Published : 08 Sep 2014 09:55 AM
Last Updated : 08 Sep 2014 09:55 AM
இருபதாம் நூற்றாண்டில் உலக இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அமெரிக்க எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே. அவரது படைப்புகளில், ‘கிழவனும் கடலும்’ (Old Man and The Sea) என்ற நாவல்தான் உலகமெங்கும் அவரது பெயர் இன்றும் உச்சரிக்கப்படக் காரணம்.
சாண்டியாகு என்ற முதிய கடலோடியின் தூண்டிலில் 84 நாட்களாக எந்த மீனும் சிக்கவில்லை. இந்தச் சூழலில், தனியாக மீன் பிடிக்கச் செல்லும் சாண்டியாகுவின் தூண்டிலில் சிக்கும் மார்லின் என்ற பெரிய வகை மீனுக்கும் அவருக்கும் இடையில் நடக்கும் வாழ்க்கைப் போராட்டம்தான் கதை. கச்சிதமான வார்த்தைகள், தேர்ந்த நடை மூலம் வாசகர் மனதில் கடலின் பரப்பை விஸ்தாரமாக விரிக்கும் படைப்பு இந்த நாவல். மொத்தமே 27,000 வார்த்தைகள்தான். எனினும், இந்தக் கதை இயற்கை என்ற பேரதிசயத்துக்கு முன்னால் மனிதனின் இருத்தலியல் போராட்டத்தை அற்புதமாகச் சித்தரிக்கிறது.
1951-ல் கியூபாவில் இருந்தபோது இந்த நாவலை ஹெமிங்வே எழுதினார். 1952-ல் இதே நாளில் சார்லஸ் ஸ்க்ரிப்னர்ஸ் சன்ஸ் என்ற அமெரிக்கப் பதிப்பகம் இந்த நாவலைப் பதிப்பித்தது. 1953-ல் இந்த நாவலுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. 1954-ல் ஹெமிங்வேக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கவும் இந்தப் புத்தகம்தான் காரணமாக இருந்தது. - சரித்திரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT