Published : 28 Aug 2014 09:27 AM
Last Updated : 28 Aug 2014 09:27 AM
கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது ‘செவிநுகர் கனிகள்’ என்றார் கம்பர். அந்த அளவு மொழிக்கு மிகவும் முக்கியமானது காது என்றும் செவி என்றும் அழைக்கப்படும் உறுப்பு.
எழுத்துக்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு, செவி வழியாகத்தான் மொழியும் அறிவும் கடத்தப்பட்டுவந்தன. இலக்கியங்களையும் பிற துறை நூல்களையும் குரு சொல்லக் கேட்டு, அதை மனதில் இருத்திக் கொள்வதுதான் முற்கால மரபு. யாப்பு வடிவங்களுக்கும் செவிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
மரபுக் கவிதை மனப்பாடம் செய்வதற்கு ஏற்ற விதத்தில் எதுகை, மோனை, சந்தம், தொடை போன்றவற்றைக் கொண்டிருந்தது. அச்சுக் கலையின் பரவலையும் புதுக்கவிதையின் பிறப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து, நவீன காலத்தில் கவிதை செவியிலிருந்து கண்ணுக்குப் புலம்பெயர்ந்துவிட்டதை நாம் உணரலாம்.
காது தொடர்பான சொற்கள், தொடர்களில் சில:
ஊசிக்காது: (பார்த்துப் பேசு, உன் கணவருக்கு ஊசிக்காது.)
காதில் ஏறு: ( நான் எவ்வளவு சொன்னாலும் உனக்குக் காதில் ஏறாதே!)
காதில் வாங்கு: (கழுதை மாதிரி கத்துகிறேனே, காதில் வாங்குகிறாளா பார்!)
காதில் விழு: (ஏழைகள் குரல் அவர்கள் காதில் விழாது.)
காதுபட: (என் காதுபடவே என்னைப் பற்றி அசிங்கமாகப் பேசுகிறார்கள்.)
காதும் காதும் வைத்தாற்போல: (தம்பி, இந்த வேலையைக் காதும்காதும் வைத்தாற்போல முடிக்க வேண்டும்.)
காதை அடை: (பசி, காதை அடைக்கிறது.)
காதைக் கடி: (நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது என் மனைவி ‘அவர் உங்களை ஏமாற்றப் பார்க்கிறார்’ என்று காதைக் கடித்தாள்.)
காதோடு காதாக: (காதோடு காதாக ஒரு விஷயத்தை அவளிடம் சொன்னேன்.)
இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடு: ( எவ்வளவு அறிவுரை சொன்னாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவான்.)
காதொலிக்கருவி: கேட்புத் திறன் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் சாதனம்.
செவிசாய்: (மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்த்தது.)
செவிப்பறை: செவியில் உள்ள சவ்வு போன்ற உறுப்பு.
செவிவழி: (இந்தக் கோயிலைப் பற்றி நிறைய செவிவழிச் செய்திகள் உலவுகின்றன.)
காதில் அணியும் அணிகலன்கள் குறித்து அடுத்த வாரம் பதிவு இடம்பெறும். வாசகர்கள் தங்கள் வட்டாரங்களில் உள்ள காதணிகள் குறித்து எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
சொல்தேடல்:
‘ஃப்ரீலான்ஸ்’ என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லுக்கு வாசகர்கள் ஏராளமான பரிந்துரைகளை அனுப்பி வழக்கம்போல எங்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டனர்.
வாசகர் பரிந்துரைகள்: ஃப்ரீலான்ஸ் - சார்பிலா (சத்தியமூர்த்தி) ஃப்ரீலான்ஸர்: புறநிலை வினைஞர் (புலவர் வே. தியாகராஜன்), சுயேச்சைத் துறைஞர் (மணிவேலுப்பிள்ளை), சுதந்திரப் பணியாளர் (எஸ். நாகராஜன், விஜயலட்சுமி), கட்டறு பணியர் (வில்லவன் கோதை) ஃப்ரீலான்ஸிங்: தன்பணி, தன்போக்குப் பணி, சுயபணி, சாராப் பணி, சார்பிலாப் பணி, பணிவிற்பனை, தன்விருப்பப் பணி, கட்டிலாப் பணி (கோ. மன்றவாணன்), சுயேச்சை வேலை (மணிவேலுப்பிள்ளை) இவற்றில் பெரும்பாலான சொற்கள் நல்ல பரிந்துரைகளாகவே தோன்றுகின்றன.
‘ஃப்ரீலான்ஸிங்’ என்ற சொல்லுக்குப் பணி விற்பனை, பணிச்சேவை, சுயேச்சைப் பணி ஆகிய சொற்களும், ‘ஃப்ரீலான்ஸர்’ என்ற சொல்லுக்கு சுயேச்சைப் பணியாளர், சாராப் பணியாளர், பணிச்சேவையாளர் போன்ற சொற்களை நாம் இறுதிசெய்துகொள்ளலாம்.
இந்த வாரக் கேள்வி:
வீடுகளில் அலங்காரத்துக்காகத் தொங்க விடப்படும் பொருள்தான் ‘விண்ட் சைம்ஸ்’ (wind chimes). காற்றில் அசைந்து இனிய ஒலியை ஏற்படுத்தும் இந்தப் பொருளுக்குத் தமிழில் பெயர் என்ன?
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT