Published : 27 Mar 2025 05:53 AM
Last Updated : 27 Mar 2025 05:53 AM
திருச்சி: இயல், இசை, நாடகம் இவை மூன்றும் சேர்ந்ததுதான் முத்தமிழ். இதில், நாடகக் கலை என்பது தொலைக்காட்சிகளின் வருகைக்கு முன்பு மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. 1980-களுக்கு முன்பு ஒரு ஊரில் நாடகம் என்றால், மாட்டு வண்டி கட்டி மக்கள் சாரை சாரையாக சென்று இரவு முழுவதும் நாடகத்தை ரசித்துவிட்டு, திரும்புவார்கள்.
தற்போது, நாடகங்களுக்கு மவுசு குறைந்தாலும், பல்வேறு கிராமக் கோயில்களில் இன்றளவும் புராண நாடகங்களை நடத்தி வருகின்றனர். இதற்காகவே, ஒவ்வொரு ஊர்களிலும் நாடக மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. அதில், வள்ளி திருமணம், அரிச்சந்திரா, பவளக்கொடி, வீரபாண்டிய கட்டபொம்மன், பொன்னர் சங்கர், பாண்டி மீனா உள்ளிட்ட நாடகங்கள் இடம் பெறும்.
நாடகக் கலைகள் நலிந்து வருவதாகவும், நாடகத்தில் வள்ளி, தெய்வானை, பார்வதி போன்ற பாத்திரங்களில் நடிக்க முன்புபோல பெண்கள் முன் வருவதில்லை என்று நாடகக் கம்பெனியினர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மணப்பாறை பகுதியைச் சேர்ந்த நந்தினி(22) என்ற இளம்பெண் நாடகக் கலையில் ரசிக்க வைக்கிறார். சாதாரண கிராமப்புற மைக்குகளில் தன்னுடைய கணீர் குரலாலும், அழகு நடை தமிழாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். குறிப்பாக, வள்ளி திருமணம் புராண நாடகத்தில் வள்ளியாக வலம்வந்து,ஆடல் பாடலுடன் அசர வைக்கிறார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அமையபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமரசங்கன்- அன்னக்கிளி தம்பதியின் மகளான இவர், 16 வயது முதல் நாடகங்களில் நடித்து வருகிறார். இதுவரை சுமார் 1,000 நாடகங்களில் நடித்துள்ளார். இதுகுறித்து நந்தினி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளேன். திருச்சி சேவா சங்கம் பள்ளியில் படிக்கும்போது, முதன்முதலில் மேடையில் பாடல் பாடினேன். மேலும், தமிழ் மொழி மீது மிகுந்த பற்றும், நல்ல குரல் வளமும் இருப்பதாக ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி பரிசுகளை வழங்கினர்.
16 வயதில் எங்களது கிராமத்தில் உள்ள கோயில் கலையரங்கில் நடைபெற்ற வள்ளி திருமணம் நாடகத்தில் வள்ளியாக நடித்து எனது முதல் அரங்கேற்றத்தை செய்தேன். அப்போது எனது பெற்றோர் மற்றும் கிராமத்தினர் மிகுந்த உற்சாகம் கொடுத்தனர். அதன் பிறகு எனது குருநாதர் பெருமாள் ராஜ் அளித்த ஊக்கத்தால், தொடர்ந்து பல்வேறு ஊர்களுக்குச் சென்று வள்ளி திருமணம் நாடகத்தில் வள்ளியாக நடித்து வருகிறேன். திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், கரூர், சென்னை என பல்வேறு மாவட்டங்களில் 7 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1,000 நாடகங்களில் நடித்துள்ளேன். தற்போது திருச்சி கலைக் காவிரி நுண் கலை கல்லூரியில் பரதக் கலை பயின்று வருகிறேன்.
கடந்த காலங்களில் புராண கதைகளை மக்கள் வெகுவாக விரும்பி இரவு முழுவதும் பார்த்து ரசிப்பார்கள். ஆனால், தற்போது பல நாடகங்களில் ஆபாசமான பேச்சுகள் இருந்தாலும், நாங்கள் அதுபோல இல்லாமல் நாகரீகமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி பயணிக்கிறோம். பெண் என்பதால் சில கிராமங்களில் சிலரால் பல தொந்தரவுகள் ஏற்பட்டாலும், அதையும் கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. கிராமங்களில் நாடகம் முடிந்த பின், வள்ளியாக நடிக்கும் என்னை பெண்கள் பலர் மகள் போல பாவித்து பாராட்டுவது, எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும்.
தற்போது இந்த நாடகக் கலைத் துறையில் பெண்கள் மிகவும் குறைந்து விட்டனர். இந்தக் கலையை காப்பாற்ற பெண்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இன்று உலக நாடக கலை தினம். நாடகக்கலை பரிணாம வளர்ச்சி பெற்று சினிமா உள்ளிட்ட அடுத்தக்கட்டத்துக்கு சென்றாலும், கிராமத்தில் நடக்கும் நாடகத்துக்கு தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் இருந்து வருகின்றனர். இளம் வயதிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் களம் கண்ட இந்த நந்தினி போல, இன்னும் பல நந்தினிகள் உருவாக வேண்டும் என்பதே இந்தக் கலையை வளர்ப்பவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது | இன்று உலக நாடகக் கலை தினம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment