Published : 22 Aug 2014 02:57 PM
Last Updated : 22 Aug 2014 02:57 PM

பிறந்தநாள்: ஒரு நிமிட கதை

இன்று என் ஒரே மகன் கந்தர்வுக்கு பிறந்த நாள். நாங்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ என் கணவர் இப்போது உடன் இல்லை. வேலை நிமித்தமாய் மும்பை சென்றுள்ளார்.

“சித்ரா, என்னால கந்து பிறந்தநாளுக்கு வர முடியாது. அதுக்காக அப்படியே விட்டுடாதே... அவனுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டு, மூணு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்து காலையில மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போ. அப்படியே அன்னை ஆசிரமத்துல இருக்கிற என் அம்மாகிட்டேயும் அவனை அழைச்சுப் போய் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க வை.”

“சரிங்க...”

“ நான் ஆன்லைன்ல சற்குரு ஹோட்டல்ல நூறு பேருக்கு டின்னர் ஆர்டர் பண்ணியிருக்கேன். வீட்டுக்கே டின்னர் தேடி வந்துடும். எல்லாருக்கும் மனசார நீயே உன் கையால பரிமாறு. ஓகே?... நான் இல்லேன்னு வருத்தமே வேணாம். இந்த வருஷம் கந்து பர்த்-டேவுல எந்த குறையும் வராது. பக்காவா பிளான் பண்ணியிருக்கேன். ஹேப்பிதானே?”

“இதைவிட வேறன்னங்க வேணும்?” என்று என் கணவனுக்கு பதில் சொல்லிய நான் அன்று இரவு நிம்மதியாக உறங்கினேன்.

விடிந்தது.

அன்னை ஆசிரமத்தில் இருக்கும் மாமியாரிடம் மகனை ஆசீர்வாதம் வாங்கவைக்க அங்கு அவனை அழைத்துச் சென்றேன். அங்கு மாமியார் இல்லை.

“அவங்க எங்கே...?” என்று நான் பதட்டமாகக் கேட்க... “அவங்க பேரனுக்கு இன்னைக்கு பிறந்த நாளாம். அதுக்காக திருப்பதி வரை நடைபயணம் போயிருக்காங்க!” என்றனர்.

ஆடிப்போய் நின்றேன்.

‘இப்படி ஒரு ஆத்மாவையா நான் சுமையாய் நினைத்து இங்கு கொண்டு வந்து சேர்த்தேன்?’ என்று நான் என் முகத்தில் அடித் துக்கொண்டு கதறி அழுகி றேன்.

ஆம், இன்றுதான் சித்ராவாகிய எனக்கும் உண்மையான முதல் பிறந்த நாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x