Published : 02 Oct 2024 04:30 PM
Last Updated : 02 Oct 2024 04:30 PM

சுதந்திரப் போராட்டத்தில் பெண்களை பங்குபெற வைத்த காந்தி!

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெண்களை பெருமளவு இணைத்து கொண்டு சென்றதில் நம் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு பெரும் பங்கு உண்டு. அதற்கு அவர் தென்னாப்பிரிக்காவில் சந்தித்த வள்ளியம்மை கூட காரணமாக இருக்கலாம். பெண்கள் தெருவில் வந்து போராட்டம் நடத்துவது கூச்சலிடுவது குரல் எடுத்து பேசுவது போன்றவை இருபதாம் நூற்றாண்டு துவக்கத்து இந்தியாவில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் காந்தியின் கொடுத்த குரலுக்கு பெண்கள் எப்படி வந்தார்கள்?

நடுத்தர சமுதாயபெண்கள் தெருவுக்கு வருவதற்கு ராட்டையும் பஞ்சு நூலும் ஒரு முக்கிய கருவிகளாக இருந்தன. ஒரு மனிதனின் வயிறு நிரம்பினால் தவிர இதரவை குறித்து யோசிக்க மாட்டான் என்னும் சூத்திரத்தை நன்கு புரிந்து வைத்திருந்தார் காந்தி. ஓய்வு நேரங்களில்( ?) வீட்டிலிருந்தபடியே ராட்டை சுழற்றிய பெண்களுக்கு, ஒரு கட்டத்தில் தங்களுக்குள் பொது கருத்துக்கள் பரிமாற இடம் கிடைத்தது.

பஞ்சை,நூலை பெறுவது, விநியோகம் செய்யும் வாய்ப்பு பெண்களுக்கு வீட்டிற்கு வெளியே ஒரு நட்பு உண்டாவதற்கு வழி வகுத்தது. காந்தியை பற்றிய பேச்சும் நாட்டு நடப்பு குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடந்தது. காந்தி கொடுத்த பல்வேறு போராட்ட அழைப்பின் போது இ ராட்டையை எடுத்துக்கொண்டு அவர்கள் தெருவிற்கு வந்தனர். அங்கே போராட்டம் என்னும் பெயரால் ராட்டைச் சுழற்றி பொருள் ஈட்டிய போது வீடுகளில் பெரிய எதிர்ப்பு கிளம்பவில்லை.

தான் செல்லும் ஊர்களில் எல்லாம் காந்தி இப்பெண்களின் தலைமைகளை தேர்வு செய்தார். அவர்களுக்கு ஒரு கூட்டத்தை எப்படி நடத்துவது என்பதை சொல்லிக் கொடுத்தார். அவர் பணி எளிதாகிவிட்டது. குடும்பத்தை நடத்தும் பெண்கள் ஒரு இயக்கத்தை நடத்தக்கூடிய வலிமை பெற்றவர்கள் என்ற காந்தி நம்பிக்கை வீண் போகவில்லை.

இந்த ஒரு சூத்திரத்தால் இரண்டு பலன்கள்; ஒன்று பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதேசமயம் போராட்டத்திற்காக செல்லும் ஆண்களையும் தடுக்க வில்லை. இது மிக நல்ல பங்களிப்பை தந்தது. பெண்களுக்கு வெளியிடங்களில் தங்களுடைய தனிப்பிரச்ச னை முதல் பொதுப் பிரச்சணை வரையிலும் பேசுகின்ற வாய்ப்பை தந்தது. அவர்கள் மனஅழுத்தத்திற்கு ஒரு வடிகாலாகவும் அமைந்தது.

தன் வீட்டு விஷயங்கள் பேசிய பெண்களை நாட்டு விஷயங்கள் பேச வைத்தது. காந்தியின் அறைக்கூவல்கள் எளிதாக பரவியது. போராட்டத்தை முழு அளவிற்கு எடுத்துச் சென்றது. மக்களின் போராட்டம் என்றால் பெண்கள் இல்லாமல் அது முழுமை அடையாது, ஆண்களால் மட்டும் சாதிக்க இயலாது என்பதை உணர்ந்த காந்தி அவர்களுக்கான குரல் கொடுத்தார்.

அந்த குரலை நேர்த்தியான தலைமைப் பொறுப்புடைய சில பெண்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் பற்றிக்கொண்டனர். அவர்கள் சிறு குழுக்களை அமைத்து அந்தக் குழுக்களில் குடும்ப சுகாதாரம், பிள்ளை வளர்ப்பு, தேசபக்தி பாடல்கள், நூல் நூற்பு என்னும் பலவகையான பயிற்சிகளை இப் பெண்கள் பெற்றனர். ஒரு பெண்ணின் பொருளாதார முன்னேற்றம் குடும்பத்தின் முன்னேற்றம் ஆனது.

1922 ல் தன்னுடைய 'யங் இந்தியா' பத்திரிக்கையில் காந்தி, பெண்களுக்காக, 'ஒரு குழந்தை எவ்வளவு நோயாளியாக இருந்தாலும் அருவருக்கத்தக்க வகையில் இருந்தாலும் அதன் தாய் அதை பராமரித்து நேசிப்பார். அதைப்போல் கதர் ஆடைகள் எந்த அளவு முரட்டுத்தனமாக இருந்தாலும், இதை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் எடுத்துச் செல்லுங்கள் இது உங்களால் முடியும் ' என்று எழுதினார்.

சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கை பற்றி பெரிதாகப் பேசுவது இல்லை என்றாலும் அனேக பெண்கள் அதில் ஈடுபட்டிருந்தனர். கஸ்தூரிபாய், சரோஜினி நாயுடுவையும் அறிந்த அளவிற்கு நாம் மூவளூர் அம்மையார், உமா நேரு, சரளாதேவி, கணபதி தேவி, ராம் கலி தேவி போன்றவர்களின் பெயர்களை பெரிதாக அறிந்திருக்கவில்லை.

இவர்களைப் போன்ற பெண் தலைமைகளே அன்று500 பேர் கொண்ட பெண்களின் அமைப்பை முன்னின்று நடத்தி சுதேசி இயக்கத்தை ஒரு வெற்றியான இயக்கமாக மாற்றினார்கள். இப்படி அமைக்கப்பட்ட குழுக்களினால் ஜாதிமத வேறுபாடுகளை மறந்து பெண்கள் அதிக அளவில் ஒன்று கூடி நாட்டிற்காக பாடுபட்டனர்.

அந்த காலகட்டத்தில் தோன்றிய மகளிர் இதழ்களும் அவர்களின் போராட்டங்களும் குறித்து இன்று பேச வேண்டி உள்ளது. இன்று நாம் மிகவும் முன்னேறி விட்டோம் என்று சொல்கிறோம். ஆனால், நாம் நடக்கின்ற பாதை நாம் புரிந்து கொள்ளும் விதம், மகளிர் பத்திரிகைகள் அதனுடைய பொருள் அடக்கம் முதலியவை எந்த அளவு மாறுபட்டிருக்கிறது என்பதை ஒப்புமைப்படுத்தி பார்த்தால் நன்கு புரியும்.

பெண் என்பதால் வேதங்களை சொல்லித்தர மறுத்தபோது மகாதேவி வர்மா என்பவர், தனக்கு வேதங்கள் தேவையில்லை என்று எடுத்து எறிந்தார். கலாவதி மிஸ்ரா தம் இரண்டு மாதக் குழந்தையோடு சிறைக்குச் சென்றார். மீனா தேவி உப்பு சத்தியாகிரகத்தில் பெரும் பங்கு எடுத்தவர்.

பெண்கள் நடத்திய போராட்டங்களில் உண்ணாவிரதங்களில் இரட்டை வாரம், புறக்கணிப்பு வாரம் என்று பல்வகையாகஇருந்தன. ஒவ்வொரு வாரத்தையும் தனித்தனியாகக் கொண்டாடி தங்களுடைய போராட்டத்தை விரிவுபடுத்தியவர்களில் பெண்களும் கூட காதி அணிந்து தெருக்களில் வலம் வந்தார்கள்.

அலகாபாத் தெருக்களில் போலீஸ் லத்தி அடி வாங்கிய, குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டவர்களிலும்பெண்கள் அதிகம் உண்டு. இவர்களைப் போன்று நாடு முழுக்க பல பெண்கள் இருந்தார்கள். இப்படி ஏராளமானப் பெண்கள் போராட்டங்களில் கலந்து கொண்டார்கள்.

உப்பு சத்தியாகிரகத்தின் போது அரெஸ்ட் செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட கமலா பேபி என்பவர் நீதிமன்றத்திலேயே உப்பை கூவி கூவி விற்றார். அங்கிருக்கும் மாஜிஸ்டரேட்டை பார்த்து நீங்கள் ஏன் உங்களுடைய பணியை விட்டு எங்களோடு சேரக்கூடாது ? என்று கேட்டார். ஆனால் அதற்காக கொடுக்கப்பட்ட ஆறு மாதச் சிறை தண்டனையும்ரூ.150 அபராதத்தையும் அவர் பொருட்படுத்தவில்லை.

தில்லியிலிருந்து வெளிவந்த "மான்செஸ்டர் கார்டியன்" என்னும் பத்திரிகையில் ஜூன் 1931 இல் ஒரு செய்தி வெளியானது. இதில் பெண் பத்திரிகையாளரான மேரி கேம்ப்பெல், காந்தியை பற்றியும் இந்தியாவில் நடக்கும் புரட்சியைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். காந்தி சிறைக்குச் செல்லும் பொழுது ’நீங்கள் சிறைக்கு செல்கிறீர்களே இனி போராட்டம் எப்படி நடக்கும்?’ என்று மேரி அம்மையார் கேட்டார்.

இதற்கு காந்தி "இந்த மது கடைகளை இழுத்து மூடும் போராட்டம் உட்பட அனத்தையும் இந்நாட்டுப் பெண்களின் கைகளில் விட்டுச் செல்கிறேன்" என்று கூறினார். இந்நிகழ்ச்சி பற்றி தனது கட்டூரையில் மேரி குறிப்பிடுகையில், ’காந்தி சொன்னதை முதலில் தவறு என்று நான் நினைத்தேன். ஆனால் , தில்லியில் இருக்கும் சுமார் 17 மது கடைகளை பெண்களே அவர்களின் முயற்சியால் அடைத்தார்கள்.

இதற்காக அவர்கள் போராட்டம் கூட நடத்தவில்லை. மதுக்கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்களின் முன் நின்று ஒரு நமஸ்தே சொல்கிறார்கள். இன்னும் சிலரிடம் கெஞ்சி கேட்கிறோம் என்றார்கள். அடுத்த நிமிடமே வாடிக்கையாளர்கள் ’மன்னித்து விடுங்கள் சகோதரிகளே’ என்று சொல்லி திரும்பச் சென்று விட்டார்கள்.

வாடிக்கையாளர்களே இல்லாத கடைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள் முதலாளிகள்? ஆகவே கடைக்காரர்கள் தங்களுடைய உரிமத்தை அரசிடம் திரும்ப கொடுத்துவிட்டு மதுக்கடைகளை மூடிவிட்டனர் . இந்தப் பெண்களின் நடவடிக்கை எனக்கு மிகவும் ஆச்சரியத்தை உண்டு செய்கிறது" என எழுதியுள்ளார்.

ஆண்களுக்கு இணையாக நம் தேசத்தந்தை காந்தியால், நம் நாட்டு பெண்களும் சுதந்திரப் போராட்டத்தில் இறங்கி ஆண்களுக்கு இணையாக சாதித்தனர். காந்தியின் வெற்றிக்கு ஒரு சக்தியாகி உறுதுணையாக பெண்கள் நின்றனர். இதற்காக, அப்பெண்களை பொதுக்களங்களில் இறங்கச் செய்த காந்தியையும் இன்று நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

இன்று - அக்.2 - மகாத்மா காந்தி பிறந்த தினம்.

- எஸ்.சாந்தினிபீ, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் ஓய்வுபெற்ற பேராசிரியர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x