Published : 15 Jun 2018 10:44 AM
Last Updated : 15 Jun 2018 10:44 AM
காவிரி பிரச்சினை, விவசாயிகள் போராட்டம், ஐபிஎல் போட்டி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் என பல அடுத்தடுத்து பல பிரச்சினைகள் தமிழகத்தை உலுக்கி வருகின்றன. எந்த பிரச்சினையிலும் தமிழக அரசு உறுதியான முடிவெடுத்து சரியான முறையில் அணுகி, தீர்வு காணவில்லை என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை அனைவரும் தமிழக அரசை வறுத்தெடுத்து வருகின்றனர். ஆனால் அரசு விடுமுறை ஒன்றை சரியான முறையில் அறிவித்து அதனை செயல்படுத்த முடியாத அவப்பெயருக்கு தமிழக அரசு இன்று ஆளாகி இருக்கிறது.
ரம்ஜான் பண்டிகையொட்டி இன்று அரசு விடுமுறை விடப்படுவதாக நேற்று தமிழக அரசு அறிவித்தது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், சில தனியார் நிறுவனங்கள் என மாலையே விடுமுறை என்பதை உறுதி செய்ததால், மூன்று நாள் விடுமுறை என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டமிடலுடன் அரசு பணியாளர்கள், அலுவலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் உற்சாமாக விடு திரும்பினர்.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால், சனி, ஞாயிறு என மொத்தம் 3 நாட்கள் விடுமுறை என்ற எண்ணத்தில் பலர் வெளியூர்களுக்கு கிளம்பினர். சிலர் சொந்த அலுவல்களை செய்து முடிக்கலாம் என திட்டமிட்டனர். பள்ளிக்குழந்தைகள் மூன்று நாள் விடுமுறையால் உற்சாகமாகினர். வேறு சிலரோ பல நாள் உழைப்பின் களைப்பை போக்க உறங்கி எழுலாம் என திட்டமிட்டனர்.
ஆனால் நேற்று இரவு 8:00 மணி சுமாருக்கு திடீரென தமிழக அரசு விடுமுறை அறிவிப்பை திரும்ப பெற்றது. ரம்ஜான் சனிக்கிழமை என்பதால் விடுமுறை மாற்றப்பட்டு சனிக்கிழமை மாற்றப்படுவதாகவும், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் அலுவல் நாளாக செயல்படும் எனவும் அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பு சில தொலைக்காட்சியில் மட்டுமே தகவல்களாக வந்தது. இதனால் வெள்ளிக்கிழமை விடுமுறை திரும்ப பெற்ற விவகாரம் பலருக்கு தெரியாமல் போனது.
பலருக்கு தொலைபேசி, வாட்ஸ் ஆப் என கால தாமதமாக தகவல் தெரிய வர மக்கள் கொதித்து போயினர். மூன்ற நாள் விடுமுறை வெளியூர் சென்றவர்களுக்கு அங்கு சென்ற பின் அரசு விடுமுறை ரத்து என்ற தகவலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இப்படியா ஒரு அரசு செய்யும் எங்கள் எண்ணம் எல்லாம் இப்படி போனதே என அலுத்துக் கொண்டனர்.
என்ன செய்வது அரசு அறிவித்து விட்டதால் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று கோபத்துடன் பலரும் இன்று காலை அலுவலகங்களுக்கு கிளம்பினர். பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம் பிடித்த குழந்தைகளுக்கு, தமிழக அரசு செய்த குழப்பத்தை எப்படி சொல்லி புரிய வைப்பது? குழந்தைகளை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு பலரும் சோகத்துடன் அலுவலகத்திற்கு கிளம்பினர்.
சென்னையில் புறநகர் மின்சார ரயில் நிலையங்களுக்கு வந்து தங்கள் செல்லும் அலுவலகத்திற்கு வந்த பலருக்கு ஒரே ஆச்சிரயம். என்ன ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறதே என விசாரத்தால் ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருப்பதாக சக பயணிகள் கூறினர்.
ரயில் நிலைய அதிகாரி ஒலி பெருக்கியில் இன்று விடுமுறை தினம் என்பதால் ஞாயிறு நாளை கணக்கில் கொண்டு குறைவான ரயில்கள் இயக்கப்படுகிறது, இதன் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என அறிவிக்கிறார். இதைகேட்ட பலருக்கும் ஒரே ஆத்திரம். அட என்ன விளையாடுறீங்களா? விடுமுறையை தான் தமிழக அரசு திரும்ப பெற்றுக் கொண்டதே பிறகு ஏன் விடுமுறைபோல குறைவான ரயில்களை இயக்குகிறீர்கள் என ரயில் நிலைய அதிகாரிகளை கேள்வி கேட்டு துளைத்தனர்.
ஆனால் அவரோ இன்று விடுமுறை திரும்ப பெற்ற தகவல் தென்னக ரயில்வேயை வந்தடையவில்லை. கேரளாவில் இன்று விடுமுறை எனவே அதை கணக்கில் கொண்டு தென்னக ரயில்வே விடுமுறை தினமாக ரயிலை இயக்குகின்றன என தனக்கு தெரிந்த விளக்கத்தை அளித்தார்.
நான்கு ரயில்களில் செல்ல வேண்டிய கூட்டம் ஒரு ரயிலில் பயணம் செய்ததால் ஜனத்திரளில் பலர் திக்கு முக்காடி போயினர். பலர் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலைக்கு ஆளாகினர்.
விடுமுறையை ஒழுங்காக விட முடியாதா? அறிவித்த விடுமுறையை திரும்ப பெற்றது ஏன்? இதுபோன்ற குழப்பம் நிகழ்ந்தால் பல லட்சக்கணக்கான மக்கள் எவ்வாறு எல்லாம் பாதிக்கப்படுவர் என தமிழக அரசுக்கு தெரியாதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசு ஒரு முடிவெடுத்தால் அதன் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்ற புரிதல் கூட தற்போதைய தமிழக அரசுக்கு இருக்காதா? எனவும் மக்கள் கோபக் கனலை கொட்டித் தீர்க்கின்றனர்.
அரசு ஊழியர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவ, மாணவியர் என பலரும் இதே நிலைக்கு இன்று ஆளாகியுள்ளனர். ஒரு விடுமுறையை கூட ஒழுங்காக அறிவித்து அதனை சரியாக செயல்படுத்த தற்போதைய தமிழக அரசுக்கு திராணி இல்லையா எனவும் கேள்வி எழுப்புகின்றனர். சரி அரசு விடுமுறை வாபஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு கிடையாதா? எனவும் அவர்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT