Published : 16 Aug 2018 03:54 PM
Last Updated : 16 Aug 2018 03:54 PM
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் 'ஷேம் யுவர்செல்ஃப்' குறும்படம் கடும் விமர்சனக் காட்சிகளை முன்வைத்து பெண்களை எப்படி மதிக்கப் போகிறோம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கலாச்சார அதிர்ச்சியை உருவாக்கும் இக்குறும்படம் எவ்வளவு முக்கிய சமூக அக்கறையைப் பேசுகிறது என்பதை 9 நிமிட முழுக் குறும்படத்தையும் பொறுமையோடு பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
படத்தின் ஆரம்பக் காட்சிகள்.... இப்படித் தொடங்குகின்றன,
விஜய் - பல்லவிஎன்ற தம்பதியினர் காரில் வருகிறார்கள். ஒரு அவென்யூவில் திரும்பி ஒரு வீட்டெதிரே கார் நிற்கிறது. முன்னும் பின்னும் பைக்குகளில் வந்த போலீஸ்கார்கள் அவர்களிடம், ''ம்மா ரொம்ப நேரமெல்லாம் வெயிட் பண்ண முடியாது. சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வாங்க'' என்கிறார்.
குறும்படத்திற்குள் ஏதோ இருக்கிறது என்பதை இந்தக் காட்சியே நமக்கு உணர்த்துகிறது. என்னது அது.. என்று யோசித்தபடியே காட்சியை நாம் தொடர்கிறோம்.
காலிங் பெல் அடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவர்களை ஆர்வத்தோடு வரவேற்கிறார்கள் வீட்டில் உள்ளவர்கள். காபி கொண்டு வரும் பெண்ணை இன்னொரு பெண் அறிமுகப்படுத்துகிறார்.
''இது பவித்ரா லிங்கேஷோட தங்கச்சி.. இவங்க அவளோட ஃபர்ஸ்ட் ஹஸ்பெண்ட் கிஷோர், இவங்க செகண்ட் ஹஸ்பெண்ட் கோபி.. போன மாசம்தான் செகண்ட்மேரேஜ் நடந்தது'' என்று அறிமுகப்படுத்துகிறார்கள்.
''அப்போ துபாயில இருக்கறது?''
அருகிலுள்ள போட்டோவைக் காட்டி, ''அது என்னோட மொதப் பொண்ணு கீர்த்தி. தோ இருக்காளே (என்று போட்டோவைக் காட்டி) இது ஃபர்ஸ்ட் ஹஸ்பெண்ட் கவி,இது செகண்ட் ஹஸ்பெண்ட் விக்னேஷ்... என்று அறிமுகப்படுத்துகிறாள்.
இவ்வளவுதான் என்று நினைத்துவிடாதீர்கள்... பேசிக்கொண்டிருக்கும் தம்பியை வந்திருக்கும் பெண்ணுக்கு இரண்டாவது கணவனாக மணமுடிக்கத்தான் பார்க்க வந்திருக்கிறார்கள்.
இப்படிப் போகும் குறும்படத்தை இனியும் பார்க்க வேண்டுமா என்றுதானே தோன்றுகிறது. தன் மகளுக்கு ஒரு கணவன் அமைந்துவிட்டான் என்பது இன்னொரு கணவனைத் தேடப் போன இடத்தில்தான் தெரிந்தது. அந்த வீட்டிலும் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு கணவர்கள் என்று. இப்படித் தொடங்கும் இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில் வருவது கலாச்சார அதிர்ச்சிக்காக அல்ல.
கனவல்ல நிஜம்
உண்மையில், இந்த வீடியோவின் ஆரம்பக் காட்சிகளைப் பார்த்ததும், என்ன குறும்படம் இது கண்றாவி, அடக்கடவுளே என்ன மோசம் இப்படிக்கூடவா எடுப்பார்கள் என்றுதான் கோபம் வரக்கூடும் யாருக்கும்.
ஆனால் இக்காட்சிகள் ஒரு கட்டத்தில் விடிந்தால் தீர்ப்பு சொல்லப்போகும் ஒரு நீதிபதி காணும் கனவு என்று முடிகிறது. ஆனால் அதன்பிறகுதான் இந்தப் படம் மெல்ல மெல்ல நகர்ந்து வேறொரு தளத்திற்கு நகர்கிறது. இது கனவுதான் வருங்காலத்தில் நிஜமாக வாய்ப்புள்ளது என்பதை உணர்த்துகிறது.
அட, இந்த மாதிரி முக்கியமான செய்திகளைத் தரும் குறும்படங்கள் நிறைய வரவேண்டுமெனவும் தோன்றுகிறது.
விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இக்குறும்படத்தை எஸ் பிரேம்ஸ் சாப்ட் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிஹைண்ட்ஹூட்ஸ் டிவி இதை யூடியூப்பில் வெளியிட்டுள்ளது.
10 நிமிடத்திற்கும் குறைவான குறும்படத்தில்தான் எத்தனை நடிகர்கள்...ஆனால் சொல்ல வந்த கதைக்கு தேவையான கதாபாத்திரங்கள் இவை. கிருஷ்ணகுமார், சௌந்தர்ய பாலா நந்தகுமார், லியாகத் அலிகான், பிரியன் தர்ஷன், பாரதி, சிபி, கோதாந்த ராம்பிரகாஷ், விஷ்வா, ஜெமினி, உஷா, சுமா கேஎன், கிஷோர், ஏழுமலை, லிங்கேஷ், கோபிநாத், சரித்திரன், தீபா என அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்காக சிறப்பாகவே பங்களித்திருக்கிறார்கள்.
ஷிவா ஜிஎன் ஒளிப்பதிவில் ஒரு நல்ல சினிமாவுக்கான அனுபவத்தைத் தர முயற்சித்துள்ளார். கோதாந்த ராம் பிரகாஷின் படத்தொகுப்பு இக்குறும்படத்தை எளிதாகப் புரிந்துகொள்ள உதவுகிறது,
இக்குறும்படத்தில் இணைந்து பணியாற்றிய மற்ற அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் பணியை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
சமுதாயத்தில் ஆண்களுக்கான மதிப்பு வாய்ந்த இடத்திற்கு மட்டுமல்ல பெண்களுக்கான மதிப்புவாய்ந்த இடத்திற்கும் ஆண்கள்தான் பொறுப்பு என்பதை கடுமையாக மெனக்கெட்டு பொட்டில் அடித்தாற்போல் சொன்ன இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT