Published : 14 Feb 2019 12:06 PM
Last Updated : 14 Feb 2019 12:06 PM
லேட்டஸ்ட் அப்டேட்டுடன் வந்திருக்கும் மொபைல் என்ன, என்னென்ன ‘ஆப்’கள் வந்திருக்கின்றன, அமேசானில் எத்தனை மணிக்கு ஆஃபர் தொடங்கி, எத்தனை மணிக்குள் முடிகின்றன என்பதையெல்லாம் விரல்நுனியில், செல்போன் நுனியில் வைத்திருக்கிறார்கள் இன்றைய இளசுகள். அவர்களிடம், ‘லவ் லெட்டர்’ என்ற வார்த்தையைச் சொன்னால், ‘வாட் இஸ் திஸ்’ என்று தோள் குலுக்கி, விழிகள் விரியக் கேட்பார்கள். அப்படி இல்லையா... ‘ஒன் செகண்ட். கூகுள்ல தேடிப் பாக்கறேன்’ என்பார்கள்.
இன்றைக்கு காதலைச் சொல்லவும் சந்திக்கும் இடத்தைப் பரிமாறிக்கொள்ளவும் இன்ன நேரத்தில் சந்திக்கலாம் என்பதை உறுதி செய்து கொள்ளவும் கையில் உள்ள செல்போனே துணை என்று இருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... காதலுக்கு பிரேக் அப் விடவும் இதே செல்போன் வழியே சொல்லி அல்லது ஒரு மெசேஜ் போட்டு முறித்துக் கொள்கிறார்கள்.
ஆனால், அந்தக் காலம் அப்படியில்லை. அது லவ்லெட்டர் காலம்.
காதலில் பல வகை உண்டு என்பார்கள். அது மெய்யோ பொய்யோ... ஆனால் காதல் கடிதங்களில் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. ‘இன்னும் எத்தினி நாளைக்குத்தான் உன் ஆளு பின்னாடியே போயிட்டிருப்பே. பேசாம ஒரு லெட்டர் எழுதி அவகிட்ட கொடுத்துருடா’ என்பார்கள் நண்பர்கள்.
‘என் மனசுல இருக்கறதை அப்படியே கவிதையா எழுதிக் கொடுக்க ஆசைதான். ஆனா எனக்கு கவிதை வராதே’ என்று கைபிசைந்து தவிப்பான் காதலன். இதற்கெல்லாம் கவலைப்பட்டால் எப்படி?
அப்போதெல்லாம், வகுப்புக்கு ஒரு கவிஞன் இருப்பான். பாக்கெட்டில் நான்கைந்து பேனாக்களைக் குத்திக்கொண்டு, எப்போதும் ஒரு நோட்டுடன் அலைவான். அவனைத் தேடிப் போவார்கள். போலீஸ் ஸ்டேஷனில் ஏதாவது பிரச்சினைக்காகச் சென்றால், அங்கே ரைட்டர், ‘பத்து பேனா வாங்கிட்டு வா, நாலு குயர் அன்ரூல்டு பேப்பர் வாங்கிட்டு வா’ என்பார்களே... அதுபோல் அந்தக் கவிஞன் பேனா கேட்பான். பேப்பர் கேட்பான். இல்லையெனில், பரோட்டாவும் பாயாவும் கேட்பான்.
எல்லோருக்கும் வானில்தான் இருக்கிறது நிலா
ஆனால்
எனக்கு மட்டும்
என் பள்ளியில் இருக்கிறது நிலா
என்றெல்லாம் எழுதி, உருகி உருகி எழுதி, இப்படிக்கு உன்னை விரும்பும் உயிர்க்காதலன் என்று முடித்திருப்பார்.
அந்தக் கவிதைக் கடிதத்தை வாங்கிக்கொண்டு, தெரு முக்கு பிள்ளையாரிடம் வைத்து வேண்டிக்கொண்டு வருவார்கள். ஆனால் அந்தக் காதல் கடிதத்தை கொடுப்பதற்குள், டைபாய்டு, குளிர்ஜூரம், ஜன்னி எல்லாமே வந்திருக்கும் பையனுக்கு!
சிலர் தாமாகவே எழுதுவார்கள். பிள்ளையார் சுழி போட்டு, சிவமயம் என்றெழுதி, காதலைக் கொட்டித்தீர்த்திருப்பார்கள். அந்தக் கடிதத்தைக் கொடுப்பதற்கு, பூவா தலையா போட்டுப்பார்ப்பார்கள்.
ஒருவழியாக, கடிதம் கொடுக்கும் ஸ்பாட் தேர்வு செய்யப்படும். அவளுடைய புத்தகத்தை வாங்கி, அதில் வைத்து, 52ம் பக்கம் பாருன்னு கிசுகிசுத்தவர்கள் உண்டு. அடுத்து, வழியில், அவளின் காலடியில் லவ்லெட்டரைத் தூக்கிப்போட்டுவிட்டு, கிடுகிடுவென ஓடியவர்களும் இருக்கிறார்கள்.
இல்லையெனில், அவளின் தோழியிடம் இவனுடைய தோழன் சென்று, ‘உன் ஃப்ரெண்டை, என் தோஸ்த் அப்படி லவ் பண்றான் தெரியுமா? இந்த லெட்டரை அவன் கொடுக்கச் சொன்னான்’ என்று கொடுப்பார்கள். இதிலொரு சுவாரஸ்யம்... அவர்கள் காதலித்தார்களோ இல்லையோ... இந்தத் தோழியும் அந்தத் தோழனும் காதலர்களான வரலாறும் இங்கே உண்டு. இதை விட சூப்பர் ட்விஸ்ட்டாக, காதலைச் சொல்ல நண்பன் போயிருப்பான். அந்தப் பெண்ணிடம் நேரடியாகச் சொல்லச் செல்வான். ஒருகட்டத்தில், நண்பனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் காதல் மலர்ந்திருக்கும். அங்கே நட்பு முறிந்திருக்கும்.
லவ் லெட்டரில் மிக முக்கியமானதொரு ரகசியமும் கடைப்பிடிக்கப்படும். ‘மாப்ளே. லவ் லெட்டரை கொடு. ஆனா, லெட்டர்ல எந்த இடத்துலயும் அவ பேரை எழுதிடாதே. அதேபோல உன் பேரையும் எழுதிடாதே. முக்கியமா, உன் கையெழுத்துல எழுதிடாதே மாப்ளே’ என்று அட்வைஸ் செய்வார்கள்.
‘அப்பா, அந்த தெக்குத்தெரு மாமரத்து வீட்டுல இருக்கானே. அந்தப் பய லவ்லெட்டர் கொடுத்துட்டாம்பா’ என்று அப்பாவிடமோ அண்ணன்களிடமோ மாட்டிவிட்டால், கதை கந்தல்தான். அந்த அப்பன்காரன் நாலு அறைவிடுவான். அண்ணன்காரன், ஆளுங்களை அழைத்துக்கொண்டு, ஓடஓட அடித்துத்துவைப்பான். விஷயம் வீட்டுக்குத் தெரிந்தால், பெண்ணின் அப்பனும் அண்ணனும் செய்ததை, அப்பாவும் அண்ணனும் செய்வார்கள்.
‘படிக்க அனுப்பிச்சா, லவ் லெட்டரா எழுதுறே’ என்று கையை முறுக்கி, முதுகில் குத்தி, கன்னத்தில் கிள்ளி, தலையை உலுப்பி சின்னாபின்னப்படுத்துவார்கள்.
இந்த லவ்லெட்டர் வாத்தியார் கையில் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். வகுப்பு வாசலில் முட்டிபோடச் சொல்லுவார்கள். தோப்புக்கரணம் போடச் சொல்லுவார்கள். இதில் ஒரு காமெடியும் நடக்கும். ‘லெட்டர் குடுக்கறான் சார்’ என்று எந்தப் பெண் மாட்டிவிட்டாளோ, அந்தப் பெண் நம்ம ஹீரோ முட்டி போட்டிருப்பதையும் தோப்புக்கரணம் போடுவதையும், அப்பா உதைத்ததையும் அண்ணன் அடித்ததையும் பார்த்துவிட்டு, தெரிந்துகொண்டு... ‘ம்ச்... பாவம்டி. என்னாலதானே அடிவாங்கினான். எனக்காகத்தானே அடிவாங்கினான்’ என்று பரிதாபப்பட்டு, ‘போனாப்போவுது பாவம்’ என்று காதலிக்கத் தொடங்கியதெல்லாம், தமிழ் சினிமாவில் இடம்பெறாத ஆகச்சிறந்த ட்விஸ்ட்டுகள்.
இருப்பதிலேயே மோசம்... லவ்லெட்டரை அந்தப் பெண், வாத்தியாரிடம் கொடுப்பதுதான். அதிலும் தமிழ் வாத்தியாரிடம் கொடுப்பதுதான். கடிதம் படித்துவிட்டு, கொந்தளித்துவிடுவார். நக்கீரன் ரேஞ்சுக்கு விஸ்வரூபமெடுத்து, பல் கடித்து நிற்பார். ‘ஏண்டா... என் தொண்டைத் தண்ணி வத்த, கால் கடுக்க நின்னு, கத்திக்கத்தி சொல்லிக்கொடுத்தேனேடா. ‘காதலிக்கிறேன்’னு எழுதறதுக்கு, ‘கதாளிக்கிரேன்’ன்னு எழுதிருக்கே.
‘நீதான் என் உயிர்’னு எழுதறதுக்குப் பதிலா ‘ணீதான் எண் உயிற்’னு எழுதிருக்கே. உனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தேன் பாரு.. கையை நீட்டுடா கையை நீட்டுடா’ன்னு லவ் லெட்டர் கொடுத்த கோபத்தைத் தாண்டியும் படிக்காத மக்கு சாம்பிராணியாய் இருப்பதால் உண்டான கோபத்தில் வெளுத்தெடுப்பார்.
அண்ணனின் குழந்தை, நோட்டுப்புத்தகத்தில் அட்டை போடப்பட்ட பகுதி, இங்க் பேனாவின் மூடி, ஜாமெண்ட்ரி பாக்ஸ், நடைபாதை காலடி... என காதல் கடிதங்கள் கொடுத்த காலமெல்லாம் காதலை விட சுவையானது.
தம்பி, தங்கச்சிங்களே! இந்தக் கால லவ்வர்ஸ்களே! லவ்வைத் தெரிஞ்சுக்கறீங்களோ இல்லியோ... ‘லவ் லெட்டர்’ பத்தி தெரிஞ்சுக்கங்க. அது லவ்வை விட கிக்கான விஷயம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT