Published : 12 Aug 2014 09:45 AM
Last Updated : 12 Aug 2014 09:45 AM
இரண்டாம் உலகப் போரில் கடுமையான தோல்வியைச் சந்தித்திருந்த ஜெர்மனி, 1949-ல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளின் ஆதரவுபெற்ற பகுதி மேற்கு ஜெர்மனி என்றும் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுபெற்ற பகுதி கிழக்கு ஜெர்மனி என்றும் அழைக்கப்பட்டன.
அதேபோல, ஜெர்மனியின் தலைநகரான பெர்லினும் கிழக்கு, மேற்கு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. நிலப் பகுதியை எத்தனை துண்டுகளாகப் பிரித்தாலும் ரத்த உறவுகளைப் பிரிக்க முடியுமா என்ன? இருதரப்பிலும் இருந்த மக்கள் தங்கள் உறவினர்களைப் பார்க்கவும் பிற காரணங்களுக்காகவும் எல்லைகளைக் கடந்து செல்லத் தொடங்கினர்.
கோபமுற்ற கிழக்கு ஜெர்மனி, 1961-ல் இதே நாள் நள்ளிரவில் கிழக்கு பெர்லினையும் மேற்கு பெர்லினையும் பிரிக்கும் வகையில், எல்லைச் சுவர் எழுப்பும் பணியைத் தொடங்கியது. முதலில் கம்பி வேலிகள், தடுப்புப் பலகைகள் என்று இருந்த அந்த எல்லையை, சில நாட்களிலேயே முழுமையான எல்லைச் சுவராக எழுப்பிவிட்டது கிழக்கு ஜெர்மனி. ஆத்திரமடைந்த மேற்கு ஜெர்மனி, இந்த விஷயத்தில் தலையிடுமாறு, தனது ஆதரவு நாடான அமெரிக்காவிடம் கோரியது. எனினும், ‘சண்டையிட்டுச் சாவதைவிட, தடுப்புச் சுவர் அத்தனை மோசமானது அல்ல’ என்று அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜான் எஃப். கென்னடி கருதினார். அதே சமயம், மேற்கு ஜெர்மனியைச் சமாதானப்படுத்த, 1963-ல் பெர்லின் சுவரைப் பார்வையிட்டார்.
வெவ்வேறு சமயங்களில் பெர்லின் சுவரைத் தாண்டிச் செல்ல முற்பட்ட சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 1989-ல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ந்த பின்னர், பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு, கிழக்கும் மேற்கும் இணைந்து ஒரே ஜெர்மனியானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT