Last Updated : 10 Nov, 2018 09:18 PM

 

Published : 10 Nov 2018 09:18 PM
Last Updated : 10 Nov 2018 09:18 PM

புத்தருடன் ஒரு காலை நடை : 15- தாவர சாவி

புத்தர் சொன்ன நல்லுரை!

ஆக்ரா நதிக்கரையோரம் குடில் அமைத்து தங்கியிருந்தபோது.... சமர்தினி என்கிற பெண்ணுக்கு புத்தர் சொன்ன நல்லுரை:

* பரிசுத்தமான ஒழுக்கத்தை வாழ்வில் கடைபிடிப்பவனின் சுயம் மற்றவர்களால் நேசிக்கப்படுகிறது. மற்றவர்களால் அடையாளம் காணப்பட்ட ஒழுக்கமானவனின் சுயமானது, அந்த மனிதனை அனைத்துவிதமான துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுகிறது. பூக்களின் நறுமணமாமது எப்போதும் காற்றை எதிர்த்துக்கொண்டு வீசுவதில்லை. ஆனால் ஒழுக்கமானவர்களின் புகழ் என்பது காற்றையும் எதிர்த்து வீசும் ஆற்றல் கொண்டது.

* நினைவில் கொள்ளுங்கள். முக்கியமான பத்து விஷயங்களை நீங்கள் எப்பாடுபட்டாவது உங்களிடம் இருந்து விலக்கி வைத்துவிட்டீர்கள் என்றால்... உங்களை எவராலும் எந்த விஷயத்திலும் வெல்லவே முடியாது.

அவை என்ன பத்து விஷயங்கள்?

உடலின் பாவங்கள் மூன்று, நாவின் பாவங்கள் நான்கு, உள்ளத்தின் பாவங்கள் மூன்று... இவைதான் அந்த பத்து விஷயங்கள்.

கொலை, களவு, பாலியல் தவறு... இந்த மூன்றும்தான் உடலின் பாவங்கள். பொய்மை, புறங்கூறல், நிந்தனை, பயனற்ற பேச்சு... இந்த நான்கும்தான் நாவின் பாவங்கள். பொறாமை, துவேஷம், உண்மையை உணராமை... இந்த மூன்றும்தான் உள்ளத்தின் பாவங்கள். இந்த பத்து விஷயங்களைத் தவிர்ப்பது எல்லோருக்கும் நல்லது.

* கொல்ல வேண்டாம், உயிரைப் பேணுங்கள். * திருட வேண்டாம், பறிக்கவும் வேண்டாம்; ஒவ்வொருவரும் தமது உழைப்பின் பயனைத் துய்ப்பதற்கு உதவி செய்யுங்கள். * தீயொழுக்கத்தை விலக்குங்கள்:கற்பு நெறியில் வாழ்க்கையை நடத்துங்கள். *பொய் பேச வேண்டாம்; தக்க முறையில் பயமில்லாமலும், அன்பு கலந்த உள்ளத்துடனும், உண்மையைப் பேசுங்கள்.

**** ***** *****

தாவர சாவி!

புத்தர் மனித நடமாட்டமே இல்லாத ஒரு வனப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்த வனப்பகுதியைக் கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார். அந்தக் கிராமத்தைக் கடந்துதான் அடுத்த ஊருக்கு அவர் சென்றாக வேண்டும். ஆனால் அந்த கிராமத்தின் முகப்பிலேயே சிறு கூட்டம் நின்றிருந்தது.

புத்தரைக் கண்டதும் அந்தக் கூட்டத்தினர் எல்லோரும் அவர் அருகில் வந்து... ''வேறு பாதை வழியாக உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள். இதோ இந்தக் கிராமத்தில் ஒரு கொடியவன் வழியில் நின்றுகொண்டு... அவனைக் கடந்து போக முயற்சிப்பவர்களை எல்லாம்... வெட்டி கூறு போட்டுவிடுவேன் என்று சொல்லிக்கொண்டு கையில் வெட்டருவாளுடன் நின்று கொண்டிருக்கிறான். அமைதியின் திருவுருவாக இருக்கிற நீங்கள்... அவன் கையால் உயிர்விட வேண்டாம். கருணைகூர்ந்து வேறு வழியால் சென்றுவிடுங்கள்...'' என்று புத்தரை வேறு பாதையில் செல்ல வலியுறுத்தினர்.

அப்படி அவர்கள் சொல்வதைக் கேட்ட புத்தர்... புன்னகை பூத்த முகத்துடன் அதே வழியில் பயணப்பட்டார். அப்போது அவரது வழியில் தனது கையில் வெட்டரிவாளுடன் கொடியவன் எதிர்பட்டான்.

அந்தக் கொடிய முகத்துடன் எதிர்பட்ட அவனைக் கண்டும் புன்னகை புரிந்தார் புத்தர். தன்னுடைய வழியில் துளியும் அச்சமின்றி வரும் புத்தரைக் கண்டு... ''உனக்கு எந்த அளவுக்கு துணிச்சல் இருந்தால்... என்னிடத்தில் துளியும் அச்சமின்றி எதிர்படுவாய். எனக்கு எதிரில் வருவதற்கு இந்த ஊரில் எவன் இருக்கிறான்? உன்னை கொல்லாமல் விட மாட்டேன்'' என்று வெட்டரிவாளைத் தூக்கினான் அந்தக் கொடியவன்.

அப்போதும் புத்தரின் முகத்தில் அதே புன்னகை. அதே அமைதி. அதே கருணை.

கொடுவாள் உயர்த்தி தன்னைக் கொல்லத் துடிக்கும் அந்தக் கொடியவனை பார்த்துச் சொன்னார் புத்தர்:

‘‘என்னைக் கொன்றால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்றால் என்னுயிரை உனது வெட்டரிவாளுக்கு உணவாக்கு. அதே நேரம் நான் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்துக் கேள்..’’ என்றார்.

‘‘என்ன.... சொல்!’’ என்று அலட்சியம் காட்டினான்.

புத்தர் தொடர்ந்தார்: அதோ அந்த தில்வார் மரத்தில் இருக்கும் இலைக் கூட்டத்தில் இருந்து பத்தே பத்து இலைகளை மட்டும் பறித்துக்கொண்டு வா...’’ என்றார்.

சட்டென்று அந்த மரத்தின் கிளையையே உடைத்து எடுத்துக்கொண்டு வந்து, புத்தரின் முன்னால் போட்டுவிட்டு... ‘‘பத்து இலைகளைத்தானே கேட்டாய். இதோ ஒரு கிளையையே உடைத்து வந்துவிட்டேன்... போதுமா?’’ என்றான் ஆணவத்தின் உச்சத்தின் நின்று.

‘‘உனது பலத்தை நான் கண்டுகொண்டேன்... சரி... இப்போது நீ உடைத்த அந்தக் கிளையை மீண்டும் முன்பு இருந்த நிலையிலேயே கொண்டு வா பார்ப்போம்!’’ என்றார் புத்தர்.

‘‘யோவ் நீ ஏதோ சூழ்ச்சி செய்கிறாய். அது எப்படி முடியும்? உடைந்த கிளையை எப்படி ஒட்ட வைக்க முடியும்?’’ என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தான் அவன்.

இப்போது புத்தர் சொன்னார்:

மரத்தில் இருந்து பறிக்கிற செயலை சிறு குழந்தை கூட செய்துவிடும். ஆனால், ஒட்ட வைக்கத்தான் எவராலும் முடியாது. பார்க்க பலசாளி போலத் தெரியும் உன்னால் ஒட்ட முடியும் என்று நினைத்தேன். ஆனால் உன்னாலும் முடியவில்லையே... நீ பலமற்றவன் என்பதை நிரூபிக்கிறது உனது முடியாமை. எவன் ஒருவன் தன்னால் முடியாது என்று உணர்கிறானோ அவன் பலசாளி இல்லை... அவன்தான் மனிதன். நீ இப்போது உன்னை மனிதன் என்று என்னிடத்தில் நிரூபித்திருக்கிறாய்...’’என்றார்.

அடுத்த நிமிடம் புத்தரின் கால்களில் விழுந்து வணங்க முயற்சித்த அந்த ‘மனித’னை காலில் விழாமல் தடுத்த புத்தர் சொன்னார்: ‘‘போ.... அதோ அந்த மரத்தை வணங்கு. அந்த மரம்தான் உனக்கு இன்றைக்கு குரு. அதுதான் உனது இருட்டு மனசைத் திறந்த தாவர சாவி!’’ என்றார்.

- இன்னும் நடப்போம்...

மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x