Last Updated : 11 Dec, 2024 05:22 PM

 

Published : 11 Dec 2024 05:22 PM
Last Updated : 11 Dec 2024 05:22 PM

அது ஒரு ‘டிலைட்’ காலம்... - கொங்கு மண்டலமும் தமிழ் சினிமாவும்!

சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலைகளின் மையமாக மட்டும் கொங்கு மண்டலம் விளங்கவில்லை. உழைப்போடு கனவையும் சேர்த்துப் பின்னிப் பின்னி மக்களை மகிழ்வித்த மண்ணும் கொங்கு மண்தான்.

இந்த உலகத்துக்கு திரைப்படங்கள் அறிமுகமான பத்தாண்டுகளில் அதை கோவைக்குக் கொண்டுவந்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். தொடர் வண்டித் துறையில் அலுவலக ஊழியராக இருந்த அவர் திரைப்படங்கள் மீதான ஆர்வம் காரணமாக 1905-ஆம் ஆண்டு திரைப்படம் ஒளிபரப்பும் கருவியை விலைக்கு வாங்கி, அதன்மூலம் பிரெஞ்சுப் படங்களை தெருத்தெருவாக கொண்டுபோய்த் திரையிட்டார். அவற்றின் தொடர்ச்சியாக 1914-ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் நிறுவிய ‘வெரைட்டி ஹால்’ சினிமாதான் தமிழகத்தின் முதல் திரையரங்கம். பின்னாட்களில் ‘டிலைட்’ திரையரங்கம் என்கிற பெயர் பெற்றது. 2019-ம் ஆண்டு இந்தத் திரையரங்கு புதுப்பிக்கப்பட்டது.

இருப்பினும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக திரையரங்குக்கு ரசிகர்கள் வருவது குறைந்ததால், 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின்னர் இங்கு படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு பிப்ரவரியில் கோவை ‘டிலைட்’ திரையரங்கு இடிக்கப்பட்டது. அது மூத்த சினிமா ஆர்வலர்களிடம் சோகத்தையும் ஏற்படுத்தியது தனிக்கதை.

தென்னிந்தியாவில் வேறெங்கும் படப்பிடிப்புத் தளங்களும் திரையரங்குகளும் இல்லாத காலத்திலேயே கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோஸ், பக்‌ஷிராஜா ஸ்டுடியோஸ், கோயம்புத்தூர் டாக்கிஸ், பரமேஸ்வரி டாக்கிஸ் மற்றும் ஜூபிடர் பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தன. திலிப்குமார், மீனாகுமாரி நடித்த ஆஸாத், ஜகதலபிரதாபன், மலைக்கள்ளன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இங்குதான் உருவாகின. 1930-களில் சந்திராபிரபா பிக்ச்ர்ஸ் என்கிற பட நிறுவனம் தொடங்கப்பட்டு பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

கோவையைத் தொடர்ந்து 1935-ஆம் ஆண்டு சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. 1960 வரை சுமார் நூறு படங்களை இந்நிறுவனத்தின் சார்பில் எடுத்துவிட்டார்கள். முதல் வண்ணப்படமான அலிபாபாவும் நாற்பதுதிருடர்களும், முதன்முதலாக பியு.சின்னப்பா இரட்டை வேடங்களில் நடித்த உத்தமபுத்திரன், 1938-இல் உருவான முதல் மலையாளப் படம் ஆகியன உட்பட பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய நிறுவனம்தான் மாடர்ன் தியேட்டர்ஸ்.

இதன் உரிமையாளர் திருசெங்கோடு ராமலிங்கம் சுந்தரம் என்கிற டி.அர்.சுந்தரம் லண்டனில் படித்து அங்கேயே கிளாடிஸ் என்பரை மணந்தவர். நெசவாளர்கும்பத்தில் பிறந்து துணிகள் பற்றிய உயர் படிப்புப் படித்திருந்தும் திரைத் துறையின் மூலம் கொண்டிருந்த ஆர்வத்தால் திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். அவற்றின் மூலம் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. அந்நிறுவனம் மூடப்பட்ட பின்னரும் இன்றளவும் பெயர் சொன்னால் தெரிகிற அளவு புகழ் பெற்றுள்ளது.

தமிழ்த் திரையுலக நூற்றாண்டு விழாவையொட்டி மறைந்த முதல்வர் கருணாநிதி எழுதிய கட்டுரையில், “ஈரோடு குடியரசு அலுவகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கோவையிலிருந்து திரைப்படத்துக்கு வசனம் எழுதவேண்டும் என்று அழைப்பு வந்தது. அழைத்தவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி. அப்போது தந்தை பெரியாரின் அனுமதியோடு கோவை சென்றேன். ஜூபிடர் நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்பட்ட ராஜகுமாரி படத்துக்கு வசனம் எழுதினேன். அந்தப் படத்தில் முதன்முதலாக புரட்சி நடிகர் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். அதன்மூலம் தமிழ்த் திரையுலகை மட்டுமல்ல தமிழகத்தையும் ஆண்ட இருபெரும் தலைவர்களின் திரைப்பயணம் கோவையில் இருந்துதான் தொடங்கியிருக்கிறது என்பதை உணரலாம்.

பக்திப் படங்களுக்குப் பெயர் பெற்ற ஏபி.நாகராஜன், கேபி.சுந்தராம்பாள் ஆகியோரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். பக்தி மணம் கமழும் பட நிறுவனமாகத் திகழ்ந்த தேவர் பிலிம்ஸின் பிறப்பிடமும் கோவைதான்.

சென்னைக்கு திரைப்படம் இடம்பெயர்ந்த பின்னர் கோவையிலிருந்து பல வித்தகர்கள் திரைத் துறைக்கு வந்து பங்களித்து அதன் பெருமையை உயர்த்தியிருக்கிறார்கள். திரைக்கதை மன்னராக அறியப்பட்டிருக்கும் கே.பாக்யராஜ், தாம் இயக்கிய பெரும்பாலான படங்களை வெற்றிப் படங்களாகவே கொடுத்திருக்கும் இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ஆர்வி.உதயகுமார், சுந்தர்சி ஆகியோர் கோவை மண்ணைச் சேர்ந்தவர்கள்தாம்.

ஈரோடு முருகேஷ், ஈரோடு சௌந்தர் ஆகியோரின் பெயர்களிலிருந்தே அவர்களின் பூர்விகத்தை அறியலாம். இவர்கள் இருவரும் தலா இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார்கள். தலைவாழை இலையில் பரிமாறப்படும் உணவை உண்டு முடித்தபின், அந்த இலையை, தம் பக்கம் பார்க்கிற மாதிரி மடித்துவிட்டால் அது உறவை வளர்ப்பதென்றும் எதிர்ப்பக்கமாக மடித்தால் உறவை வெறுப்பதாகவும் பொருள் என்கிற கொங்குமக்களின் கலாச்சார அடையாளத்தை உலகத்துக்குத் தன் வசனத்தின் மூலம் வெளிப்படுத்தியவர் ஈரோடு சொளந்தர்.

ஊமைவிழிகள் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு ஒரு புது ரத்தம் பாய்ச்சியதோடு, அதுவரை கவனிப்பாரற்று இருந்த திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு திரையுலகில் மட்டுமின்றி வெகுமக்கள் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றுத் தந்தவர்தான் ஆபாவாணன். இவர்தான் தமிழ்த் திரையுலகில் முதன்முதலில் டிடிஎச் ஒலியையும் அறிமுகப்படுத்தினார். இத்தகைய பெருமைகளுக்குச் சொந்தக்காரரான இவர் சேலம் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர்.

பல திறமையான நடிகர்களைத் திரையுலகுக்குக் கொடுத்ததிலும் கோவைக்கு பெரும் இடம் உண்டு. சிவகுமார், சத்யராஜ், ரகுவரன், நிழல்கள் ரவி, நந்தா போன்ற ஆல்ரவுண்டர்களும் கவுண்டமணி, கோவை சரளா அனுமோகன் போன்ற நகைச்சுவை நடிகர்களும் இங்கிருந்துதான் வந்தனர்.

மரியாதைக்குரிய சொல்லாடல்கள் நிறைந்தது கொங்கு மண்டலம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே கொங்கு மண்டலம் எவ்வளவு நக்கல் நய்யாண்டிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதை கவுண்டமணி மற்றும் கோவை சரளா மூலம் தமிழகம் மட்டுமின்றி உலகம் அறிந்திருக்கிறது.

அதேபோல், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகிய இருவரும் கொங்கு மணடலத்துக்காரர்கள்தாம். இவர்களில் சிவா, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கோபிச்செட்டிபாளையத்தில் புகைப்பட நிலையம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தவர். ஒரு காலத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப் படப்பிடிப்புகள் நடக்கின்ற இடமாக கோபிச்செட்டிபாளையம் இருந்தது.

அங்கு வருகிற திரைத்துறையினருடன் எற்பட்ட நட்பின் காரணமாக சென்னை வந்து படிப்படியாக முன்னேறி இன்று இந்த நிலையில் இருக்கிறார். இப்போது அந்த இடத்தை கோபி இழந்துவிட்டது. கோபிக்கு மாற்றாக இப்போது அதிகப் படப்பிடிப்புகள் நடக்கின்ற ஊரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்ததுதான். அந்த ஊர் பொள்ளாச்சி.

அறிஞர் அண்ணாவால் கோவைத் தம்பி என்றழைக்கப்பட்டவர் தமிழ்த் திரையுலகிலும் புகழ்பெற்ற தயாரிப்பாளராக இருந்தார். அவர் தயாரித்த எல்லாப் படங்களுமே வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. மாதம்பட்டி சிவக்குமார், திருப்பூர் பாலு, திருப்பூர்மணி உட்பட இன்னும் பல தயாரிப்பார்கள் கொங்கு மண்டலத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகம் இருக்கும் வரை மறக்க முடியாத படமாக விளங்கும் சில படங்களில் முக்கியமான ஒன்று ‘அவள் அப்படித்தான்’. படிப்பறிவு விழுக்காடு மிகவும் குறைவாக இருந்த 1978-லேயே அப்படி ஒரு படத்தை இயக்கும் துணிச்சல் கொண்டவர் அந்தப் படத்தை இயக்கிய ருத்ரய்யா. ஆறுமுகம் எனும் தன்னுடைய இயற்பெயரை திரைப்படத்துக்காக ருத்ரய்யா என்று மாற்றிக்கொண்டவர். இவரும் அந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நல்லுசாமி ஆகியோரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

பொறியியல் படித்து விட்டு இலக்கிய ஆர்வம் காரணமாக பாடலாசிரியராகவும் சமூகச்சிக்கல்களில் முன்னின்று போராடக் கூடியவராகவும் விளங்கும் தாமரையும், உதவி இயக்குநர், பாடலாசிரியர், கதாநாயகன் என்று படிப்படியாக உயர்ந்திருக்கும் பா.விஜய் ஆகியோரும் கோவையைச் சேர்ந்தவர்கள்.

திரைக் கலைஞர்கள் மட்டுமின்றி இன்றைக்கு திரையுலக வியாபரத்திலும் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக விலைக்குப் படங்கள் விற்கிற பகுதியாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ஊர்கள் திகழ்கின்றன. - அ.தமிழன்பன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x