Published : 14 Jan 2019 04:12 PM
Last Updated : 14 Jan 2019 04:12 PM
''நமக்குப் பிடித்தமான இசையைக் கேட்கும் போதெல்லாம் மனதில் ஓர் ஆழமான அமைதி அந்த நாளை அழகரிக்கும்''. அதுபோலவே இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் நிலவிய கூட்ட இரைச்சல்களுக்கு இடையே வாசகர்களைத் தங்களது அரங்குகளை நோக்கி ஈர்த்துக் கொண்டிருந்தது ‘தி மியூசிக் ஸ்கூல்’ அரங்கு.
அரங்குக்குள் நுழையும்போதே, உலகப் புகழ்பெற்ற இசை அறிஞர்களான பீத்தோவன், மோசார்ட் ஆகியோரது புகைப்படங்கள் வாசகர்களை வரவேற்றுக் கொண்டிருந்தன.
இசை ஆசிரியர்கள் துணையில்லாமல் இசைக் கருவிகளை எப்படி எளிமையாகக் கற்பது அதுவும் குறிப்பாக தமிழில் எவ்வாறு அதனைப் பயில்வது என்று இசையில் ஆர்வம் உள்ளவர்களின் தேர்வாக ’தி மியூசிக் ஸ்கூல்’ அரங்கம் ( அரங்கம் எண் 135 உள்ளது).
’தி மியூசிக் ஸ்கூல்’ நூலின் ஆசிரியருமான செழியன், சுமார் 15 ஆண்டுகள் ஆய்வு செய்து மேற்கத்திய இசைக்குறிப்புகளைப் ( Notations) படிக்கவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்வதற்காக இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார்.
10 தொகுப்புகளைக் கொண்ட இந்தப் புத்தகம் தற்போது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 135-ல் நிறைந்து காணப்படுகிறது.
செழியன் சினிமா துறையிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். சமீபத்தில் தேசிய விருது பெற்ற ’டூலெட்’ படத்தினர் இயக்குநர். 'கல்லூரி', 'ரெட்டச்சுழி', 'மகிழ்ச்சி', 'தென்மேற்குப் பருவக் காற்று', 'பரதேசி', 'தாரை தப்பட்டை', 'ஜோக்கர்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு 500 ரூபாய்க்கு விற்பனையாகும் புத்தகம் தள்ளுபடி விலையில் ரூபாய்க்கு 300க்கு வாசர்களுக்கு அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது கீபோர்ட் இசைக் (Notes) குறிப்புகள் அடங்கிய புத்தகமும் ரூ. 100 விலைக்கு விற்பனைக்கு உள்ளது.
மேற்கத்திய இசைக்கான லண்டனிலுள்ள ’டிரிடினி இசைக் கல்லூரி’ தேர்வுகள் நடத்தி, எட்டு நிலைகளில் சான்றிதழ் வழங்குகிறது. இதில் இசை கோட்பாடு, செய்முறை என நடத்தப்படும் தேர்வுகளில் மூன்று நிலைகளில் தேர்வெழுதி வெற்றி பெற ‘தி மியூசிக் ஸ்கூல்’ நூல் பெரிதும் உதவுவதாகக் கூறுகிறார் செழியனின் உதவியாளர் ராஜா,
இதுகுறித்து ராஜா நம்மிடம் கூறும்போது, ”இன்றைய பதற்றமான சமூக சூழலில் நாம் அனைவரும் எந்நேரமும் ஒருவிதப் பதற்றத்துடத்தான் நேரங்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து தப்பிக்க நம்மில் பெரும்பாலானவர்கள் செய்வது பிடித்த இசையைக் கேட்பது, உறங்குவது, இயற்கையை ரசிப்பது. இதில் உறக்கத்தினால் நமக்கு ஒருவித அமைதி மனதில் உண்டாகும்.
இதே அமைதியை வாழ்நாள் முழுவதும் நீடிக்க விரும்பினால் நீங்கள் இசை கற்றுக் கொள்ள வேண்டும். நமக்குள் ஒரு அமைதி இருந்தாலே நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ளலாம். இதன் விளைவு நம்மை நாம் தெரிந்து கொள்ளலாம்.
மனிதர்களைப் பொறுத்தவரை மூளைக்கு வலது, இடது என்று இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்று கற்பனையாக யோசிக்கும், மற்றொன்று தர்க்க ரீதியாக நம்மை அணுகும்.
இன்றைய கல்வி முறையும் சரி, வாழ்க்கை முறையும் சரி தர்க்க ரீதியாக ஒரு வீதத்தை அணுகச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. தவிர, கற்பனை சார்ந்து நம்மை அணுகத் தவறி இருக்கிறது.
இசை சார்ந்து நாம் பயிலும்போது நமது கற்பனை சார்ந்த மூளையின் பகுதியும் துண்டப்படுகிறது. மேலும் குழந்தைகள் இசையை கற்றுக் கொண்டால் அவர்கள் கணிதம் மற்றும் அறிவியலிலில் சிறந்து விளங்குவார்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இசை கற்றுக்கொள்வதன் மூலம் நமது பயம், தயக்கம் ஆகியவை குறைகின்றன.
இசை நம்மை பொறுமைசாலியாக்குகிறது. ஒரு கூட்டத்தில் 100 பேர் இருந்தால் அவற்றில் இசை பயிலும் 10 பேரை நீங்கள் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். இசை உங்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும்.
எனவே அத்தகைய இசையை கற்றுக் கொள்வதற்காக இந்தப் பயிற்சி புத்தகத்தை கிட்டத்தட்ட 15 வருட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு செழியன் எழுதி இருக்கிறார். அவரது மனைவி பிரேமா செழியன் இசை குறித்த வகுப்புகளை குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். இந்தப் புத்தகம் உங்கள் இல்லத்தில் இருந்தால் யாருடைய உதவியும், வழிகாட்டுதலும் இல்லாமல் நீங்கள் பயிற்சி பெறலாம். வெஸ்டன் கலாச்சார இசை பற்றி இந்தப் புத்தகத்தின் பத்து தொகுப்புகளிலும் அடங்கி உள்ளது.
எங்கள் அரங்குக்கு குழந்தைகள்தான் அதிகம் வருகை தருகின்றனர். மொத்த தொகுப்பையும் வாங்கிக் கொள்பவர்களும் உள்ளனர். அல்லது முதலில் ஒரு தொகுப்பை வாங்கிச் சென்றுவிட்டு பிடித்த பின்னர் இரண்டு, மூன்று நாட்களுக்குப் பின் வந்து மொத்த தொகுப்பையும் வாங்கிக் கொள்பவர்களும் உண்டு. புத்தகத்தில் சந்தேகம் ஏதாவது இருந்தால் அந்தப் புத்தகத்திலுள்ள இ - மெயிலுக்கு தொடர்புகொண்டு நீங்கள் கேட்கலாம்” என்றார்.
வெறும் இசை ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் இசையை கற்றுக் கொள்ளலாம் என்று இல்லாமல் எல்லாரும் தங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு இசைக்கருவியையாவது தீட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ’தி மியூசிக் ஸ்கூல்’ அரங்கு வரவழைக்கிறது.
தி மியூசிக் ஸ்கூல்: இணையதள பக்கம் - http://www.themusicschool.co.in/index.php
தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT