Last Updated : 11 Dec, 2018 01:11 PM

 

Published : 11 Dec 2018 01:11 PM
Last Updated : 11 Dec 2018 01:11 PM

தேசியக் கட்சிகளைச் சாய்த்த சந்திரசேகர் ராவின் ராஜ தந்திரம்: தெலங்கானாவில் மீண்டும் அரியணை

பலரும் எதிர்பார்த்தது போலவே தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இரண்டு தேசியக் கட்சிகளையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலை சந்தித்த சந்திரசேகர் ராவின் ராஜ தந்திரத்துக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

பல ஆண்டுப் போராட்டங்களுக்குப் பிறகு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கடந்த  2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா மாநிலம் உருவானது. அப்போது நடந்த சட்டப் பேரவை தேர்தலில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

அடுத்த ஆண்டு மே மாதம் வரை சட்டப்பேரவையின் பதவிக்காலம் உள்ளது. மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் முன்கூட்டியே சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு 6 மாதங்கள் முன்கூட்டியே டிசம்பரில் தேர்தலைச் சந்தித்தார் சந்திரசேகர் ராவ்.

மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தினால் அதன் பாதிப்புகள் இருக்கும். மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அதன் தாக்கம் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என சந்திரசேகர் ராவ் கருதினார். மோடி அலை வீசினாலும் சரி, பாஜக எதிர்ப்பு அலை வீசினாலும் சரி அதனால் எதிராளியான காங்கிரஸுக்கே பயன் கிட்டும் என்பதால் புதிய யுக்தியைக் கையில் எடுத்தார் சந்திரசேகர் ராவ்.

இரண்டு கட்சிகளையும் சம தூரத்தில் வைத்திருக்கும் அவர் ஹைதராபாத்தில் முஸ்லிம் சமூகத்தின் செல்வாக்கைப் பெற்ற ஒவைஸியை மட்டும் தனது அணியில் சேர்த்துக் கொண்டார். அதிகாரபூர்வ கூட்டணி என அறிவிக்காவிட்டாலும் இரு கட்சிகளும் இணக்கத்துடன் செயல்பட்டன. பாஜகவை விட தெலங்கானாவில் காங்கிரஸ் வலிமையான கட்சி என்பதாலும், எதிர்க்கட்சியாக அமர வாய்ப்புள்ளதாலும் அதனை அதிகமாக எதிர்த்து வந்தார் சந்திரசேகர் ராவ். அதேசமயம் பாஜகவுடன்  நேசம் பாராட்டாமல், மூன்றாவது அணி என்ற தனிப்பட்ட பாதையை உருவாக்கினார்.

இதன் மூலம் இரு கட்சிகளையும் விரும்பாத மக்களின் வாக்குகளை அவரால் ஒருங்கிணைக்க முடிந்தது. இரு தேசியக்கட்சிகளையும் புறந்தள்ளிய அவர், அவர்களை விடவும் தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடுவையே அதிகம் விமர்சித்தார். இதன் மூலம் தெலங்கானாவுக்கு சந்திரபாபு நாயுடு துரோகம் செய்வர் என்ற பிரசாரத்தை முன்னெடுத்தார். இதனால் தெலுங்கு மொழி பேசும் மக்களின் முதன்மையான கட்சி தெலங்கானா ராஷ்டிர சமிதி என்பதை சந்திரசேகர் ராவ் நிறுவினார்.

சந்திரசேகர் ராவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தாலும், பாஜக அந்த அளவுக்கு விமர்சிக்கவில்லை. எனினும் முஸ்லிம் மக்களுக்கு சந்திரசேகர் ராவ் பிரியாணி வழங்கி வாக்கு சேகரிப்பதாக அமித் ஷா பிரசாரம் செய்தது டிஆர்எஸுக்கு கூடுதல் பலமே. இரு தேசியக் கட்சிகளையும் புறந்தள்ளி விட்டு தனித்த பாதையை கண்ட சந்திசேகர் ராவ் மீண்டும் முதல்வர் பதவியில் அமரும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x