Last Updated : 15 Feb, 2019 02:58 PM

 

Published : 15 Feb 2019 02:58 PM
Last Updated : 15 Feb 2019 02:58 PM

’ஆறு பாட்டு சம்பளத்தை, ரெண்டு பாட்டுக்கே தரேன்னு சொன்னேன் ’- நெகிழ்ந்த வாலி; மகிழ்ந்த பஞ்சு அருணாசலம்

'ஆறு பாட்டுக்கான சம்பளத்தை ரெண்டு பாட்டுக்கே தரேன். அண்ணே, நம்ம படத்துக்கு தொடர்ந்து எழுதுங்கண்ணே’ என்று பஞ்சு அருணாசலம் சொல்ல, நெகிழ்ந்து போனார் கவிஞர் வாலி.

தமிழ்த் திரையுலகில் கவிஞர், பாடலாசிரியர், கதை வசன கர்த்தா, திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர் பஞ்சு அருணாசலம். கவியரசு கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்தவர். அவரின் உறவினரும் கூட.

அன்னக்கிளி படத்தின் மூலம் இளையராஜாவை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். வாலியின் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசும்போது பஞ்சு அருணாசலம் தெரிவித்ததாவது:

கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்தவன் நான். அவருடைய ஆயிரம் பாடல்களில், 910 பாடல்களாவது அவர் சொல்லி நான் எழுதியதாக இருக்கும். அதேபோல் கவிஞர் வாலியுடன் நல்ல பழக்கமும் நெருக்கமும் உண்டு. நல்ல மனிதர். அற்புதமான நண்பர்.

ஒருமுறை, இளையராஜாவுடன் ரிக்கார்டிங் பணியில் இருந்துவிட்டு வெளியே வந்தேன். அப்போது எதிரில் கவிஞர் வாலி அண்ணனைப் பார்த்தேன். இருவரும் பேசிக்கொண்டோம்.

அப்போது அவர், ‘என்ன பஞ்சு... நீ பரவாயில்லய்யா. கவிஞர். கதைவசனம்லாம் எழுதுறே. போதாக்குறைக்கு படமும் தயாரிக்கிறே. ஆனா என் பாடு அப்படியில்லை. எனக்கு பாட்டு எழுதறதைத் தவிர வேற எதுவும் தெரியாதுய்யா.

திடீர்னு இப்போ பாட்டு எழுதுறது கொஞ்சம் குறைஞ்சுபோச்சு. தினமும் எழுதிக்கிட்டே இருந்தே பழகிட்டேன். இப்போ எழுதாம இருக்கறது ஒருமாதிரியா இருக்குய்யா’ன்னு வாலி அண்ணன் சொன்னார்.

எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. ’என்னன்ணே சொல்றீங்க? இதுக்கெல்லாம் துவண்டு போகலாமாண்ணே! இதோ... இப்ப நம்ம சொந்தப் படம் போயிட்டிருக்கு. அதுல ரெண்டு பாட்டு எழுதுங்கண்ணே’ன்னு சொன்னேன். அதுமட்டுமில்லண்ணே... தொடர்ந்து நம்ம படத்துல நீங்க எழுதுறீங்கன்னு சொன்னேன்.

உடனே வாலி அண்ணன், ‘அப்படீன்னா, படத்துல எல்லாப் பாட்டும் நான்தான் எழுதுவேன். ராஜாகிட்ட சொல்லிரு’ன்னாரு. உடனே நான், ‘அண்ணே, தப்பா எடுத்துக்காதீங்கண்ணே. நம்ம படம். அதனால நாம ஒரு ரெண்டு பாட்டு எழுதலாம்னு எனக்கும் ஆசை இருக்கும். அதேபோல ராஜாவோட மியூஸிக். ஒரு பாட்டு எழுதலாமேன்னு கங்கைஅமரன் நினைப்பாரு. அதுமட்டுமில்லாம, இளையராஜாவை நம்பி, நிறைய கவிஞர்கள் இருக்காங்க. அவங்களுக்கு மாசத்துக்கு நாலஞ்சு பாட்டுங்க கிடைச்சாதான் அவங்க வண்டியும் ஓடும்.

நீங்க ஏன் அப்படிலாம் நினைக்கிறீங்க? ஆறு பாட்டுக்கு எவ்ளோ சம்பளம் வாங்கறீங்களோ, அதை ரெண்டே பாட்டுக்கு நான் தரேன். போதுமாண்ணே. பழையபடி உற்சாகமா எழுதுங்கண்ணே’ன்னு சொன்னேன். நெகிழ்ந்து போயிட்டாங்க அண்ணன்.

அடுத்தாப்ல, அந்தப் படத்துக்கு ரெண்டு பாட்டு எழுதிக்கொடுத்தார் வாலி அண்ணன். ரெண்டுமே சூப்பர் ஹிட்டு. அந்தப் படம் ‘வைதேகி காத்திருந்தாள்’. அந்தப் பாட்டு... ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ பாட்டு, பட்டிதொட்டியெங்கும் செம ஹிட்டாச்சு.

அதுமட்டுமா? இந்தப் பாட்டு வந்த பிறகு, வாலி அண்ணன், பழையபடி அந்த உயர்ந்த இடத்துக்கு வந்து, ஏராளமான பாடல்களைக் கொடுத்தாரு.

இவ்வாறு பஞ்சு அருணாசலம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x