுத்த வேண்டும். டயப்பரைக் குழந்தைகளிடமிருந்து அகற்றும்போது அதனை முற்றிலுமாகத் துடைத்து சுத்தம் செய்துவிட்டு குப்பையில் போட வேண்டும். இல்லையே ரேஷஸ் வந்துவிடும். எனவே டயப்பர் போடுவதற்கு முன்னர் Zinc cream-ஐ குழந்தைகளுக்குத் தடவிவிட்டு  போட்டால் நல்லது.

ஏசி பயன்படுத்தலாம்

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏசி வைத்தால் சளி பிடித்துவிடும்  என்று சொல்வதெல்லாம் தவறு.  பிறந்த குழந்தைகளைக் கூட ஏசியில் படுக்க வைக்கலாம் (ஏசியின் அளவை 24, 23 அந்த அளவில்   வைத்துக்கொள்ள வேண்டும்).

சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு  ஏசி நல்லதுதான்.

சென்னை போன்ற கடற்கரையோரம்  உள்ள  நகரங்களில் வாட்டர் கூலர்தான் பயன்படுத்தக் கூடாது. வாட்டர் கூலர்கள் ஈரப்பதம் குறைவாக உள்ள, போபால், டெல்லி போன்ற உள் நகரங்களில்தான் பயன்படுத்த வேண்டும். நம்ம ஊர்களில் வாட்டர் கூலர்களை பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்படும்.

ஆடைகளைப் பொறுத்தவரை குழந்தைகளுக்குப் பருத்தி ஆடைகளையே அணிவிக்கலாம். முடிந்த அளவு குழந்தைகளை நம்மூர் வெயிலில் விளையாட அனுப்புவதைத் தவிர்த்து விடுங்கள். வெயில் தணிந்த பின்னர் விளையாட அனுமதியுங்கள். 45 டிகிரி வெயிலில் விளையாடினால் மூளையே சில நேரங்களில் பாதிக்கக் கூடும்.

இளநீர், எலுமிச்சை சாறு போன்ற பானங்களைக் குடிக்கலாம். இவை உடலிலுள்ள வெப்பத்தைக் குறைக்கும்.

வேர்க்குருவுக்கு பவுடர் பயன்படுத்தாதீர்கள்

வேர்க்குருவுக்கு பவுடர்களைப் பயன்படுத்தாதீர்கள். இரண்டு வேளை குளித்துவிட்டு காற்றோட்டமான இடத்தில் இருந்தாலே போதுமானது. சில நாட்களில் அவையே மறைந்துவிடும்.  பவுடர் பயன்படுத்தினால் வேர்க்குரு அதிகமாகத்தான் செய்யும்.  வேர்க்குருவை சரி செய்வதற்கு என தனியாக மருந்துகள் எல்லாம் கிடையாது''.

இவ்வாறு குழந்தைகள் நல மருத்துவர் குணசிங் தெரிவித்தார்.

மருத்துவர் கூறியதுபோல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பான உணவுகளையும் பின்பற்றி கோடையை ஆரோக்கியமாக வரவேற்போம்.

 

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x