Last Updated : 11 Dec, 2024 09:15 AM

1  

Published : 11 Dec 2024 09:15 AM
Last Updated : 11 Dec 2024 09:15 AM

பாரதியின் பெருங்குணங்கள் | மகாகவி பாரதியார் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

உள் படம்: ஓய்வு பெற்ற காவல் துறை தலைவர் எம்.எஸ்.முத்துசாமி.

| மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் இன்று (டிச.11) கொண்டாடப்படுகிறது. பாரதியின் பெருங்குணங்களை அவரது வாழ்க்கைச் சம்பவங்களையே உதாரணமாகக் காட்டி, தனது கட்டுரையில் இங்கே பட்டியலிடுகிறார் ஓய்வு பெற்ற காவல் துறை தலைவர் எம்.எஸ்.முத்துசாமி... |

> பாரதியார் தனது ஐந்தாவது வயதில் தாயை இழந்தார். எனவே, தான் சாகும் வரை பெண்களை பெரிதும் மதித்தார். நேற்று பிறந்த பெண் குழந்தையை கூட ‘அம்மா’ என்று கூப்பிட்டு அழைப்பார்.

> பாரதியார் தனது பதினோராவது வயதிலேயே எட்டயபுர மன்னரால் ‘பாரதி’ என்னும் பட்டம் பெற்றார். நூறு கிழவர்களின் அறிவும், அனுபவமும் பதினோறு வயதிலேயே பாரதிக்கு இருந்தது. எட்டயபுரம் சமஸ்தானத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்ட நூல்களில் காணப்படும் குறைபாடுகளை கூசாமல் சொல்லிவிடுவார் பாரதி. மிக இளம் வயதிலேயே, இலக்கணங்களை உடைத்தெறிந்து விட்டு தமிழ் பாடல்கள் பாடியவர் பாரதி.

> பாரதி தனது பதினாறு வயது முதல் இருபது வயது வரை, காசியில் உள்ள தனது அத்தை வீட்டில் வாழ்ந்தார். அங்குள்ள பள்ளியில் படித்தார். பள்ளிக்கு காலையில் போனால் மாலையில் போகமாட்டார். ஒரு நாளும் புத்தகத்தை கையில் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடம் போனதேயில்லை. சட்டைப்பையில் சில கடிதங்களும், ஒரு பென்சிலும் வைத்திருப்பார். வாத்தியாரைப் பற்றி பாடல்கள் எழுதி, பக்கத்து பையன்களிடம் நீட்டுவார். பெரும்பாலும் கிண்டல்தான்.

பள்ளியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கல்லூரிப் படிப்புக்கு முன் படிக்க வேண்டி எப்.ஏ (F.A) வகுப்பில் சேர்ந்தார். அந்தப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். காசியில் இருந்த நான்கு ஆண்டுகளில் இந்தி மொழியில் நன்றாகத் தேறிவிட்டார்.

> சூரத்தில்,1907, டிசம்பர் 26-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ள, ஒரு நாள் முன்னதாகவே சூரத் சென்றடைந்தார் பாரதி. மாநாடு தொடங்கும் முன்பே, திலகரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று பாரதிக்கு ஆசை. 1907, டிசம்பர் 25-ம் தேதி சூரத்தில் கனமழை. மாநாட்டுக்கு வரும் பாதைகள் சேறும், சகதியுமாய் இருந்தன. பாதைகளை செப்பனிடும் பணியை திலகர் செய்கிறார் எனத் தெரிந்து, மழையில் நனைந்து கொண்டே சென்றார் பாரதியார்.

திலகரை அதற்கு முன் பார்த்ததில்லை. நூறு பேர்கள் வேலை செய்த இடத்தில் யார் திலகர் எனத்தெரியவில்லை. ஒருவர் மட்டும் குடையை பிடித்துக்கொண்டு எல்லோரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார். அவர் பிடித்திருந்த குடையை தன் கைகளால் லேசாக தூக்கி விட்டு, குடை பிடித்திருந்தவரின் கண்களைப் பார்த்தார், சேறுஞ்சகதியும் கிடந்த அதே இடத்தில் உடனே அவரின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். சுதந்திரப் போராட்ட வீரர்களை பாரதியார் எந்த அளவு மதித்தார் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

> பேரறிஞர் அண்ணாவால் ‘அக்கரகாரத்து அதிசய மனிதர்’ என பாராட்டப்பட்ட ‘வ.ரா’ என அழைக்கப்பட்ட வ.ராமசாமி ஐயங்கார், “பாரதியார் வாழ்க்கை வரலாறு” புத்தகம் எழுதியுள்ளார். முதன் முதலில் பாரதியாரைப் பார்த்த வ.ரா, பாரதியின் காலில் விழுந்தார். உடனே சற்றும் தாமதிக்காமல் பாரதியார் அவரை தூக்கி நிறுத்தி, நமஸ்காரம் வேண்டாம், யார் நீ என்று கேட்டார். வ.ரா ஆங்கிலத்தில் பதில் சொன்னார். பாரதியார் உடனே வேலைக்காரன் பாலுவை கூப்பிட்டு, பாலு இவர் ஏதோ ஆங்கிலத்தில் பேசுகிறார், நீயே கேளு என்று சொல்லிவிட்டு போய்விட்டார். வ.ரா மன்னிப்பு கேட்டார். ஒரு தமிழன், மற்றொரு தமிழனிடத்தில் ஏன் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என வ.ரா வை பாரதியார் கேட்டார்.

வ.ரா-வை அரவிந்தரிடம் அறிமுகம் செய்தார் பாரதி. அப்போது வ.ரா-வை காட்டி ‘இவன் தமிழ்நாட்டுத் தேசபக்தன்’ என்று சொன்னார். அரவிந்தரின் அருகில் அமர்ந்திருந்த ஒரு வங்காளி, இவன் தமிழ்நாட்டு தேசபக்தன் என்றால் சர்க்காருக்கு மனுப்பள்ளிக்கொள்ள தெரியுமல்லவா எனக் கேலி செய்து சிரித்தார். உடனே பாரதியாருக்கு கடுங்கோபம் வந்தது. ‘அடிமைகளிலே வங்காளி உயர்த்தி, தமிழன் தாழ்த்தியா?’ என்று படீரென்று கேட்டார். தமிழர்களை, பாரதியார் ஒருபோதும் விட்டுகொடுத்ததில்லை.

> பாண்டிச்சேரியில் 1908 முதல் 1918 வரை பாரதியார் வாழ்ந்தார். பாண்டிச்சேரி, ஈசுவர தர்மராஜா கோயில் தெருவில், விளக்கெண்ணெய்ச் செட்டியார் என்பவர் வீட்டில் பாரதியார் குடியிருந்தார். செட்டியார், பாரதியின் வீட்டுக்கு வந்தால் வாடகை கேட்கமாட்டார். பாரதி புரிந்து கொண்டு, அரசு கஜானாவுக்கு ஒரு செக் தருகிறேன். பத்தாண்டுகளில் சுயராஜ்யம் வந்துவிடும், செக்கை மாற்றிக்கொள்ளும் என்பார் பாரதி. பத்தாண்டுகளில் சுதந்திரம் கிடைத்து விடும் என பாரதி நம்பினார்.

> பாரதியார் பேசத் தொடங்கினால் பேசிக்கொண்டேயிருப்பார். பேச்சை நிறுத்தினால் பாட ஆரம்பித்துவிடுவார். நடக்கும் போது கூட, பாடிக்கொண்டே நடப்பார். யார் பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதைப்பற்றி கவலைப்படவே மாட்டார். பாரதியைப் பார்த்து, யார் கும்பிட்டாலும், உடனே தனது இரண்டு கைகளையும் நன்றாகப்பொருத்தி, முகத்துக்கு முன் வைத்து, நன்றாக கும்பிடுவார். நடந்து கொண்டே கும்பிடமாட்டார்.

பாரதியாரை நேரில் பார்க்க நேர்ந்தால் மக்கள் அனைவரும் அவரிடம் மரியாதை காட்டினார்கள். பாரதியாருக்கு நேரில் உள்ள யாராக இருந்தாலும், அவர்கள் தவறு செய்தால் சண்டை போடுவார். கண்டித்து அனுப்புவார். ஆனால், அந்த இடத்தில் இல்லாத யாரைப்பற்றியும் அவதூறு பேசவே மாட்டார்.

> பாரதியாரிடம் அபரிமிதமான நகைச்சுவை உணர்வு இருந்தது. ஒரு நாள் புதுச்சேரி, ஈசுவர தருமராஜா கோயில் தெருவில் உள்ள சத்திரத்தில் கதாகலேட்சபம் நடந்தது. அந்தத் தெருவில்தான் பாரதி வீடு இருந்தது. பாகவதருக்கு தொழில் திறமை இல்லை. எனவே மக்கள் ரசிக்கவில்லை. நேரத்தை போக்குவதற்காக பாகவதர் ஒரு உக்தியை கையாண்டார். அடிக்கடி ‘கோபிகா ஜீவன ஸ்மரணே; எனச் சொல்லுவார். மக்கள் அனைவரும் ‘கோவிந்தா கோவிந்தா’ என்பார்கள்.

பாரதியின் பக்கத்து வீட்டுக்காரர் பொன்னு முருகேசன் பிள்ளையின் வீட்டு வேலைக்காரப் பையன் பெயர் கோவிந்தன். அவனை கூப்பிட்டு நீ, கதாகலேட்சபத்துக்குள் போய், ‘கோவிந்தா கோவிந்தா’ என்று என்னை ஏன் அழைத்தீர்கள் என்று கேள் என்று சொல்லி அனுப்பிவிடுவார். கதாகலேட்சபம் செய்பவருக்கு, அதில் மிகுந்த ஈடுபாடு இருக்க வேண்டும் என்பது பாரதியின் எதிர்பார்ப்பு.

> யாரையும் சந்தேகிக்கும் குணம் பாரதியாரிடம் இல்லை, தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் விதமாக “சின்னச்சங்கரன் கதை” என்கிற புத்தகம் எழுதி முடிக்கும் வேளையில் அப்புத்தகம் அவரது வீட்டிலிருந்து காணாமல் போனது. இருபத்து ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட அருமையான புத்தகம். அதே நேரத்தில் பாரதியாரின் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த முருகேசன் என்பவனையும் காணவில்லை, எல்லோரும் முருகேசன், பாரதியின் புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஓடிப்போயிருப்பான் என சந்தேகித்தனர். பாரதிக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை.

நாற்பது நாட்களுக்குப் பின்பு, எலும்பும் தோலுமாய் முருகேசன் வந்தான். தன்னை போலீசார் அடித்துத் துன்புறுத்தி பாரதியார் பற்றிக் கேட்டதாகச் சொன்னான். அவன் சொல்வதை அங்கிருந்த யாரும் நம்பவில்லை. பாரதியார், முருகேசனின் கண்ணீரைத் துடைத்துவிட்டு நீ என் வீட்டிலேயே தொடர்ந்து இரு என்று சொன்னார். தன்னைச் சுற்றியுள்ள யாரையும், சந்தேகிக்கும் எண்ணம் அவருக்கில்லை.

> பாரதிக்கு வறுமை வந்த போது பணக்கஷ்டம் அதிகமாக இருந்தது. எனினும் யாரிடமும் யாசகம் கேட்பது அவருக்கு பிடிக்காது. ஏனெனில், பணம் கிடைக்கவில்லையென்றால் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. புதுச்சேரியில் முத்தியாலுப்பேட்டையில் கிருஷ்ணசாமிச் செட்டியார் என்கிற வெல்லச்சுச் செட்டியார் இருந்தார். பாரதியாருக்கு அவரிடம் அதிக பிரியம். அவரும் அதுபோலவே இருந்தார். அவரிடம் கதை சொல்கிறேன் என்று சொல்லி, கதை சொல்ல ஆரம்பிப்பார் பாரதி. பணம் கேட்கத்தான் பாரதி வந்துள்ளார் என்று செட்டியாருக்குத் தெரியும். கதையின் நடுவே எவ்வளவு பணம் வேண்டும் என்பதை பாரதி நாசுக்காக சொல்லிவிடுவார்.

> பாண்டிசேரியிலுள்ள முத்தியாலுப்பேட்டையில் கிருஷ்ணசாமிச் செட்டியாரின் தோட்டம் இருந்தது. அங்கு போய் வருவது பாரதிக்கு மிகவும் பிடித்தமான விசயம். அங்கு அமர்ந்து தான் ‘குயில் பாட்டு’ எழுதினார். தோட்டத்திலுள்ள மரம் செடி கொடிகளை உயிருள்ள தோழர்களாகவே பாவித்து பேசுவார். ‘ஸரிக-க-காமா’ என்று வாய் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டால், பாட்டு பிறக்கப்போகிறது என்று அர்த்தம். அப்போது மரத்தை வெறித்துப்பார்ப்பார், குளத்தை உற்றுப் பார்ப்பார், ஆகாயத்தை முட்டுகிறார் போல் மார்பை வெளியே தள்ளி, தலையை எவ்வளவு தூரம் உயர்த்த முடியுமோ அவ்வளது தூரம் நிமிர்த்தி, வானத்தைப் பார்ப்பார்.

வலது காலால் தாளம் போடுவார், தாளம் தப்பினாால் இடது காலால் தரையை ஓங்கி உதைப்பார், ‘சொல் ஆழி வெண் சங்கே’ என்று ஓங்கிக் கத்துவார். சிறிது நேரத்தில் கோட் பையில் உள்ள பென்சிலையும், பேப்பரையும் எடுத்து எழுத ஆரம்பித்துவிடுவார். தான் எழுதிய கவிதைகளை சாதாரண மனிதர்களிடம் படித்துக்காட்டுவார், அப்போது அவர்களின் முக பாவனைகளை கூர்ந்து கவனிப்பார், பின்பு கவிதைகளின் சொற்களை மேலும் எளிமையாக்குவார். பாமரனுக்குப் புரிய வேண்டும் என்பதே அவரது ஆசை.

> ‘கண்ணா! என்னைப்பற்றி நீ பலரிடம் என்ன சொல்கிறாய், பலர் எனது காலில் விழுவதும், கிருஷ்ணாமாச்சாரியார் உங்களைப் பற்றிச் சொன்னார் என்பதும், இந்த விளம்பரம் எனக்குப் பிடிக்கவில்லை’ என்று பாரதி குவளைக் கண்ணனிடம் சொன்னதிலிருந்து பாரதியாருக்கு அவரது காலில் மற்றவர்கள் விழுவது பிடிக்கவில்லை என்பது தெரிகிறது.

ஓர் ஆட்டுக்குட்டியை கசாப்பு கடைக்காரனிடமிருந்து பணம் கொடுத்து மீட்டு பின் அதை ‘ராதா’ என்று பெயரிட்டு, அந்த ஆட்டுக்குட்டியைப் பற்றி கவிதை எழுதினார். ஆனால் அவரால் அந்த ஆட்டுக்குட்டியை பராமரிக்க முடியவில்லை என்று ‘பாரதி - என் தந்தை’ என்ற நூலில் பாரதியின் இரண்டாவது மகள் சகுந்தலா குறிப்பிட்டுள்ளார்.

> ஸ்ரீமதி யதுகிரி அம்மாளின் ‘பாரதி நினைவுகள்’ என்ற நூலில் 1912 முதல் 1918 வரை பாரதியோடு நேரடியாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து எழுதியுள்ளார் யதுகிரி அம்மாள். பாண்டிச்சேரியில் பாரதியின் பக்கத்து வீட்டில் குடியிருந்த மண்டயம் ஸ்ரீ ஸ்ரீ சீனிவாச்சாரியரின் மகள் யதுகிரி அம்மாள். அப்புத்தகத்தில் பதினோராவது அத்தியாயமான உபதேசம் என்னும் தலைப்பில், யதுகிரி அம்மாளுக்கு திருமண ஏற்பாடு நடந்ததை ஒட்டி பாரதியார் யதுகிரிக்கு கூறிய அறிவுரைகள் பாரதியின் பரந்த மனப்பான்மையை, முதிர்ந்த ஞானத்தை, பெண்கள் வாழ்வுக்கான விடியலைக் காட்டுகிறது.

“யதுகிரி பெண்களுக்கு முக்கியமானது கற்பு.. அதற்காக கூண்டுக்கிளி போல் அடைபட்டுக்கிடக்க வேண்டாம். உலகத்தில் கணவன் ஒருவன் தவிர பாக்கி புருஷர்களெல்லாம் அண்ணன் தம்பிமார்கள். எல்லாருக்கும் பதுங்கி அஞ்ச வேண்டியதில்லை. முக்கியமாக கூச்சம், வெட்கம் இரண்டும் அநாவசியமான சரக்குகள். நீ பேஷாக எல்லாருடனும் பேசலாம். நீங்கள் தைரியமாக இருந்தால்தான் உங்கள் வயிற்றில் பிறக்கிற குழந்தைகள் தைரியமாக இருக்கும்.

கோழைத்தனம் இந்தியாவின் மேன்மையை நாசம் செய்துவிட்டது. ஒட்டுக்கேட்காதே, பிறர் கடிதங்களை உடைத்துப் பார்க்காதே. மனதில் உள்ளதை நேரில் சொல்லிவிடு. செய்வதை உன் மனம் ஒப்பச்செய். படிப்பை விடாதே” என்று அறிவுரை கூறினார். பாரதியின் நாடி நரம்பெல்லாம் பெண் விடுதலை உணர்வு பொங்கி ததும்பியது என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும்.

> “எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்! ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மீக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை” என 1951-ம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் பாரதியின் மனைவி திருமதி செல்லம்மாள் உரையாற்றியது, பாரதியின் பெருங்குணத்தை உறுதிப்படுத்துகிறது. தன்னையும், தன்னைச் சுற்றியுள்ளவர்களையும், தாவரங்களையும், விலங்குகளையும், பறவைகளையும் ஆத்மார்த்தமாக நேசித்த பாரதியின் பெருங்குணங்கள் வியப்பானவை.

> பாண்டிச்சேரியிலிருந்து, கடையம் வந்து பின்பு, கடையத்தில் பிற ஜாதியினருடன் சமபந்தி போஜனம் செய்ததற்காக ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டுள்ளார். பாரதி, பாண்டிச்சேரியில் இருந்தபோது தேர்தல்கள் நடந்த காலத்தில், ஹரிஜனங்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று அறிக்கை எழுதி அதில் குவளைக்கண்ணனையும் கையொப்பமிட வைத்தார். அதனால் குவளைக்கண்ணன் சக ஐயங்காரர்களால் ஜாதி பிரஷ்டம் செய்யப்பட்டார் என பாரதியாரின் சீடன் கனகலிங்கம் ‘என் குருநாதர் பாரதியார்’ நூலில் குறிப்பிடுகிறார். எனவே பாரதிக்கு உண்மையிலேயே ஜாதி உணர்வு இல்லை.

“நான் பாரதிதாசன் என்று புனை பெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அதற்கு காரணம், அப்போது அவர் என் உள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்தது தான். சாதிக்கொள்கையை நன்றாக, உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம். அவருக்கு பன்னூற்றாண்டுகளுக்கு முன் அவ்வாறு சாதிக்கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது” என்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் கூறுகிறார். எனவே, உண்மையான ஜாதி ஒழிப்பு போராளியாக பாரதியார் இருந்துள்ளார் என்பது அவருடைய பெருங்குணங்களின் தலையாய குணமாகும். பாரதியை போற்றுவோம்.

- எம்.எஸ்.முத்துசாமி, ஓய்வு பெற்ற காவல் துறை தலைவர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x