Published : 29 Aug 2018 12:42 PM
Last Updated : 29 Aug 2018 12:42 PM
கால்வாயில் வீசப்பட்டு காப்பாற்றப்பட்ட சுதந்திரம் குழந்தைக்கு, தாய்ப்பால் கொடுத்த பெண்ணின் நெகிழ்ச்சியான ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது.
சென்னை வளசரவாக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று, பிறந்த சில மணிநேரத்தில் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை காப்பாற்றப்பட்டு, அதற்கு 'சுதந்திரம்' எனப் பெயரிடப்பட்டது.
பின்னர் போலீஸார் துணையுடன் குழந்தைக்கு, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தை மருத்துவமனையில் உள்ளது.
இந்நிலையில், எழும்பூர் மருத்துவமனை சென்று 'சுதந்திரம்' குழந்தைக்கு தாய்ப்பாலை எடுத்துக் கொடுத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் பிரியா.
ஒரு மாதக் குழந்தைக்குத் தாயான இவரின் உணர்ச்சிகரமான ஃபேஸ்புக் பதிவு இதோ:
''ஆகஸ்ட் 27 காலை 10.15 மணியளவில் சுதந்திரத்துக்குப் பால் கொடுப்பதற்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், குழந்தை இருக்கும் இடத்தை அறிந்துகொள்வது கடினமாக இருந்தது.
கடைசியாக காலை 10.40 மணியளவில், 'சுதந்திரம்' ஐசிஹெச் மருத்துவமனையில், ஏ பிரிவு முதல் மாடியில் இருப்பது தெரிந்தது. அங்கு சென்று நர்ஸ் 'பேட்ரிசியா' என்பவரிடம் சென்று சுதந்திரத்துக்கு தாய்ப்பால் கொடுக்க வந்திருப்பது பற்றிக் கூறினேன். அவர் பால் வங்கிக்கு அழைத்துச் சென்று, தாய்ப்பாலை பம்ப் மூலம் எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.
அதேபோல பாலை எடுத்து அவர்களிடம் கொடுத்தேன். சுதந்திரத்தைப் பார்க்க விரும்புவது குறித்துக் குறினேன். தலைமை மருத்துவரின் அனுமதியுடன் மட்டுமே குழந்தையைப் பார்க்க முடியும் என்று கூறினார்.
தலைமை மருத்துவரை நேரில் சந்தித்து 5 நிமிடங்கள் பேசினேன். இதைப் படிக்கும் அனைவரையும் இந்தச் செய்தியை உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன். ஏனெனில் இங்குள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் போதுமான தாய்ப்பால் இல்லை.
வருத்தமான செய்தி என்னவெனில், தாய்மார்கள் தனியார் மருத்துவமனைக்குத் தாய்ப்பாலை தானமாக அளிக்கின்றனர். அது பணத்துக்கு விற்கப்படுகிறது. அதனால் நீங்கள் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று தாய்ப்பாலை தானமாக அளிக்கலாம்.
மருத்துவமனைக்குச் செல்ல முடியாதவர்கள் தாய்ப்பாலை சுகாதாரமான முறையில் பாத்திரத்தில் சேகரித்துக் கொடுத்து அனுப்பலாம்.
புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பால் பற்றாக்குறையால் அவதிப்படுவதால் தயவுசெய்து தாய்ப்பால் தானம் செய்யுங்கள். அங்கிருக்கும் குழந்தைகளை நீங்கள் தத்தெடுக்கலாம்'' என்று தெரிவித்திருந்தார்.
உணர்ச்சிகரமான இந்தப் பதிவுக்கு இணையத்தில் ஏராளமான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT