Published : 24 Nov 2018 05:13 PM
Last Updated : 24 Nov 2018 05:13 PM

கோயம்புத்தூர் தினம்:  அது எங்கூருங்ண்ணா..!

இன்று கோயம்புத்தூர் தினமாம். 10 ஆண்டுகளுக்கு முன்னால் 2008-ல் கோவை - கேரளா எல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் சேர்ந்தது நேற்று நடந்தது மாதிரி இருக்கிறது.

கோயம்புத்தூராக இருந்து ஈரோடாக உருமாறி, கடைசியில் திருப்பூரில் வந்துநிற்கும் மாவட்டத்தின் ஓரத்தில் உள்ள விவசாயக் கிராமம் எங்களுடையது. வேளாண்மைக்காக வேண்டி தோட்டத்துக்குள் குடியிருந்தோம். கோயம்புத்தூரின் மீதிருந்த அளப்பற்ற காதலால், அங்குதான் என் கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

12 -ம் வகுப்பில் சுமாரான மதிப்பெண்களைப் பெற்று, அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்கில் படங்களைப் பார்த்து தேர்வு செய்த கல்லூரியைப் போய்ப் பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. கல்லூரி ஆரம்பித்து 3 வருடங்களே ஆகியிருந்தன. ஆனால் கல்லூரியைத் தேர்வு செய்துவிட்டு, பணத்தையும் கட்டிவிட்டதால் எதுவும் செய்ய முடியாத நிலை. ஒருவாறாக ஏற்றுக்கொண்டேன்.

எங்களின் தோட்டத்தை விடவும் பாலக்காட்டை ஒட்டியிருந்த கல்லூரியில் நிலவிய இதமான தட்பவெப்பம் ஆறுதலைக் கொடுத்தது.  குறிப்பாக கோவையில் இருந்து வாளையார் செல்லும் மார்க்கத்தில் குனியமுத்தூரில் ஒரு குளம் இருக்கும். அதை நெருங்கும்போதே தட்பவெப்பம் மாறும்.  ஜில்லிடும்.

வெயில் சுளீரென அடித்தாலும் உடலுக்கு உறுத்தாது; தோல் எரியாது. பெற்றோரைப் பிரிந்திருப்பது ஓரத்தில் வலித்தாலும் ஒருவாறாக கோவை செட் ஆனது.

தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு, நுனி நாக்கு ஆங்கிலத்தில் புரளும் கேரள கூட்டுகாரிகளுடன் (தோழிகள்) பழகுவது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. ஆங்கிலத்தில் வார்த்தைகள் மனதில் உருவானாலும் அதைக் கோர்வையாக்கி சொல்லி முடிக்கும்போது வாய் தடுமாறியது.

இருந்தாலும் வலியை மறைத்து மெல்லப் பேசப் பழகினேன். மலையாளிகள் சீக்கிரத்தில் தமிழில் அளவளாவ ஆரம்பித்தனர். அவர்களுடன் விடுதியில் வாசம் செய்ததன் பலனாக அவர்களைப் பின்பற்றி நானும் மலையாளத்தில் பேச ஆரம்பித்தேன். நாட்கள் செல்லச்செல்ல வெளி மாவட்டத்துக்காரர்களும், கேரள நண்பிகளும் கோவையைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம்.

வாளையாருக்கு அருகே இருந்த கல்லூரியில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வரும் அரசுப் பேருந்தில் ஏறினால் உக்கடம் செல்லலாம்; காந்திபுரம் போகலாம். காசு அதிகமாக இருந்தால் ஆட்டோவுக்கு 30 ரூபாய் கொடுத்து மெயின் ரோட்டுக்கு வந்து, சில நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் பேருந்தில் பயணிக்கலாம். அப்போதெல்லாம் பணத்தைவிட நேரம்தான் அதிகம் இருந்தது. அதனால் காத்திருந்து பஸ் ஏறி ஊர் சுற்றுவோம். பஸ் வராமல் கடுப்பேற்றிய நேரங்களில் 3 கி.மீ. தூரத்தை நடந்தே கடந்திருக்கிறோம்.

முதன்முதலாக நான் வெளியே போனது சங்கம் தியேட்டரில் படம் பார்க்க. 'வாரணம் ஆயிரம்' படத்தை ஆயிரமாயிரம் நண்பர்களுடன் கொண்டாடித் தீர்த்தோம். அடுத்தடுத்த தடவைகளில் மருதமலை, பேரூர் கோயில் என்று பயணம் விரிந்தது. ஒருமுறை நண்பர்களுடன் கோவை குற்றாலம் சென்றோம். பிரம்மிப்பையும் பயத்தையும் ஒருசேரக் கொடுத்த இடம் அது. யானைகள் சர்வசாதாரணமாக சுற்றித் திரியும். நீரோடைகள் நம்மைக் குறுக்கிடும். மேகங்கள் நம் தலையைத் தொட்டுச் செல்லும். விவரிக்க முடியாத உணர்வுகளைக் கொடுத்த இடமது.

மால் கலாச்சாரம் அப்போதுதான் தமிழகத்தில் தலையெடுக்க ஆரம்பித்திருந்தது. ஆர்.எஸ்.புரத்தில் புதிதாக ஆரம்பித்திருந்த ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலுக்குப் போய் சுற்றிப் பார்த்தோம். விலையைக் கேட்டு தலையைச் சுற்றியது. 'விண்டோ ஷாப்பிங்' செய்துவிட்டு வந்துவிட்டோம். அதேபோல காந்திபுரம் வழியாகப் பயணித்தால் விஓசி பூங்காவுக்குக் கண்டிப்பாகச் செல்வோம். குட்டி தேசியப் பூங்கா அது. சிங்கம், புலியைத் தவிர் பெரும்பாலான அனைத்து விலங்குகள், உயிரிகளையும் அங்கே பார்க்கலாம். பூங்காவுக்கு எதிரே இருந்த தாய் உணவகத்தின் நான் - வெஜ் உணவுகள் ரொம்பவே ஸ்பெஷல்.

ஊரைச் சுற்ற அடுத்த உபாயத்தையும் கையாண்டோம். கல்லூரிகளில் சிம்போசியத்தில் (கருத்தரங்கு) கலந்துகொள்வதாக ஓடி (ஆன் ட்யூட்டி) வாங்குவோம். கோவையைச் சுற்றியுள்ள கல்லூரிகளுக்குச் செல்வோம். போட்டிகளில் கலந்துகொண்டு சான்றிதழ்களை வாங்கிவிட்டு, அப்படியே அருகில் உள்ள இடங்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு கல்லூரிக்குத் திரும்புவோம்.

இப்படியே ஈச்சனாரி, துடியலூர், ராமநாதபுரம், சரவணம்பட்டி பகுதிகளைச் சுற்றிப்பார்த்தோம். வெளியே போகாத விடுமுறை நாட்களில் கல்லூரி வளாகத்தைச் சுற்றிவருவோம். பச்சைப்பசேல் செடிகளும், ரம்மியமான காற்றும், இதமான வெப்பமும் ஊட்டிக்குப் போன உணர்வைக் கொடுக்கும்.

உக்கடத்தில் உள்ள பழைய புத்தக மார்க்கெட் தேசிய அளவிலான பொறியியல் ஆசிரியர்களை அறிமுகம் செய்துவைத்தது. பெரும்பாலானோர் அங்கேதான் அனைத்துப் புத்தகங்களையும் வாங்குவோம். உக்கடம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ரோஸ்ட் கடையில், 18 வகையான ரோஸ்டுகள் கிடைக்கும்.எங்கே வெளியே சுற்றிவிட்டுக் கல்லூரி திரும்பினாலும் அதில் ஒருவகையைச் சுவைப்பது எங்களின் வழக்கம்.

இப்படியாகக் கல்லூரி நாட்கள் கழிந்தன. படிப்பும் முடிந்தது. ஒரே நேரத்தில் கோவையிலும் சென்னையிலும் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை கிடைத்தது. ஒரே இடத்தில் குதிரை ஓட்டவேண்டாம் என்று சென்னையைத் தேர்வு செய்தேன். அதற்கான பலனையும் வெகு சீக்கிரத்திலேயே அனுபவித்தேன். வேலைக்குச் சேர்ந்தது வெயில் கொளுத்தும் ஜூன் மாதத்தில்..

அலுவலகத்தில் ஏஸி என்பதால் தப்பித்துவிட்டாலும், விடுதியில் வெயில் வாட்டியது. காலையில் குளித்து முடித்த உடனே, வேர்த்துக் கொட்டும். மீண்டும் குளிக்கலாமா என்று யோசித்தால், தண்ணீர்ப் பற்றாக்குறையும் நேரமின்மையும் அதற்கு இடம் தராது. சூட்டைத் தாங்காமல் உடலெங்கும் கொப்புளங்கள் வர ஆரம்பித்தன.

சரி ஊருக்குப் பெட்டியைக் கட்டிவிடலாம் என்னும்போது உடலநிலை மெல்ல மெல்ல சென்னைக்குப் பழக ஆரம்பித்தது. இங்கும் நண்பர்கள் உருவாக ஆரம்பித்தார்கள். தி நகர், சரவணா ஸ்டோர்ஸ் எனத் தொடங்கி டவர் பார்க், செம்மொழி பூங்கா, முருகன் இட்லிக் கடை என வலம் வர ஆரம்பித்தேன். ஐடி துறையில் இருந்து ஆர்வத்தின் காரணமாக பத்திரிகைத் துறைக்கும் வேலையை மாற்றியாகிவிட்டது.

வேலை காரணமாக சென்னைவாசியாகவும் ஆகிவிட்டேன். பேச்சு மொழியும், சில பொதுவெளி வழக்கங்களும் மெல்ல மாறியிருக்கின்றன.

பண்டிகை, விசேஷங்கள் என சொந்த மண்ணுக்குப் போனால், தானாக வந்து ஒட்டிக் கொள்கிறது தேனாய் இனிக்கும் கொங்குத் தமிழ்.

சென்னைக்குத் திரும்பும்போது ஏனோ ஒரு மென்சோகம் வந்துவிடுகிறது.

சென்னை நல்ல ஊர்தான். வேலை, சம்பாத்தியம், கடற்கரை, மால்,  நட்பு வட்டம்... எல்லா வசதிகள் இருந்தாலும்... கோயமுத்தூர் போல வருமா?.. அது எங்கூருங்ண்ணா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x