Published : 06 Jun 2018 03:02 PM
Last Updated : 06 Jun 2018 03:02 PM
அருமை வாசகர்களே, உலக சினிமா குறித்த இத்தொடர் சற்று வித்தியாசமாக முயற்சிக்க விரும்புகிறேன். இதுவரை உலக சினிமா குறித்து நான் எழுதி வந்த கட்டுரைகளில் படத்தை அறிமுகப்படுத்தி பெரும்பாலும் கதையைச் சொல்லி படத்திற்குள்ளே ஊடாடி நிற்கும் சிறப்பம்சங்களைப் பேசி அதன் உள்ளுக்குள் பிரகாசிக்கும் ஒளியைக் கண்டெடுத்து எழுதி வந்தேன்.
எப்படியும் படத்தின் பெயரும், படத்தை எப்படிப் பார்க்கிறேன் என்பதையும் சொல்லிவிடப்போகிறேன். நீங்களும் வாய்ப்பிருந்தால் அதைத் தேடிக் கண்டுபிடித்து பார்த்துவிடப் போகிறீர்கள்.. அப்புறம் மெனக்கெட்டு எதற்காக உலக சினிமா படக்கதை அனுபவத்தை இங்கே நீட்டி முழக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
சரி அதற்கு பதிலாக இந்த 'கலர் பிம்பங்கள்' தொடரில் வேறென்ன செய்யப்போகிறீர்கள் என்றுதானே கேட்கிறீர்கள். அதிகமில்லை, சும்மா சில பத்திகளில் இந்த உலக சினிமா கட்டுரைகளை எழுதும் பால்நிலவன் யார்? கிராம டூரிங் டாக்கீஸ்கள், நகர சந்தடிமிக்க தியேட்டர்கள் என்று சாதாரணமாகச் சென்று படம்பார்த்த குழந்தைப் பருவ அனுபவங்கள் எவ்வளவு வண்ணங்கள் மிக்கதாக இருந்தது? என்பதை கொஞ்சம் அப்படி இப்படி க்ரீம் தடவி தரலாம் என்று ஆசை...
நல்ல சினிமா குறித்து பேச வேண்டிய முன்னுரைகளில் எழுதப்படும் இந்த வாழ்க்கை அனுபவங்களை தேவையில்லையெனில் நீங்கள் நிராகரித்துவிடலாம். நேராக நீங்கள் உலக சினிமாவை ரசிக்கலாம். எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ''சார் போனவாரம் உங்கள் அனுபவம் குறித்து நண்பர்கள் சொன்னார்கள் அதை மறுபடியும் சொல்லுங்கள் சார்'' என்றால் நிச்சயம் அதை மீண்டும் சொல்ல முடியாது. அடுத்த படம் குறித்து பேசும்போது அடுத்த சம்பவத்திற்கு போய்விடுவேன்.... ஓகே வா...
வேலி பாஸ்: இன்று ஒருநாள் மட்டும்!
அப்போதெல்லாம் சினிமாக் கொட்டகைகளில் டிக்கெட் வாங்கிக் கொண்டு சினிமா பார்க்கப் போவது ஒரு அனுபவம் என்றால் டிக்கெட் வாங்காமலே சினிமா பார்த்த அனுபவங்களும் உண்டு. அப்படி டிக்கெட் வாங்காமல் சினிமா பார்த்த அனுபவங்களில் ஒன்றுதான் வேலி பாஸ். இந்த அனுபவங்கள் டூரிங் டாக்கீஸ்களில் மட்டுமே வாய்க்கக் கூடியது. இந்த அனுபவம் நிச்சயம் எல்லோருக்கும் இருக்க வாய்ப்பில்லை. திருட்டுத்தனமாக படம்பார்த்து மாட்டிக்கொண்டால் பெரிய அவமானம். கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கேவலப்படுத்தப்பட்டு ஊரே பார்க்க வலம்வர யாருக்குத்தான் ஆசை இருக்கும்?
ஆனால் எனக்கு அந்த அனுபவம் உண்டு. கேவலப்பட்டு வலம்வந்ததா என்று கேட்டுவிடாதீர்கள்... நான் சொல்வது வேலி பாஸ் அனுபவம் (டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக வேலியைத் தாண்டி படம் பார்க்கும் அனுபவம்). மாட்டிக்கொள்ளாத வரைக்கும் நல்லவர்தான் போல என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது. அந்தமாதிரி அனுபவம் வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் அமைந்தது. அதற்குக் காரணம் காத்தவராயன். காத்தவராயனுக்கு வாய்பேச வராது என்றுதான் ஆரம்பத்தில் சொன்னார்கள். அதற்குக் காரணம் அவன் ஒருவார்த்தையும் பேசி யாரும் பார்தததில்லை. ஆனால் அவனால் பேசமுடியும் என்பதே அவன் எனக்கு நன்மை செய்தபோதுதான் அறிந்தேன்.
அதனால் காத்தவராயனுக்காக மட்டுமே நான் வேலி பாஸில் ஈடுபட முடிவு செய்தேன்.
பழைய பிரச்சினை ஒன்றுக்காக காசி என்பவன் பள்ளியில் என்னைப் பழிவாங்க முற்பட்ட சம்பவம் ஒன்று நடந்தது.
பாண்டியனின் அசைன்மெண்ட் நோட்டை என் பையில் வைத்துவிட, பாண்டியன் நோட்டைக் காணவில்லை என்று கூற மாலை பிரேயரில் பிரச்சினை வெடித்தது. ''நோட்டு எங்க இருக்கும்னு எனக்குத் தெரியும் சார்.. அது ஸ்ரீதர்தான் எடுத்தான் அவன் பையிலதான் இருக்கு நான் பார்த்தேன்'' என்று சொல்லியவாறே காசி முன்வந்தான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று பையில் கைவிட்டு அவன் அசைன்மெண்ட்டை வெளியே எடுத்து திருப்பித் திருப்பிப் பார்த்ததை அனைவரும் பார்த்தனர்.
அப்போது அங்கு மாணவர் கூட்டத்திலிருந்து வெளியே வந்தவன் காத்தவராயன். பிரேயரில் போக இருந்த என் மானத்தைக் காப்பாற்றியவன் இந்த காத்தவராயன்தான்... காத்தவராயன் ஒரு வார்த்தையும் பேசத்தெரியாதே என்ன சொல்லப் போகிறான் என்றுதான் எல்லோரும் பார்த்தார்கள்.,
''சார் அந்த நோட்டை இவன் பையில காசி வச்சதை நான் பார்த்தேன்...''... இதுமாதிரி முக்கியமான நேரங்களில் ஆபத்பாந்தவனாய்...
பள்ளியில் எனக்கென்று சில நன்மைகளைச் செய்தவனுக்காக நான் இதைக்கூட செய்யவில்லையென்றால் பின் எப்படி?
உங்களுக்கு ஒன்று தெரியுமா? காத்தவராயனுக்கு சினிமாவே பிடிக்காது. அவர்கள் குடும்பமே காட்டில் வீடுகட்டி வாழ்ந்துகொண்டிருக்கிற குடும்பம். எவ்வளவு வீரதீர படங்களென்றாலும் பொம்மைப் படம் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடுவான். அடிதடி சாகசங்களைப் பற்றியெல்லாம் அவன் செய்யும் கிண்டல்களைக் கேள்விப்பட்டால் சூப்பர் ஹீரோக்கள் வேறெதாவது சோலியைப் பார்க்க போய்விடுவார்கள்..
''பைக்கிலேயே பாய்ஞ்சி பைக்கிலேயே சண்டை போட்டு பைக்கிலேயே தப்பிச்சி போறாராம். ஏன் பைக்கிலேயே போய் அல்வா கிண்ட வேண்டியதுதானே...''
பேசவே பேசாதவன் எப்படிப் பேசுகிறான். ஆனால் இப்படி பேசுகிறானே தவிர, காட்டுமிருகங்களுடனான சாகசப் படங்கள் என்றால் அவனுக்குக் கொள்ளைப் பிரியம்.
ஒருநாள் பள்ளியிலிருந்து வரும்போது ஒரு சினிமா போஸ்டரை உற்றுப் பார்த்தபடி அப்படியே சிலை மாதிரி நின்றுவிட்டான். ஒரே ஆச்சரியம். எப்பொழுதும் சினிமா போஸ்டர்களைக் கண்டு அவன் பிரமித்து, ரசித்து நின்றதில்லை. ஆனால் இந்தப் போஸ்டர் அப்படி என்ன இருக்கிறது. நானும் பார்த்தேன். படத்தின் பெயர், ''யானை வளர்த்த வானம்பாடி மகன்'' விஜயபுரி வீரன் சி.எல்.ஆனந்தன் நடித்தது. ரொம்பப் பழைய படம். இருந்தாலும் காட்டு விலங்குகள் பற்றியது.
எந்தப் போஸ்டரைக் கண்டும் அசராத காத்தவராயனை நிறுத்தி பார்க்கவைத்த படம் 'யானை வளர்த்த வானம்பாடி மகன்'. காத்தவராயனுக்கு ஒரு படம் பிடித்திருக்கிறதென்றால் அதை எப்படியாவது அவனுக்கு காட்டியே ஆக வேண்டியதுதான் எனது கடமை என்பது போன்ற உணர்வுக்கு நான் ஆளானேன்.
அந்தப் போஸ்டரில் இன்னொன்றும் கூடவே பிட் நோட்டீஸ்போல ஒட்டியிருந்தார்கள் ''இன்று ஒருநாள் மட்டும்.''
இங்குதான் பிரச்சினையே வந்தது. நாளை இப்படம் கிடையாது. இன்று ஒருநாள் மட்டும் என்றால் இன்றே பார்த்தாக வேண்டும். வீட்டில் கேட்டால் மறுத்துவிடுவார்கள்.. முதல்நாள் வீட்டில் அனுமதி இல்லை. இன்று ஒருநாள் மட்டும் என்று சொன்னால் ''அப்படிப்பட்ட படத்தை பார்க்கவேண்டியதே இல்லை'' இதுதான் அவர்களது பதிலாக இருக்கும்.
அதனால் படம்பார்க்க வேண்டி, காசு கைக்கு வர வாய்ப்பே இல்லாத இந்த மோசமான சந்தர்ப்பத்தில் நண்பர்கள் சொன்ன 'வேலிபாஸ்' ஞாபகத்துக்கு வந்தது. இந்த வேலிபாஸ் அனுபவத்தை காத்தவராயனை வைத்து நான் பரிசோதிக்க ஆரம்பித்தேன் என்பது மிக தவறான வாதம். அவனுக்கு எவ்வகையிலாவது உதவ நினைத்தேன் என்றுதான் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.
வேலி பாஸ் அனுபவத்தில் வெற்றி கிடைத்தது என்றாலும் சற்று சிரமம்தான்... சற்று பிசகியிருந்தால் வேலிகாத்தான் முள்களில் விழுந்து உடல் ரத்தவிளார் ஆகியிருக்கும்.
யானைப்படம் 'இன்று ஒருநாள் மட்டும்' என்பதாலோ என்னவோ டூரிங் டாக்கீஸில் அன்று நல்ல கூட்டம். நாங்கள் இருவரும் அப்படியே நடந்து திரையரங்கின் பின்பக்கம் வந்தோம். பேய்கள் நடமாட்டம் அதிகம் என்று சொல்லப்படும் புளியந்தோப்பு எங்கும் ஜிலோ என்ற இருட்டு. இவ்வளவு தைரியம் எப்படி வந்தது எனக்கு? அதை ஆராயப் புகுந்தால் ராத்திரிக்கு தூக்கம் வராது.
மூங்கில் கழிகள் அடித்த வேலி ஒரு இடத்தில் சற்று சரிந்திருந்தது. அங்கு வேலிகாத்தான் முள் அடர்த்தியாக போட்டிருந்தார்கள். அதை வத்திக்குச்சி வெளிச்சத்தில் சற்று நீக்கி கையில் பிடித்தபடி ''ம் அந்தக் காலை இங்க வை, ம் இந்தக் கால தூக்கு எகிறி தாண்டு'' என்றெல்லாம் உசுப்பேற்றி அவனை முதலில் அந்தப் பக்கம் போகவைத்தேன். அவனை அங்கிருந்து வேலிகாத்தானைப் பிடிக்கவைத்து நானும் அதேபோல தாண்டி அந்தப்பக்கம் சென்றேன். வேலியை இருந்தமாதிரி வைத்துவிட்டு சட்டென்று கூட்டத்தில் கலந்து திரையரங்கில் வெண்திரை எதிரே மணல் குவித்து அதன் மீது அமர்ந்தோம்....
''ஜாம்ஜாம் என்று சந்தோஷமாய் நீ தளிர் நடைபோடு ராஜசிம்மா''... என்று வானம்பாடி மகன் யானை மீது அமர்ந்து காட்டில் பாடிச்செல்வதைப் பார்த்து காத்தவராயன் எழுந்து ஆட ஆரம்பித்தான்.
காத்தவராயன் ஐந்தாம் வகுப்பு கடந்து ஆறாம்வகுப்புகூட என்னோடுதான் படித்தான். அப்போதே பல விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு பள்ளிக்கு சுழல்கோப்பையை வாங்கித்தந்தான். பிரேயரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத்தியில் அவனுக்குத் தலைமையாசிரியை பூச்செண்டு அளித்து பாராட்டியதை மறக்க முடியாது. ஆனால் அவன் கல்வி வாழ்க்கை கரைசேராமல் பாதியிலேயே கலைந்துபோனது.
அம்மாவுக்குப் பிறகு தனது அப்பாவுக்குக் கிடைத்த இரண்டாவது மனைவி கொடுமையினால் அற்புதமான கிராமம் மற்றும் கல்வி கற்கும் அனுபவத்திலிருந்துகூட தூக்கியெறியப்பட்டு எங்கோ போய் கூலியாளாக விழுந்த காத்தவராயனை இன்று நினைத்தாலும் மனம் ஆறவில்லை.
பிரிந்துசெல்லும் கூழாங்கல் முகங்கள்
''எ டைம் இன் குச்சி'' (a time in quiche) எனும் தாய்லாந்து படம் பார்த்தபோது எனக்கு காத்தவராயன் ஞாபகம் வந்து மெல்ல அலைக்கழித்தது. படத்தில் தன் அப்பா அம்மா விவாகரத்து பிரச்சினை எழுந்தபோது பாவோ என்பவன், அவனது பாட்டனாரின் கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். காத்தவராயனைப் போல அவன் படம் முழுக்கப் பேசிய வார்த்தைகளை விரல்விட்டு எணணிவிடலாம்.
பாவோ அந்தக் கிராமத்தில் பிடிப்பு இல்லாமல்தான் இருந்தான். அம்மாவிடம் வளர்ந்த தங்கையும் அவனுடன் படிக்க வர அவள் தன் சக நண்பர்களிடம் தன் அண்ணனைப் பற்றி சொல்வாள். ''அவன் என்னை வெறுப்பான். எப்போதும் சிரிக்காத உம்மனாம்மூஞ்சி அவன்'' என்று... அப்பா அம்மா பிரிவின் சுமை அழுந்த வலிதாங்கமுடியாத அவனது முகம் எப்படி சிரிக்கும்? கிராமத்தில் கோடைப் பள்ளியில் சேர்க்கப்படும் பாவோவுக்கு அங்கு எல்லோரும் அந்நியமாகவே தெரிகிறார்கள். தாத்தாகூட அவனுக்கு அந்நியமாகத்தான் தெரிகிறார்.
ஆனால் மிகுசுவான் எனும் தாய்தந்தையர் அற்ற சிறுவன் இவனுக்கு உற்றத் தோழனாகிவிடுகிறான். குறுகலான சாலையில் ஒற்றைச் சக்கரத்தில் அவன் வலம் வருவதும், ஆற்றில் டைவ் அடிப்பதும் இவனை அழைத்துச் சென்று யாருமற்ற பள்ளி மைதானத்தில் கொட்டும் மழையில் கூடைப்பந்து விளையாடியதும் மறக்க முடியாத அனுபவங்களைத் தருகின்றன...
பாவோவின் தாத்தா, கூழாங்கல்லில் வரைந்துள்ள முகம் எல்லாமே அவரைப் பிரிந்துவிட்ட அவரது நண்பர்கள்தான் என்று அறிந்ததுமே முதலில் அந்நியப்பட்டிருந்த தாத்தாவும் அவன் மனதுக்கு நெருக்கமாகி விடுகிறார். அடிக்கடி ஆற்றங்கரை நீரோடை ஏரி ஆகியன சந்திக்கும் ரம்மியமான பகுதிக்கு அவனை அழைத்துச் செல்கிறார். அவர் வரைந்ததில் பாட்டியின் வண்ணம்தீட்டி கூழாங்கல் முகத்தைப் படகில் சென்று நடு ஆற்றில் போடுகிறார். மழைவெள்ளம் பெருகிவரும் ஒருநாளில் பாறைகளுக்கிடையே பதுங்கியிருக்கும் மீனை குத்திப் பிடிக்கச் சென்ற மிகுசுவான் வெள்ளப்பெருக்கின் வேகத்தில் பாறையில் அடிபடுவது நாம் சற்றும் எதிர்பாராதது.
மிகுசுவான் மறைவில் தீரா துயரத்தில் இருக்கும் பாவோ அவன் முகத்தை கூழாங்கல்லில் வரைந்து தாத்தாவின் துணையோடு நடுஆற்றில் படகில் சென்று போட்டுவிட்டு வருகிறான். ஒருநாள் தாத்தாவும் கீழேவிழுந்துவிட அவரும் அவனைவிட்டுப் பிரிகிறார். தைபெய் நகர மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தாத்தாவின் ஓவியத்தையும் வண்ணம் தீட்டாமல் பென்சிலில் கூழாங்கல்லில் வரைந்து வைத்திருக்கிறான். தந்தையுடன் அவரைப் பார்க்க நகர மருத்துவமனை செல்ல கார் காத்திருக்கிறது. அவன் போய் தனது முகத்தையும் கூழாங்கல் முகம்போன்ற ரோஸ் வண்ணம் பூசிக்கொண்டு மவுனமே சாட்சியாக அவருடன் காரில் செல்கிறான். தன்னையே இழந்துவிட்டதாகக் கருதி ரோஸ் வண்ண கூழாங்கல் முகத்துடன் பக்கவாட்டுக் காட்சிகளைப் பார்த்தபடி தன் தந்தையுடன் காரில் அவனது பயணம் ஒரு வார்த்தையுமின்றி...
இப்படம் என்னை பலநாள் அலைக்கழித்தது. இப்படத்திற்கு பிரிந்துசெல்லும் கூழாங்கல் முகங்கள் என பெயர் வைத்திருக்கலாம். இன்று காத்தவராயன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. படித்த பள்ளிக்கு சுழல்கோப்பை வாங்கித்தந்தவன், வாழ்க்கைச்சுழலில் சிக்கி... வேண்டாம் ப்ளீஸ்... அடுத்த வாரம் பார்க்கலாம்....
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT