Published : 30 Nov 2024 01:18 PM
Last Updated : 30 Nov 2024 01:18 PM
‘தமிழ்நாடு வெதர்மேன்’ என்று அறியப்படும் பிரதீப் ஜானை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் ‘எக்ஸ்’ தளத்தில் பின் தொடர்கின்றனர். மழை, புயல் தொடர்பான இவரது கணிப்புகளை ஆதரித்தும் விமர்சித்தும் நெட்டிசன்கள் அவ்வப்போது பதிவிடுவது வழக்கம். பிரதீப் ஜான் உள்ளிட்ட தனியார் வானிலை ஆர்வலர்கள் சேனல்களில் அளிக்கும் வானிலை முன் அறிவிப்புகளுக்குப் பொறுப்பேற்க முடியாது என இந்திய வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்திருந்தது. அதற்கு, பெரும்பாலும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தான் தவிர்த்து வருவதாகப் பதிவிட்டிருந்தார் பிரதீப்.
இந்நிலையில், பிரதீப் ஜானின் கணிப்புகளைக் கடுமையாக விமர்சித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர், யூடியூபர் மாரிதாஸ் ஆகியோர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருந்தனர். ‘ஒரு வாரத்தைத் தாண்டிய வானிலை முன் அறிவிப்புகளை இவரால் வெளியிட முடியவில்லை’, ‘இந்த திராவிட வெதர்மேன் அடிச்சுவிடுகிறார்’ போன்ற பதிவுகளால் பிரதீப் விமர்சிக்கப்பட்டார். அதற்கு, ‘வானிலை ஆய்வு மையம்கூட 5 நாள்களுக்குத்தான் வானிலை முன் அறிவிப்பை வெளியிடுகிறது’ என ‘வெதர்மேன்’ பதிலளிக்க, இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே ‘எக்ஸ்’ தளத்தில் மோதல் மழையைப் போல் தீவிரமடைந்துள்ளது. - தீமா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT