Last Updated : 21 Jul, 2018 02:33 PM

 

Published : 21 Jul 2018 02:33 PM
Last Updated : 21 Jul 2018 02:33 PM

சக்கரவர்த்தி சிவாஜி!

கலைத்தாயின் தவப்புதல்வன் என்பார்கள் சிவாஜி கணேசனை! அந்தக் கலைத்தாயின் இன்னொரு அவதாரமே சிவாஜி கணேசன் என்பாரும் உண்டு. சினிமா உலகில், அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரம் கொண்டு விருந்தே படைத்துவிட்டார் நடிகர் திலகம்.

சத்ரபதி வீர சிவாஜியாக நாடகம் ஒன்றில் நடித்தார். அந்த வேடத்தில் நடித்த வி.சி.கணேசனைக் கண்டு வியந்து போன தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அன்றில் இருந்து கணேசன், சிவாஜி கணேசன் ஆனார். அதுவே காலம் சொல்லும் பெயரானது! இதைத்தவிர, நடிகர் திலகம் என்று சொல்வதெல்லாம் ‘சிவாஜி’க்குக் கிடைத்த போனஸ்.

வேடம் பார்ப்பதில்லை. வேடத்தில் பேதம் பார்ப்பதில்லை. நடிகர் திலகம் முதன்முதலில் போட்டது பெண் வேடம். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

1952-ம் ஆண்டு. நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

முக்கியமாக, ஏவி.மெய்யப்பச் செட்டியாரே, ‘இந்தப் பையன் வேணாமே’ என்றார். ஆனால் பெருமாள் முதலியார் அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. சிவாஜி மீது சிவாஜி வைத்த நம்பிக்கையை விட, சிவாஜி மீது பெருமாள் முதலியாருக்கு அப்படியொரு நம்பிக்கை!

சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமை... சினிமா டிக்‌ஷனரி... இந்த மூன்றுக்குமாக இதுவரை சிவாஜி கணேசன் பெயரைத்தான் காட்டிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் இன்னமும் இவரைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சின்சியாரிட்டி இருக்குமிடத்தில் ஆத்மார்த்தம் வந்துவிடும். ஒழுங்கு இருக்கும் போது, மிகுந்த லயிப்புத்தன்மையும் வந்துவிடும். நேரந்தவறாமையுடன் இருந்துவிட்டால், காலம் வாரியணைத்துக்கொள்ளும். இவற்றுக்கு உதாரணம்... சிவாஜி!

ஏழரை மணிக்கு ஷூட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷூட்டிங்குக்குச் சென்றது இல்லை!

கருணாநிதியை 'மூனா கானா' என்றுதான் அழைப்பார். எம்.ஜி.ஆரை 'அண்ணன்'என்றுதான் கூப்பிடுவார். நெருங்கியவர்கள் அழைப்பது போல, ஜெயலலிதாவை 'அம்மு' என்று கூப்பிடுவார். இப்படித்தான், ஒவ்வொருவருக்கும் அழகாய் பெயர் வைத்துக் கூப்பிடுவது அவர் ஸ்டைல். அப்போது ஸ்டில் போட்டோகிராபராக இருந்த திருச்சி அருணாசலத்தை ஆனாரூனா என்று அழைத்தார். அப்படியே எல்லோரும் கூப்பிடத் தொடங்கினார்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் முதலான சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி.

தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி.

இன்னொரு பக்கம் பக்தியிலும் முழு ஈடுபாடு காட்டிவந்தார்.

திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!

வீட்டு வாசலில் பிள்ளையார் கோயில் கட்டியிருக்கிறார். அந்தப் பிள்ளையாருக்கு தினமும் இன்றுவரை பூஜைகள் செம்மையாக நடக்கின்றன.

நடிகை மனோரமாவின் வீடு, சிவாஜி வீட்டுக்கு அருகில்தான் இருக்கிறது. மனோரமா வீட்டில் இருந்து எந்தப் பக்கம் சென்றாலும் முதலில் சிவாஜி வீட்டு வாசலில் உள்ள பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் செல்வார். அந்தப் பிள்ளையார் மீதும் சிவாஜி கணேசன் மீதும் அப்படியொரு பிணைப்பு; பந்தம்.

அதற்கொரு முக்கியமான காரணமும் உண்டு. மனோரமாவின் அம்மா இறந்தபோது, உடனிருந்து ஆறுதல் சொல்லி, எல்லா ஏற்பாடுகளையும் செய்ததுடன், மனோரமாவின் சகோதர ஸ்தானத்தில் நின்று, ஈமக்காரியங்கள் உட்பட அனைத்தையும் செய்தார் சிவாஜி.

ஆச்சி மனோரமாவுக்கும் சிவாஜிக்குமான அண்ணன் தங்கை பாசம் போலவே, லதாமங்கேஷ்கருக்கும் சிவாஜிக்கும் எந்த ஜென்மத்து பந்தமோ... சிவாஜியின் பெயரைச் சொன்னாலே, அண்ணா என உருகிவிடுவார் லதாமங்கேஷ்கர் என்கிறார்கள்.

சிவாஜி இறந்தபோது, ஓடோடி வந்த லதாமங்கேஷ்கர், ’சென்னைக்கு வந்தா எங்கியும் தங்கக்கூடாது. இங்கே உன் அண்ணன் வீடு இருக்குன்னு பிரியமா சொல்லுவீங்களேண்ணா’ என்று கதறியழுதார்.

தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜி கணேசனுக்குத்தான் என்பார்கள். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி'

சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது! இன்றைக்கும் அவரின் வீட்டில் பத்திரமாக இருக்கிறது.

சிவாஜியின் அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துக் கொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!

ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள். அந்தநாளில், சூரக்கோட்டையே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. எல்லோரிடமும் சிகரெட் பிடித்தபடியே பேசுகிற சிவாஜி, இரண்டுபேருக்கு முன்னே சிகரெட் பிடிக்கமாட்டார். அவர்கள்... 'பராசக்தி' படத்தின் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு .

படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார். தேவையில்லாமல், இயக்குநரின் வேலையிலோ, நடிகரின் தனித்துவத்திலோ மூக்கை நுழைக்கமாட்டார்.

காலம், இன்றைக்கும் தன் நினைவுப்பெட்டகத்தில் சிவாஜியைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. அப்பேர்ப்பட்ட பெருமைக்கு உரிய சிவாஜிக்கு, கடிகாரங்கள் என்றால் அப்படியொரு ஆசை. விதவிதமான கடிகாரங்களை எங்கு போனாலும் வாங்கிவிடுவார். ஸ்டைலாக அணிந்துகொள்வார். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்!

அம்மாவின் மீது அளப்பரிய அன்பு. வீட்டின் பெயர் அன்னை இல்லம். தன் தாய் ராஜாமணி அம்மாளுக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறைவேறவே இல்லை! நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்!

பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னார். உடனே பதறிப் போய் மறுத்த சிவாஜி, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக! தவிர, பாலையா அண்ணன், எம்.ஆர்.ராதா அண்ணன் என்று யாரிடம் பேசினாலும் மரியாதையுடன் சொல்வது சிவாஜியின் வழக்கம்.

நன்றி, மரியாதை, தன்னடக்கம்... இவற்றில் ஒருபோதும் நடித்ததே இல்லை நடிகர் திலகம்!

சிவாஜியின் நினைவு நாள் இன்று (21.7.18). எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் சிவாஜி கணேசனை, இப்போதும் நினைப்போம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x