Published : 08 Nov 2018 07:44 PM
Last Updated : 08 Nov 2018 07:44 PM
புலன்களை நம்பாதே விழிப்புணர்வை நம்பு!
'சுயம் இன்மை' என்கிற சொல்லை உலக அளவில் முதன்முறையாக பயன்படுத்தியவர் புத்தர்தான். மன அற்றுப்போகும்போது சுயம் வெற்றிடமாகிறது. அகந்தையின் எல்லைகளைக் கடந்து தூய வெட்ட வெளியாகிறது. எதனாலும் தொடர்புகொள்ள முடியாத நிலையை அடைகிறது என்று அறிவுறுத்தியவர் புத்தர்.
*** **** **** ***
புத்தருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆலயம் ஜப்பானில் உள்ளது. ஒரு புத்தர் சிலை கூட இல்லாமல் அந்த ஆலயம் வெறுமையாகக் காட்சி தரும். அந்தத் தூய, வெறுமையானம் மவுனமான இடமே ‘புத்தர்’ என்கின்றனர் ஜப்பானிய புத்த பிட்சுகள்.
*** *** ****
ஏற்றமும் இறக்கமும்!
அந்த இளைஞனின் பெயர் - வம்சன். வாழ்க்கை தனக்கு எந்த சந்தோஷங்களையும் வழங்கவில்லை என்று கவலைப்பட்டான். துயரங்களை மட்டுமே பரிசளித்த தனது வாழ்க்கையை பலி வாங்கத் துடித்த வம்சன், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தான். தன்னுடைய சாவுதான் தன்னுடைய வாழ்க்கைக்கு தான் வழங்கும் மோசமான பரிசு என்று வம்சன் கருதினான்.
மிகவும் உயரமான மரத்தின் உச்சிக்குச் சென்று அங்கிருந்த கீழே குதித்து தன் இன்னுயிரைப் போக்கிக்கொள்ள அவன் முயற்சித்தான். அப்போது அந்த மலைப் பகுதியில் குடியிருந்த பழங்குடியினர்... அவனைப் பார்த்து ‘’எதுவாக இருந்தாலும் கீழே இறங்கி வா... பேசி தீர்த்துக்கொள்ளலாம். உயிரைப் போக்கிக் கொள்வது எந்த துயருக்கும் தீர்வாகாது...’’ என்று உரக்கக் கூவினர்.
அவனுடைய காதில் இந்த பழங்குடியினரின் எந்த ஆறுதல் மொழிகளும் பலிக்கவில்லை.
''இல்லை நான் மிகவும் துயருற்று இருக்கிறேன். நான் என் இறப்பின் மூலமாக என் இந்த மோசமான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்க நினைக்கிறேன். இதுபோன்ற மொசமான வாழ்க்கை என்னோடு முடிந்துவிட வேண்டும். என் மோசமான வாழ்க்கைக்கு நான் என் சாவைப் பலிகொடுத்து பாடம் கற்பிக்கப் போகிறேன்!’’ என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான் வம்சன்.
அப்போது அந்தப் பழங்குடி மக்களின் தலைமை மனிதரும் நூறு வயதை நெருங்கிக்கொண்டிருந்த பூர்வான் அங்கு வந்து... ''இளைஞனே... கீழே இறங்கி வா... மோசமான உன் வாழ்க்கைக்கு என்ன சாவை பரிசளிக்கிறேன்... நீ கீழே இறங்கி வா’’ என்றார்.
பூர்வான் சொல்வதைக் கேட்ட வம்சன் ''என் உயிரைக் காப்பாற்ற நினைக்கிற உங்களால் கூட என் வாழ்க்கையைக் காப்பாற்ற முடியாது. என் இறப்பைத் தடுக்காதீர்கள்’’ என்றான்.
''சரி இளைஞனே... நீ உன் உயிரை மாய்த்துக்கொள்வதில் உறுதியாக இருக்கிறாய். உன்னிடம் எது பேசினாலும் பயனில்லை. உயிர்விடப் போகிற உன்னிடம் கடைசியாக ஒரு வேண்டுகோள். உன் விருப்பம் போலவே உனது உடம்பில் இருந்து உன் உயிரை மாய்த்துக்கொண்டுவிடு... உன் இறப்புக்குப் பிறகு உன் மோசமான வாழ்க்கையை நான் எடுத்துக்கொண்டு... அதை நான் வாழ ஆரம்பிக்கிறேன்’’ என்றார்.
அதைக் கேட்ட அந்த இளைஞன் உயரமான அந்த மரத்தில் இருந்து கீழிறங்கி வந்து... முதியவர் பூர்வனின் கைகளை எடுத்து ஒற்றிக்கொண்டு... ''என் மோசமான வாழ்க்கையை என்னைப் போல வேறு எவருமே வாழக்கூடாது என்று கருதுகிறேன்'' என்று சொல்லி தற்கொலை முயற்சியைக் கைவிட்டான்.
அந்த பூர்வனிடம் அந்த மலைக் கிராமத்து பழங்குடி மக்கள்... எப்படி திடீரென்று அப்படி பேசி அவனை தற்கொலையில் இருந்து மீட்டீர்கள்?’’ என்று கேட்டனர்.
பூர்வன் சொன்னார்:
அந்த இளைஞன் வம்சன் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவனது வார்த்தைகளுக்குள் உள்ளே போய் பார்த்தேன். இந்த உலகில் தனக்கு மட்டுமே இப்படியான மோசமான வாழ்க்கை வாய்த்திருக்கிறது .
அப்படியான வாழ்க்கையை சாவுக்கு மட்டுமே பரிசளிக்க விரும்பிய அவன் மனம் சமநிலையில் இருந்தது எனக்குத் தெரிய வந்தது. அவனது மனசின் சமநிலையை எப்படிக் குலைப்பது என்று யோசித்தேன். என்ன சொன்னால் அவன் சமநிலை குலைவான் எனப் பார்த்தேன். வேறு எவருக்கும் விட்டுத் தர மறுத்த அந்த மோசமான வாழ்க்கையை நான் எடுத்துக்கொள்கிறேன் என்றதும் அவன் சமநிலை குலைந்து போய்விட்டான். சட்டென்று கீழிறங்கி வந்துவிட்டான்'' என்றார்.
மனசின் சமநிலை குலையும்போது நல்லது நடக்குமா என்று புத்தரின் சீடர்களின் ஒருவரான சிசந்தன் கேட்டதொரு கேள்விக்கு புத்தர் சொன்ன பதில்தான் நீங்கள் மேலே படித்த கதை.
- இன்னும் நடப்போம்...
மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT