Published : 14 Aug 2024 04:50 PM
Last Updated : 14 Aug 2024 04:50 PM
‘சுதந்திரத்தை உயிர் மூச்சு’ என்கிறார் மகாத்மா காந்தி. ஆண்டாண்டு காலமாக எதேச்சதிகாரத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு நாட்டிற்கு, நீண்ட நெடும் போராட்டத்தின் விளைவாகக் கிடைக்கும் விடுதலையானது கொண்டாட்டத்துக்குரியது. இந்தியச் சுதந்திர தினத்தின்போது கொடியேற்றம், முப்படை வீரர்களின் அணிவகுப்பு, பிரதமர் உரை, வாண வேடிக்கைகள், சாகசங்கள், கலாச்சார நடனங்கள் என அன்றைய நாள் விழாக் கோலம் பூண்டிருக்கும்.
இந்தியாவைப் போல் உலகின் பிற நாடுகளும் தமது கலாச்சாரத்தையும், ராணுவ பலத்தையும் வெளிப்படுத்தும் நோக்கில் சுதந்திர தினத்தைக் கொண்டாடிவருகின்றன. உலகம் முழுவதும் சுமார் 150க்கும் அதிகமான நாடுகள் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன. இதில் இந்தியாவைப் போன்று பெரும்பாலான நாடுகள் சுதந்திர தினத்தன்று தேசிய விடுமுறையை அறிவித்துள்ளன. இந்தியா சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அதே நாளில் பஹ்ரைன், தென் கொரியா, வடகொரியா, காங்கோ, லிச்டென்ஸ்டைன் போன்ற நாடுகளுக்கும் சுதந்திர தினம்.
கொண்டாட்டங்கள்: கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சுதந்திர தினத்தன்று மக்கள் தங்கள் முகத்தில் தாய்நாட்டுக் கொடியின் வண்ணங்களைப் பூசிக்கொள்கின்றனர். மெக்சிகோவில் வண்ணமயமான நடனங்களுடன் எருதுச் சண்டைகளும் நடைபெறுகின்றன. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்டரிகாவில் சுதந்திர தினக் கொண்டாட்டம், வீதிகளில் விளக்குகளை ஏந்திச் செல்லும் குழந்தைகளுடன் தொடங்குகிறது.
பிரேசில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ராணுவ அணி வகுப்புடன், தற்காப்புக் கலைகளும் காட்சிப்படுத்தப்படும். கொலம்பிய சுதந்திர தினத்தில் வீதிகளில் பாரம்பரிய இசை, நடனத்தைப் பார்த்து ரசிப்பதுடன் விதவிதமான உணவு வகைகளையும் மக்கள் உண்டு மகிழ்கின்றனர்.
தென்கொரியாவில் சுதந்திர தினம், ஒளி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் தென்கொரிய மக்கள் வீதிகளில் கொடிகளை ஏந்திச் செல்வார்கள். அதன் அண்டை நாடான வடகொரியாவில் நாட்டின் ராணுவ பலத்தைப் பறைசாற்றும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணைகளின் அணிவகுப்பு அரங்கேறும். சுதந்திர தினத்தன்று ஆஸ்திரே லியாவில் வண்ணமயமான வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்படும். சுதந்திரத்தைப் போற்றுவோம். மனிதத்தைப் பேணுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT