Last Updated : 07 Oct, 2024 01:49 PM

1  

Published : 07 Oct 2024 01:49 PM
Last Updated : 07 Oct 2024 01:49 PM

இயல்புத் தன்மை + கலாய்ப்பு... தெறிக்கவிட்ட விஜய் சேதுபதி | Bigg Boss 8 Analysis

கடந்த இரண்டு மாத காலமாகவே அவர் வருகிறார், இவர் வருகிறார் என ஊடகங்களிலும், சமூக வலைதளங்களில் வெளியாகி வந்த யூகப் பட்டியல்கள் உறுதியாகிவிட்டன. கிட்டத்தட்ட பிக்பாஸ் ரசிகர்களால் யூகிக்கப்பட்ட 75% நபர்கள்தான் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். உறுதியாக சொல்லப்பட்ட சிலர் மட்டுமே மிஸ்ஸிங். லேட் என்ட்ரியாக அவர்களை எதிர்பார்க்கலாம்.

ஏழு சீசன்களாக சிறப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்திவந்த கமல்ஹாசன் இந்தமுறை தனிப்பட்ட காரணங்களால் விலகவே புதிய தொகுப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. விஜய் சேதுபதிதான் இந்த சீசனை தொகுத்து வழங்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே ஏழு ஆண்டுகளாக கமல் நின்று விளையாடிய இடத்தை அவரால் நிரப்ப முடியுமா என்ற பலருக்கும் எழுந்தது. காரணம், போட்டியாளர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை பக்குவமாக அணுகுவது, சமூகம் சார்ந்த விஷயங்களைக் கூட எந்த பக்கமும் விமர்சனங்கள் எழுந்துவிடாமல் கையாள்வது கமல்ஹாசனின் பாணி.

கமல் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது கடந்த சீசனில் மட்டுமே. இப்படியான சூழலில் மனித உளவியல் அடிப்படையிலான இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதியால் கையாள முடியுமா என்ற கேள்வி பரவலாக எழுந்த நிலையில், முதல் நாளிலேயே தனது இயல்பான அணுகுமுறை + யதார்த்தமான பேச்சின் மூலம் தொகுப்பாளராக மக்கள் மனதில் நின்றுவிட்டார் விஜய் சேதுபதி.

வீட்டை சுற்றிக் காண்பித்தது தொடங்கி, போட்டியாளர் அறிமுகம், அவர்களின் குடும்பத்தினரிடம் பேசியது, பார்வையாளர்களிடம் பேசியது என தனக்கே உரிய பாணியில் இந்த நிகழ்ச்சிக்கு தான் புதுசு என்கிற எந்தவித பதட்டமும் இன்றி 3 மணி நேர நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார். தேவையற்ற உதாரணங்கள், நேரத்தை வளர்க்கும் சொற்பொழிவுகள் என எந்தவித சலிப்பையும் ஏற்படுத்தவில்லை.

முந்தைய சீசன் போட்டியாளர்கள் எல்லாம் வயது, அனுபவம் காரணமாக கமல்ஹாசனின் முன்பு ஒருவித தயக்கத்துடனே பேசுவர். ஆனால் இம்முறை போட்டியாளர்களும் மிக இயல்பாகவும், சகஜமாவும் விஜய் சேதுபதியுடன் உரையாடியது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. முதல் போட்டியாளராக வந்த தயாரிப்பாளர் ரவீந்தரிடம் பேசும்போது, அவர் இத்தனை சீசன்களாக செய்துவந்த பிக்பாஸ் விமர்சனங்களை ஒப்பிட்டு கலாய்த்தது ரசிக்கும்படி இருந்தது.

அதேபோல ‘மகாராஜா’ படத்தில் தனது மகளாக நடித்த சச்சனா, குக் வித் கோமாளி சுனிதா, டிவி தொகுப்பாளர் தீபக் என ஒவ்வொருவருவரிடமும் சுருக்கமாகவும் அதே நேரம் சுவாரஸ்யமாகவும் பேசி அனுப்பி வைத்தவிதம் சிறப்பு. குறிப்பாக நடிகர் ரஞ்சித் வரும்போது விஜய் சேதுபதி அவரிடம் சில விஷயங்களை சுட்டிக் காட்டிய விதம் ‘வேற லெவல்’ ரகம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தீயவர்களாக காட்டி அவர் சமீபத்தில் எடுத்த திரைப்படம் குறித்து நேரடியாகவே அவரிடம் கேள்வி கேட்டார் விஜய் சேதுபதி. அதே நேரம் அவருடைய ‘பீஷ்மர்’ திரைப்படத்தை பாராட்டவும் தவறவில்லை. ஆடியன்ஸையும் அந்தப் படத்தை பார்க்குமாறு பரிந்துரைக்கவும் செய்தார்.

பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த ரஞ்சித்தின் நண்பர் விஜய் சேதுபதியிடம் பேசும்போது ‘சாப்பிட்டீங்களா சார்?’ என்று கேட்டார். கேட்டவர் அத்தோடு விட்டிருக்காமல், ‘எங்க ஊர்ல யாருகிட்ட பேசுனாலும் முதல்ல இப்படித்தான் கேட்போம்’ என்று சொன்னார். உடனே அதற்கு “பின்ன எங்க ஊர்ல எல்லாம் வந்தவங்களை வெளில போங்கன்னா சொல்லுவோம்” என்று வி.சே. கொடுத்த கவுன்ட்டர் இன்றைய ’வைரல்’ கன்டென்ட்.

இந்த சீசனின் மற்றொரு போட்டியாளராக வந்த சீரியல் நடிகர் அர்ணவ் கொஞ்சம் அதிகமாகவே பேசிக் கொண்டிருந்தார். இதை விஜய் சேதுபதியே ஒருகட்டத்தில் உணர்ந்து கொண்டு இடையிடையே அவருக்கு சரியான கவுன்ட்டர்களை கொடுத்தார். குறிப்பாக உள்ளே சென்றதும் உங்களைப் போலவே ஒருவர் இருந்தால் என்ன செய்வீர்கள் என்ற வி.சே.வின் கேள்விக்கு, ‘ஆம்பளதானே சார். மோதிப் பார்த்துடுவோம். அதுதான் வீரம்’ என்று கூறினார். அதை அந்த இடத்திலேயே தடுத்து ‘வீரத்துல என்ன ஆம்பள, பொம்பள? என்று ஆஃப் செய்தது ‘நச்’ ரகம். இன்னொரு இடத்தில் ‘பல நல்ல வாய்ப்புகளை உங்கள் வாயே கெடுத்துடும்’ என்ற அட்வஸையும் அர்னவுக்கு கொடுத்தார். இவரால் இந்த சீசனில் இன்னும் பல கன்டென்டுகள் கிடைக்கலாம் என்று தோன்றுகிறது.

இப்படியாக மற்ற போட்டியாளர்களையும் உள்ளே அனுப்பிய பிறகு, இதுவரை இல்லாத வகையில் புது முயற்சியாக பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற புதிய கருப்பொருளை பிக்பாஸ் அறிமுகப்படுத்தினார். அதாவது ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் வருவது போல வீட்டுக்கு நடுவே ஒரு கோட்டை கிழித்து இந்த பக்கம் ஆண்கள் அந்தப் பக்கம் பெண்கள் என்ற ஒரு புது விதிமுறையை வகுத்தார். யார் எந்த பக்கம் என்பதையுமே போட்டியாளர்களே முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். முதலில் வந்த ஆறு போட்டியாளர்கள் சரியான முடிவெடுக்க திணறியதால் இந்த முடிவு அடுத்து வந்த சுனிதா, கானா ஜெஃப்ரியிடம் சென்றது. ஆனால் அவர்களும் இதில் முடிவெடுக்கவில்லை.

வரக்கூடிய வாரங்களில் ஏற்படும் சிரமங்களை கணக்கில் கொண்டு இரண்டு தரப்புமே தங்களுக்கு வேண்டிய பக்கத்தில் விடாப்பிடியாக இருந்தனர். இப்படியான சூழலில் இருதரப்பும் பேசி ஒருவழியாக வீடு பிரிக்கப்பட்டது. வீட்டுக்குள் போட்டியாளர்களில் ஒருவரான சவுந்தர்யா நஞ்சுண்டன் தன் குரல் குறித்து மற்றவர்கள் கிண்டல்களை பற்றி பேசியிருந்தார். வீட்டுக்குள் நுழைந்த அவரிடம் மற்ற போட்டியாளர்கள் குரலுக்கு என்னாச்சு என்று கேட்டபோது நிதானமாக என் குரலே இப்படித்தான் என்று அவர் சொன்னவிதம் ரசிக்க வைத்தது.

போட்டியாளர்கள் அனைவரும் வந்தபிறகு முதல் 24 மணி நேரத்திலேயே ஒரு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படுவார் என்று சொல்லி ஒரு புதிய குண்டை போட்டார் விஜய் சேதுபதி. வழக்கமாக முதல் வாரம் அல்லது 2வது வாரத்திலிருந்து எலிமினேஷன் படலம் தொடங்குவதுதான் வழக்கமாக இருந்துவந்த நிலையில், எதன் அடிப்படையில் இந்த புதிய விதி என்று தெரியவில்லை. ஒரு போட்டியாளரைப் பற்றி எதுவுமே தெரியாமல் எப்படி அவரை நாமினேஷ் செய்யமுடியும்? அநேகமாக இன்றைய நிகழ்ச்சியில் அதற்கான விடை கிடைக்கலாம்.

| அலசுவோம்... |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x