Published : 13 Feb 2019 08:12 PM
Last Updated : 13 Feb 2019 08:12 PM
இன்றைக்கு எஃப்.எம். ரேடியோக்களில் படபடவென மின்னல் வேகத்தில், மூச்சுவிடாமல் பேசுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடி கே.எஸ்.ராஜா. இலங்கை வானொலியின் சூப்பர்ஸ்டார் அறிவிப்பாளர் இவர்தான்.
இவர் பேசுவதில் சொக்கிப்போன ரசிகர்கள், இவரின் குரலுக்காகவும் சொல்லுக்காகவும் ரேடியோவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பார்கள்.
இலங்கை வானொலியின் கூட்டு ஸ்தாபனம் என்கிற அறிவிப்பே அத்தனை அழகு.அன்றைக்கு மக்களின் மனம் கவர்ந்த பாடல்களைக் கேட்க பேருதவி செய்தது, இலங்கை வானொலி நிலையம்தான்.
‘உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அவர் அறிவிப்பதற்கு ரேடியோ பக்கத்திலிருந்து கைத்தட்டுவார்கள் ரசிகர்கள். ‘நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்’ என்கிற சிவாஜி நடித்த ‘ராஜா’ படத்தில் இருந்து பாடல் ஒலிபரப்பாகும். அந்தப் பாட்டில் ‘ராஜா’ என்று பெண் குரல் ஒலிக்கும். ‘ஆம்… உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அறிவிப்பு வர, பித்துப்பிடித்துப் போனார்கள் வானொலி ரசிகர்கள். மதுரக்குரல் மன்னன் என்று அழைத்தார்கள் இவரை. அறிவிப்பாளர்களின் அரசன் என்று புகழ்ந்தார்கள்.
அறிவிப்பு ஒருபக்கம் அள்ளும். அத்துடன் மக்களின் மனசுக்கு நெருக்கமான பாடல்களை ஒலிபரப்பப்படும். அந்தப் பாடல்களை ஒலிக்கும் நேரம்தான், மக்களின் மிகப்பெரிய ரிலாக்ஸ் நேரம்.
கே.எஸ்.ராஜா, மயில்வாகனம் சர்வானந்தா, , ராஜேஸ்வரி சண்முகம், பிஹெச்.அப்துல்ஹமீது என பல அறிவிப்பாளர்கள், நமக்கும் ரேடியோவுக்கும் இலங்கை வானொலி கூட்டு ஸ்தாபனத்துக்கும் மிகப்பெரிய பந்தத்தை ஏற்படுத்தினார்கள்.
பொங்கும் பூம்புனல் என்றொரு நிகழ்ச்சி அந்தக் காலத்தில் மிகப்பிரபலம். அதேபோல், இரவு 10 முதல் 12 மணி வரை இரவின் மடியில் என்றொரு நிகழ்ச்சியில், மனதைக் கட்டிப்போடுகிற பாடல்களாகப் போட்டு, ரேடியோவையும் நம் காதுகளையும் பிணைத்துவிடும் தந்திரக்காரர்களாகவே அறிவிப்பாளர்கள் இருந்தார்கள்.
அந்தக் காலத்தில், ‘இன்னிக்கி இரவின் மடியில் ‘உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட’ பாட்டு போட்டா, நம்ம காதல் ஜெயிச்சிரும்னு அர்த்தம்’ என்று ரேடியோ ஜோஸியம் பார்த்ததெல்லாம் தனிக்கதை.
‘இந்தப் படத்தில் இருந்து இந்தப் பாடல்’ என்று அறிவிப்பதும் அந்தப் பாடல் ஒலிபரப்புவதும் மட்டுமா சந்தோஷம் தரும்? இந்தப் பாடலை விரும்பிக் கேட்ட நேயர்கள், பொப்பளக்கப்பட்டி செரீனா, மட்டக்களப்பு சுபாஷிணி, யாழ்ப்பாணம் தணிகை வேந்தன், அம்மம்மா, அப்பப்பா…’ என்று சொல்லும்போதே உறவில் சொக்கிப்போவோம். அதிலும் சில விநாடிகளுக்குள் முப்பது ஐம்பது பெயர்களையும் ஊர்களையும் மூச்சுவிடாமல் சொல்லுவார்கள்.
என்றைக்காவது காற்று அதிகம் அடித்தாலோ அல்லது காற்றே அடிக்காமல் போனாலோ ரேடியோ கொர்ராகிவிடும். திருப்பிப்பார்ப்பார்கள். தட்டிப்பார்ப்பார்கள். ஏரியல் கம்பிகளை நீட்டி இறக்கி நீட்டி பார்ப்பார்கள். வயரை இழுத்து வாசலில் வைப்பார்கள். ரேடியோவை நைஸாக காற்று வரும் திசைக்குத் திருப்பிப் பார்ப்பார்கள். இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு ரேடியோ ஸ்டேஷன் லைன் கிடைத்துவிட்டால், குலசாமிக்கு நன்றி சொன்னவர்கள்தான், இன்றைக்கு ஐம்பது ப்ளஸ் வயதைக் கொண்டவர்கள்.
ரேடியோ இருக்கிற வீடுகள் அப்போது வெகு குறைவு. பாடல் ஒலிபரப்பாகும் நேரத்தில், ரேடியோ இருக்கும் வீட்டு வாசலில் உள்ள திண்ணையில் பெருங்கூட்டம் கூடியிருக்கும். ‘இந்தா பவுனாம்பா… சித்த சத்தமாத்தான் வையேன் ரேடியோவை’ என்பார்கள். படத்தின் பெயரைச் சொல்லும் போதே, இங்கே ‘இந்தப் பாட்டுதான்’ ‘இல்ல இல்ல இந்தப் பாட்டுதான்’ என்று பட்டிமன்றமே நடக்கும்.
பாட்டை நேசித்த தமிழ் உலகில், பாடல்களை நமக்காக ஒலிபரப்பிய ரேடியோவை அப்படிக் காதலித்தார்கள், கடந்த தலைமுறைக்காரர்கள்!
இன்று 13.2.19 உலக வானொலி தினம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT