Published : 14 Aug 2024 03:57 PM
Last Updated : 14 Aug 2024 03:57 PM
ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் பல குறுநில மன்னர்கள் போரிட்டபோதே இந்தியச் சுதந்திரப் போராட்டம் தொடங்கி விட்டது.
பெண்களின் வீரம்: சிவகங்கைச் சீமை ராணி வேலுநாச்சியார், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகக் குரல்கொடுத்த முதல் அரசி என அறியப்படுகிறார். இவரைப் போலவே கர்நாடகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்த கிட்டூர் ராணி சென்னம்மா, 1824இல் கிழக்கிந்திய கம்பெனிப் படையைத் தோற்கடித்தார்.
வடக்கில் ஜான்சியின் ராணியான லக் ஷ்மி பாய், ஆண் வாரிசு இல்லாத அரசுகளை ஆங்கிலேயர் அபகரித்துக்கொள்வதை எதிர்த்துப் போரிட்டார். இன்றைய உத்தர பிரதேசத்தின் ஒரு பகுதியைச் சிறுவனான தன் மகன் சார்பில் பேகம் ஹஸ்ரத் மகால் ஆட்சி செய்தார். பிரிட்டிஷ் அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களுக்கு எதிராக ஹஸ்ரத் போரிட்டார். யானை மீதேறி அவர் போரிட்டதாக பிரிட்டிஷ் அரசாங்கக் குறிப்பேடுகள் சொல்கின்றன.
முன்னோடி அரசர்கள்: மருது சகோதரர்கள், பூலித்தேவன், வீரபாண்டியக் கட்டபொம்மன் போன்றோர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தனர். கர்நாடகத்தில் மைசூர் புலி என்றழைக்கப்பட்ட திப்பு சுல்தான், ஆங்கிலேயருக்கு எதிரான நான்காம் மைசூர் போரில் ஈடுபட்டார்.
முதல் சுதந்திரப் போர்: 1857இல் மங்கள் பாண்டே முன்னெடுத்த ‘சிப்பாய் கலக’த்தை முதல் இந்தியச் சுதந்திரப் போர் என்கிறார்கள். ஆனால், அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே வேலூரில் நடைபெற்ற வேலூர்ப் புரட்சியே சுதந்திரத்துக்கான முதல் எழுச்சியாக அறியப்படுகிறது. பிரிட்டிஷ் படைகளில் சிப்பாய்களாக அமர்த்தப்பட்ட இந்தியர்கள் மத்தியில் சீருடைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் சிப்பாய்கள் யாரும் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆடை அணியக் கூடாது எனவும் தாடி மீசையை மழிக்க வேண்டும் எனவும் 1805ஆம் ஆண்டு நவம்பரில் உத்தரவிடப்பட்டது.
பிரிட்டிஷ் அரசின் இந்த அறிவிப்பு வேலூர் கோட்டையில் இருந்த இந்தியச் சிப்பாய்களை ஆத்திரமூட்டியது. கோட்டைக்குள் சிறைவைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் மகனுடைய ஆலோசனையின் பேரில் 1806 ஜூலை 10 அன்று நள்ளிரவில் இந்தியச் சிப்பாய்கள் பிரிட்டிஷ் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
கோட்டையில் பறந்த இங்கிலாந்து கொடியை இறக்கிவிட்டு, திப்பு சுல்தானின் புலிக்கொடியை ஏற்றினர். ஆனால், ஆர்க்காட்டில் இருந்து வந்த படையால் விடிவதற்குள் வேலூர்ப் புரட்சி ஒடுக்கப்பட்டுவிட்டது. இந்திய வீரர்கள் மத்தியில் விடுதலைக் கனலை இந்தப் புரட்சியே தூண்டிவிட்டது.
மிதவாதிகள் - தீவிரவாதிகள்: 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் வலுத்தது. மூத்த தலைவர்களின் தலைமையில் மக்கள் ஒருங்கிணைந்து போராடினர். விடுதலைப் போராட்ட வீரர்கள் அவர்களது கோரிக்கை களையும் செயல்பாடுகளையும் வைத்து மிதவாதிகள், தீவிரவாதிகள் (இன்றைக்கு இந்தச் சொல் பயன்படுத்தப்படும் பொருளே வேறு. அன்றைக்குத் தங்கள் கொள்கையில் மிகத் தீவிரமாக இருந்த தலைவர்களைத் தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டனர்) என இரண்டு பிரிவாகப் பிரிந்து செயல்பட்டனர். ஆனால், அனைவரது நோக்கமும் இந்திய விடுதலை மட்டுமே.
கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, டபிள்யூ.சி. பானர்ஜி, எஸ்.என்.பானர்ஜி, சி.சங்கரன் அய்யர், மதன் மோகன் மாளவியா, ஜி.சுப்பிரமணிய அய்யர் உள்ளிட்ட பலர் மிதவாதிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள். லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பால் உள்ளிட்டோர் தீவிரவாதிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
தனித்துவத் தலைவர்கள்: இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம், கொடியைக் காக்க தன் இன்னுயிரை நீத்த திருப்பூர் குமரன், தேசபக்திப் பாடல்களால் மக்கள் மத்தியில் விடுதலை உணர்வைத் தூண்டிய மகாகவி பாரதியார், மெட்ராஸ் சிறையில் அடைக்கப்பட்ட முதல் சுதந்திரப்போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, இந்திய தேசிய ராணுவத்தை நிறுவிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அதில் பெண்களுக்கான ஜான்சிராணி படைப் பிரிவுக்குத் தலைமை வகித்த கேப்டன் லஷ்மி செகல், ஜெர்மனியில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியாவின் முதல் தேசியக் கொடியை அறிமுகப்படுத்திய பிகாஜி காமா என ஏராளமான தலைவர்கள் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...