Last Updated : 14 Aug, 2024 04:22 PM

6  

Published : 14 Aug 2024 04:22 PM
Last Updated : 14 Aug 2024 04:22 PM

இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தது யார்? | ஆக.15 - சுதந்திர நாள் சிறப்பு பகிர்வு

பல ஆண்டுகால இந்திய மக்களின் போராட்டங்களின் விளைவாக நாம் சுதந்திரத்தைப் பெற்றோம். சுதந்திர இந்தியா மலர்ந்தே தீர வேண்டும் என்கிற சூழல் இந்தியாவிலும் பிரிட்டனிலும் உருவானது. இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்கக் கூடாது என்பதில் வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற பிரிட்டனைச் சேர்ந்த தலைவர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால், ‘பிரிட்டனின் ஆட்சி எங்களுக்கு வேண்டாம்’ என்று இந்தியர்கள் சொல்வதைக் கேட்கவும் பிரிட்டனில் ஒருவர் இருந்தார். அவர்தான் அப்போது பிரிட்டனின் பிரதமராக இருந்த கிளமெண்ட் அட்லீ. அவர் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர்.

கிளமெண்ட் அட்லீ.

இந்தியாவில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்றும் பிரிட்டனின் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைகிறது என்றும் அறிவித்தார். இந்தியா மட்டுமன்றி பாகிஸ்தான், இலங்கை, மயன்மார் போன்ற பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்த நாடுகளும் அட்லீ மூலமே சுதந்திர நாடுகளாக மலர்ந்தன!

ஆகஸ்ட் 15 ஏன்? - இந்தியாவைச் சுதந்திர நாடாக அறிவிக்க ஆகஸ்ட், செப்டம்பருக்குள் ஒரு தேதியை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் இந்தியவுக்கான கவர்னர் ஜெனரல் மவுன்ட் பேட்டன். ஏதோ ஒரு நாளைச் சொல்லாமல், காரணத்தோடு அந்த நாள் இருக்க வேண்டும் என்று நினைத்தார். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளிடம் 1945, ஆகஸ்ட் 15 அன்று ஜப்பான் சரணடைந்தது. அந்த நாளை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதியை, சுதந்திர நாளாகத் தேர்ந்தெடுத்தார் மவுன்ட் பேட்டன்.

நள்ளிரவில் சுதந்திரம் ஏன்? - மவுன்ட் பேட்டன் முடிவு செய்த ஆகஸ்ட் 15ஆம் தேதி உகந்த நாளாக இருக்காது என்று இந்திய சோதிடர்களும் சில தலைவர்களும் கருதினார்கள். அதனால், நள்ளிரவு 12 மணியிலிருந்து அடுத்த நாள் தொடங்குவதால் மவுன்ட் பேட்டனுக்கும் சோதிடர்களுக்கும் திருப்தியளிக்கும் வகையில் நள்ளிரவில் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

அகிம்சையின் அடையாளம்: வன்முறை இல்லாத அகிம்சைப் போராட் டத்தை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் காந்தி. அவரது கொள்கை களால் ஈர்க்கப்பட்ட அமெரிக்காவின் மார்டின் லூதர் கிங், தானும் அகிம்சை வழியில் ஆப்ரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளுக்காகப் போராடினார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ டால்ஸ்டாய், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களும் சிந்தனையாளர்களும் இலக்கியவாதிகளும் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். தென்னாப்ரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, டென்மார்க், உகாண்டா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் காந்திக்குச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. 150 நாடுகள் காந்திக்குத் தபால்தலை வெளியிட்டிருக்கின்றன.

இந்தியாவை உருவாக்கியவர்! - சுதந்திரம் பெற்ற பிறகு பூஜ்ஜியத்திலிருந்து ஒரு நாட்டை உருவாக்க வேண்டிய கடமை புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட இந்திய அரசுக்கு இருந்தது. அதற்குப் பொருத்தமான தலைவராக அமைந்தார் ஜவாஹர்லால் நேரு. பள்ளிக் கல்வி, உயர் கல்வி, குழந்தைகள் - பெண்கள் நலன், தொழில் வளர்ச்சி, மருத்துவம், அறிவியல் தொழில்நுட்பம், வேளாண்மை, அண்டை நாடுகளுடன் நட்பு, அயல்நாடுகளுடனான கொள்கை போன்றவற்றை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் மேம்படுத்துவதிலும் நேருவின் தொலைநோக்குப் பார்வை முக்கியக் காரணமாக அமைந்தது. இன்றைய இந்தியாவின் வளர்ச்சி என்பது நேரு போன்ற தலைவர்கள் அன்று போட்ட விதையே காரணம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x