Published : 03 Sep 2014 09:37 AM
Last Updated : 03 Sep 2014 09:37 AM
போர் உக்கிரம் அடைந்த ஆண்டு இது. பிரிட்டனைத் தவிர, கிட்டத்தட்ட ஐரோப்பா முழுதும் ஹிட்லரின் நாஜிப் படைகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. தவிர, கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிப் பயணித்திருந்தது போர்.
முசோலினியின் படைகள் கிரேக்கம் மற்றும் டோப்ரூக்கில் தோல்வியடைந்திருந்தன. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வடக்கு ஆப்பிரிக்காவையும், ஏப்ரலில் கிரேக்கம் மற்றும் யுகோஸ்லாவியாவையும் ஜெர்மன் படைகள் ஊடுருவியிருந்தன.
பிரிட்டன் மீதும் ஜெர்மன் மீதும் மாறி மாறிக் குண்டுமழை பொழிந்துகொண்டிருந்தது. போலந்தின் ஆஷ்விட்ஸ் வதை முகாமில் விஷ வாயு அறைகளில் யூதர்கள், ஜிப்ஸிகள், கம்யூ னிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ‘ஆபரேஷன் பார்பரோஸ்ஸா’ என்று அழைக்கப்படும் ரஷ்யா மீதான ஜெர்மனியின் படையெடுப்பு ஜூன் 22-ல் தொடங்கியது. துரிதமாக முன்னேறிய நாஜிக்கள் தொடக்கத்தில் ஆவேசமாகப் போர் புரிந்தனர்.
எனினும், மாவீரன் நெப்போலியனையே நடுங்க வைத்த ரஷ்யாவின் கடுங்குளிர் ஜெர்மனி வீரர்களை உறையச் செய்தது. டிசம்பரில் ரஷ்யப் படைகள் ஜெர்மனிக்குப் பதிலடி கொடுத்தன. பசிபிக் பிராந்தியம் முழுதும் போரைக் கடுமை யாகப் பாதித்தது பனிக்காலம்.
இந்தப் போரில் அமெரிக்கா களமிறங்கக் காரணமான பேர்ல் ஹார்பர் தாக்குதலை டிசம்பர் 7-ல் ஜப்பான் அரங்கேற்றியது. ஜப்பான் மீது அமெரிக்கா போர் அறிவித்த சில நாட்களில் அமெரிக்கா மீது முசோலினியும் ஹிட்லரும் போர்ப் பிரகடனம் செய்தனர். பேர்ல் ஹார்பரைத் தாக்கிய கையோடு, பிலிப்பைன்ஸ், பர்மா, ஹாங்காங்கைத் தாக்கியது ஜப்பான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT