Published : 05 Nov 2018 12:35 PM
Last Updated : 05 Nov 2018 12:35 PM
புத்தரைப் புரிந்துகொள்ளுதல்!
புத்தர் மற்றும் பவுத்தம் என்பதை வெறும் கருத்துருவாக்கம் என்கிற அளவில் கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில் - நாம் இன்றைக்கு அறிகிற, நம் மக்களில் பலர் போற்றுகிற அல்லது பின் தொடர்கிற மதம் சார்ந்த விஷயங்கள் எல்லாமே கருத்துருவாக்கம்தான். ஆனால், நடைமுறையில் இருக்கிற இத்தகைய கருத்துருவாக்கத்துடன் புத்தரைப் பொருத்திப் பார்க்க முடியாது.
புத்தர் என்பது ஆளுமையின் வெளிப்பாடு. ஆளுமையின் படிமம்.
இன்றைய நாளில் மக்களில் பலர் நம்புகிற மதம் என்கிற, கடவுள் என்கிற கருத்துருவாக்கத்தை காலம் காலமாக அந்தந்த மதங்களைச் சார்ந்த பெரியவர்கள் உருவாக்கி வைத்திருக்கின்றனர். இவை அத்தனையும் கற்பனையையும் நம்பிக்கையையும்தான் வேர்களாகக் கொண்டு படர்ந்திருக்கின்றன.
உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மதங்களுக்கும், மத நம்பிக்கைகளுக்கும், மதக் கடவுளுக்கும் இது பொருந்தும். ஆனால், இந்த வட்டத்துக்குள் புத்தரை அடக்கிவிட முடியாது. ஏனைய மதங்கள் கற்பனையின் வெளிப்பாடாக புராண, இதிகாசங்களின் குரலாகத்தான் அமைந்துள்ளன. ஆனால் புத்தர் என்பது ஒரு ஆளுமை. அந்த ஆளுமைக்கு வரலாறு உண்டு. மக்களில் இருந்து தோன்றி ஞானம் பெற்ற ஒரு ஆளுமையே புத்தர்.
புராண, இதிகாசங்களுக்கு எதிரான புத்தரையும் சில வரலாற்று ஆசிரியர்கள் விட்டு வைக்கவில்லை. தங்கள் கற்பனையைப் புகுத்தி, அமானுஷ்ய சக்தி பெற்றவராக தங்கள் படைப்புகளில் வரைந்து வைத்திருக்கின்றனர். இவற்றை வைத்து புத்தரைப் புரிந்துகொள்ளக் கூடாது.
''உங்களை ஞானி என்கின்றனர்... மெய்ப்பொருள் கண்டவர் என்றெல்லாம் சொல்கின்றனர்... அதோ அந்த தண்ணீரின் மீது நடந்து நீங்கள் ஞானி என்று உங்களை நிரூபியுங்கள்'' என்றான் ஒரு மனிதன். அந்த மனிதனைப் பார்த்து புத்தர் சொன்னார்: ''அன்பரே... தண்ணீரில் நடந்துவிட்டால் என்னை நீங்கள் ஞானி என்று நம்பிவிடுவீர்கள். தண்ணீரில் நடக்காவிட்டால் என்னை சாதாரண மனிதன் என்று சொல்வீர்கள். இப்போது சொல்கிறேன்... எனக்கு தண்ணீர் மீது நடக்கத் தெரியாது!'' என்றார்.
அறிவின் நிலையில் இருந்து ஒவ்வொன்றையும் ஆராயச் சொன்னவர் புத்தர். உணர்வின் பிரதிபலிப்பாக மட்டுமே வாழ்வு அமைந்துவிடக் கூடாது என்பதை தன் வாழ்நாளெல்லாம் கவனப்படுத்தியவர் புத்தர். இந்த நிலையில் இருந்துதான் மற்ற மதம் சார்ந்த பெரியவர்களிடம் இருந்து புத்தர் மாறுபடுகிறார். ஆம்! புத்தர் வேறுபட்டு நிற்கும் உயர்ந்த இடம் இதுதான். அதனால்தான் புத்தரை நாம் அறிவின் ஒளியாக ஏற்கிறோம். அதே சமயம் அன்பின் வழிகாட்டியாகவும் பார்க்கிறோம்.
உலகில் இருக்கிற மற்ற மதங்கள் எதுவுமே அறிவியல் கருத்துகளுக்கு சிறிதுகூட செவிமடுப்பதே இல்லை. அறிவியலைப் பொருட்டாகவே கருதுவது இல்லை. அறிவியலால் அளந்தால் அது மதம் கிடையாது. உங்கள் அறிவியலால் கடவுளை அளக்கவே முடியாது. அப்படி அளந்தால் அது கடவுளே கிடையாது என்கிற கருத்துருவாக்கத்தை அவர்கள் காலம் காலமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இப்படியான கருத்துருவாக்கங்களுக்கு மத்தியில் தனித்த அடையாளமாக புத்தர் வெளிப்படுகிறார்.
உண்மையில் - புத்தரை வழிமொழிந்து உருவான பவுத்தம் அறிவியலின் முடிவுகளை ஏற்றுக்கொள்வதற்குச் சிறிதும் தயங்குவதே இல்லை. 'மெய்ப்பொருள் தேடல் என்பதே விமர்சனத்துக்குரிய (Critical Investigation) விசாரணைகளால் உருவாவதாகும்' என்பதே புத்தரின் ஆலோசனையாகும். பவுத்தம் அறிவுறுத்தும் விஷயங்களில், அதன் தன்மைகளில், அதன் வெளிப்பாடுகளில் ஏதேனும் தவறு இருக்கிறது என்று அறிவியல் சுட்டிக்காட்டினால், அப்படி அறிவியல் சுட்டிக்காட்டி நிரூபிக்கும் பிழைகளை பவுத்ததில் இருந்து விலக்கிவிடவும் பவுத்தம் தயங்கயதில்லை. அதனால்தான் புத்த ஞானத்திலும், பவுத்தத்திலும் பொய்மைக்கும் கற்பனை சரடுக்கும் வேலையில்லாமல் போனது. எல்லா விஷயங்களையும் பகுத்தறிந்து பார்ப்பதால் பவுத்தத்தை ‘பகுத்தம்’ என்றும் அழைக்கலாம் என்று தோன்றுகிறது.
இதில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். எல்லா இடங்களிலும் சனாதனிகளும், அடிப்படைவாதிகளும் உட்புகுந்துவிடுவார்கள்தானே. அப்படித்தான் பின்னாட்களில் பவுத்தத்துக்குள் சில சனாதனிகளும், அடிப்படைவாதிகளும் உட்புகுந்தனர். அவர்கள் ‘மெய்ப்பொருளை அறிவதில் அறிவியலுக்கு அப்பாற்பட்ட வழிமுறைகளும் தேவை’ என்று வலியுறுத்தினர். ஆனால் புத்த தருமத்தை ஆழமாக உற்றறிபவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஏற்றுக்கொள்ளக் கூடாதுதானே!
வழிபாடுகளுக்கும், சடங்குகளுக்கும், நேர்த்திக்கடன்களுக்கும் எதிர் கருத்துகளை வலியுறுத்திய புத்தர் என்ற தொன்மம் உருவாக்கப்பட்டதல்ல. எவராலும் உருவாக்க முடியாத படிமம் அது. செயல் வழித்தோன்றிய தொன்மத்தை கருத்துகளால் உருவாக்க முடியாது என்பது புரிந்தால் புத்தரைப் புரிந்துகொள்வது எளிது. ஆம், புத்தர் என்பது விழுமியம்!
இன்றைக்கு உள்ள பல நூல்களில் புத்தர் தனது வாழ்நாளில் சொன்னவற்றைக் குறிப்பிடும்போது எல்லோருமே ‘புத்தரின் போதனைகள்’, ‘புத்தரின் உபதேசங்கள்’ 'புத்தரின் அறிவுரைகள்' என்றே குறிப்பிடுகின்றனர். இவற்றில் எனக்கு உடன்பாடில்லை. உபதேசம், அறிவுரை, போதனைகள் என்கிறபேதே அங்கே உயர்ந்த பீடம் ஒன்று வந்து உட்கார்ந்துகொள்கிறது. மிகையான கற்பிதங்களுக்கு இடம்கொடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் புத்தர். எல்லோரும் எப்போதும் சமத்துவத்தை நோக்கிய திசையில் பயணிக்க வேண்டும் என்று விரும்பிய புத்தரை, மற்ற தத்துவ ஆளுமைகளுடன் சேர்த்துவிடக் கூடாது. அந்த வட்டத்துக்கு வெளியே நிற்பவர்தான் புத்தர்.
- இன்னும் நடப்போம்...
மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT