Last Updated : 10 Sep, 2014 09:11 AM

 

Published : 10 Sep 2014 09:11 AM
Last Updated : 10 Sep 2014 09:11 AM

வலைவாசம்: சென்னைக்காரர்களும் மெட்ராஸ் மனிதர்களும்!

வில்லிவாக்கத்திலிருந்து அடையாறு போக நெல்சன் மாணிக்கம் சாலை வழியாகச் செல்வதற்கு ரெண்டு துவாபரயுகம் ஆகும். இதற்காகவே புது ஆவடி சாலை வழி வந்து, ஹாரிங்டன் சாலை வழியாக லயோலா கல்லூரி அருகில் வந்து ஜாயின்ட் அடிப்பது எனது வழக்கம்.

நண்பரைப் பார்க்க இன்று அந்த வழியிலேயே வந்தபோது ஒரு விபத்து. ஒரு பஜேரோ (Pajero) கார்காரர் ராங் சைடில் வந்து ஒரு ஸ்கூட்டி பெப்பைத் தட்டிவிட்டுப் பறந்துவிட்டார். பெப்பில் வந்த நடுத்தர வயதுக்காரருக்கு வலுவான அடி. கையில் நிற்காத ரத்தம். மேலே விழுந்து அழுத்தும் வண்டியின் பாரம் வேறு. விருட்டென பிரேக் அடித்து எனது வண்டியை நிறுத்தி, ஓடிச்சென்று தூக்கினால் அவரால் கையைத் தூக்க இயலவில்லை. ஆள் வேறு கனமாக இருந்தார். அவரைத் தூக்கவே எனக்கு சத்தில்லை. “யாராவது வாங்க வாங்க” என்று நாயாய், பேயாய்க் கத்தியும் ஒருவரும் வந்தபாடில்லை.

பல மாருதிகள், பல்சர்கள் என்று சகல வாகனங்களும் எதுவுமே நடக்காததுபோல் கடந்து சென்றுகொண்டிருந்தன. ஒப்புக்கு இரண்டு மூன்று வண்டிக்காரர்கள் மட்டும் “ என்ன ஆச்சு பாஸ்?” என்று சம்பவ இடத்தில் விசாரணை (crime scene investigation) நடத்திவிட்டுப் பறந்துவிட்டார்கள்.

உதவிக்கு வந்தது அங்கே இருந்த ‘லோக்கல் பசங்க’ மட்டுமே. சம்பவத்தை எங்கிருந்தோ பார்த்தார்கள். திடுதிடுவென வந்தார்கள். கீழே கிடந்த வண்டியை ஓரங்கட்டினார்கள். ஒரு பையன் ஓடிப்போய் தண்ணீர் எடுத்துவந்து வண்டிக்காரரின் காயத்தைக் கழுவினான். பொதுவாக, இந்த மாதிரி வலிய வந்து உதவும் ஆட்கள் ஏதாவது லவட்டிவிடுவார்கள் என்று எண்ணியதாலோ என்னவோ, அந்த வண்டிக்காரர் சட்டைப் பையையும் பர்ஸையும் தடவிப்பார்த்துக்கொண்டே இருந்தார். விபத்தின் பதற்றம், அதுபோக, களவு போய்விடுமோ என்ற ஓர் அச்ச உணர்வு அவருக்கு. இன்னொரு ஆள் தண்ணீர் ஊற்றிக் காயத்தைக் கழுவிக் கொண்டிருக்கும்போதே ஒரு ஆயா அவர் வீட்டிலிருந்து நாற்காலி எடுத்துவந்து அந்த வண்டிக்காரரை உட்கார வைத்தார். இன்னொரு ஆள், “இந்தா சார் ஃபோன்” என்று விழுந்து கிடந்த அவரது சோனி போனை எடுத்துவந்து தந்தார்.

அவர் கொஞ்சம் ஆசுவாசமடைந்ததும் அங்கிருந்த ஒரு ஆட்டோக்காரர் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். “இந்தாப்பா அவர நீதானே தூக்குன” என்று சொல்லி ஒருவர் எனக்கு பவண்டோ கொடுத்தார்.

‘லோக்கல் பையன் மாதிரியே நடந்துக்குற’ என்று அறிவுசார் சமூகம் அடிக்கடி ஒரு சொற்றொடரைச் சொல்லும். 15 நிமிடக் களேபரத்தில் அந்தச் சமூகத்திலிருந்து யாராவது ஒருவர்கூட ‘லோக்கல் பசங்க’ளாக மாறி உதவவில்லை.

விஷயம் அவ்வளவுதான். வேறு ஒன்றும் சொல்லவரவில்லை.

க்ளிஷேவாக ‘மனிதம் செத்துவிட்டது’, ‘ராக்காயி அக்காவுக்குத்தான் எவ்வளவு பாசம்?’, ‘ரிக்‌ஷாக்காரரின் அன்பின் எடை எவ்வளவு இருக்கும்?” என்று ராஜு முருகன் போல் சொல்ல விரும்பவில்லை. ஆனால், சென்னை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால், அது மெட்ராஸ்காரர்களால்தான். சென்னைக்காரர்களால் சத்தியமாக மெட்ராஸ்காரர்கள்போல் அன்பாக இருந்துவிட முடியாது என்று தோன்றுகிறது.

என்றாவது ஒருநாள், சென்னையில் மெட்ராஸ்காரர்கள் குறுகிப்போய் சென்னைக்காரர்களாக நிரம்பி இருப்பார்கள். எப்போது என்று தெரியவில்லை. ஆனால், அப்படி ஒரு காலம் நிச்சயம் வரும். ‘அன்னைக்குப் பொட்டிப் படுக்கையைக் கட்டிக்கொண்டு பண்ருட்டி பக்கம் போய்விட வேண்டும்’ என்றெண்ணிக்கொண்டே வண்டியை அடையாறுக்குக் கிளப்பிக்கொண்டு போனேன்.

>https://www.facebook.com/umamaheshwaran.panneerselvam

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x